மணிபென் பட்டேல்
மணிபென் பட்டேல் | |
---|---|
1947-இல் மணிபென் படேல் | |
பிறப்பு | 3 ஏப்பிரல் 1903 குசராத்து |
இறப்பு | 26 மார்ச்சு 1990 (அகவை 86) |
மணிபென் பட்டேல் (Maniben Patel) (3 ஏப்ரல் 1903 - 1990) இந்திய விடுதலை இயக்க வீராங்கனையும், இந்திய நாடாளுமன்ற மன்ற உறுப்பினரும்,[1] இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் இந்திய அரசின் துணைபிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் மகளும் ஆவார்.[2]
இளமைக் காலம்
[தொகு]மணிபென் பட்டேல் 1903 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி பிரித்தானியாவின் இந்தியாவின் பம்பாய் பிரசிடென்சியில் உள்ள கரமசாத்தில் பிறந்தார். அவரது மாமா விட்டல்பாய் படேலால் வளர்க்கப்பட்டார். தனது ஆரம்பக் கல்வியை பம்பாயில் உள்ள குயின் மேரி உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். பின்னர் 1920 ஆம் ஆண்டு அகமதாபாத்திற்குச் சென்று மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட ராஷ்ட்ரிய வித்யாபீடப் பல்கலைக்கழகத்தில் பயின்று 1925 இல் பட்டம் பெற்றார். அதன் பின் அவரது தந்தை வல்லபாய் பட்டேலுக்கு உதவியாய் இருந்தார்.[3]
போர்சத் இயக்கம்
[தொகு]1923-24 ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரசாங்கம் சாதாரண மக்கள் மீது அதிக வரிகளை விதித்தது. வரி செலுத்த மறுத்தவர்களின் கால்நடைகள், நிலம் மற்றும் சொத்துக்களை வரிக்கு ஈடாக ஆங்கிலேயர் பறிமுதல் செய்யத் தொடங்கினர். இந்த அடக்குமுறைக்கு எதிராக காந்தி மற்றும் சர்தார் படேல் தலைமையிலான பிரச்சாரத்தில் சேரவும் மற்றும் வரி-இல்லை இயக்கத்தை ஆதரிக்கவும் மணிபென் பெண்களை தூண்டினார்.[3]
பர்தோலி சத்தியாகிரகம்
[தொகு]1928 இல் பர்தோலி விவசாயிகளுக்கு ஆங்கிலேய அதிகாரிகளால் அதிகப்படியான வரி விதிக்கப்பட்டது. மேலும் அவர்கள் போர்சாத்தில் சாதாரண மக்கள் சந்தித்த அதே துன்புறுத்தலைச் சந்தித்தனர். மகாத்மா காந்தி சர்தார் வல்லபாய் படேலை பர்தோலி சத்தியாக்கிரகத்திற்கு தலைமை தாங்கும்படி கட்டளையிட்டார். இச்சத்தியாகிரக இயக்கத்தில் பெண்கள் சேர தயங்கினார்கள். மணிபென் படேல், மிதுபென் பெட்டிட் மற்றும் பக்திபா தேசாய் ஆகியோர் பெண்களை ஊக்கப்படுத்தினார். போராட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் அரசால் அபகரிக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட குடிசைகளில் தங்கினர்.[3]
ராஜ்கோட் சத்தியாகிரகம்
[தொகு]1938 இல், ராஜ்கோட் மாநிலத்தின் திவானின் அநீதியான ஆட்சிக்கு எதிராக ஒரு சத்தியாகிரகம் திட்டமிடப்பட்டது. கஸ்தூரிபா காந்தியின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதிலும் சத்தியாகிரகத்தில் சேர ஆர்வமாக இருந்தார். எனவே மணிபென் படேலும் அவருடன் சென்றார். ஆனால் ஆங்கிலேய அரசு இவர்கள் இருவரையும் தனியாகப் பிரிக்க உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்திரவிற்கு உத்தரவுக்கு எதிராக மணிபென் பட்டேல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அதிகாரிகள் அவரை கஸ்தூரிபா காந்தியுடன் மீண்டும் இணைவதற்கு அனுமதித்தனர். மகாத்மா காந்தியின் ஈர்ப்பால் அகமதாபாத்தில் செயல்பட்ட சபர்மதி ஆசிரமத்தில் தொண்டு செய்தவர்.[3]
ஒத்துழையாமை இயக்கம்
[தொகு]ஒத்துழையாமை இயக்கம் மற்றும் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று மணிபென் பட்டேல் நீண்ட காலம் சிறையில் இருந்தார். 1930 களில் அவரது தந்தையின் உதவியாளரானார். பின்னர் அவருடைய தனிப்பட்ட தேவைகளையும் கவனித்துக் கொண்டார். இருப்பினும், மணிபென் படேல் இந்தியாவின் விடுதலைக்காகவும், அதனால் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் ஈடுபட்டதால் ஆங்கிலேயரால் மீண்டும் 1942 முதல் 1945 வரை எர்வாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மணிபென் படேல் 1950 இல் அவரது தந்தை இறக்கும் வரை அவருடன் நெருக்கமாக பணியாற்றினார். மும்பைக்கு குடிபெயர்ந்த பிறகு, அவர் தனது வாழ்நாள் முழுவதும் பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் சர்தார் படேல் நினைவு அறக்கட்டளையில் பணியாற்றினார். இந்திய சுதந்திரத்திற்குப் பின் வந்த ஆண்டுகளில் தனது தந்தையின் வாழ்க்கையைப் பற்றிய புத்தகத்தினை எழுதினார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]- 1952: பொதுத் தேர்தலில் தெற்கு கைரா (அ.கே. கேடா) மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வெற்றி பெற்றார்.
- 1957 : காங்கிரஸ் வேட்பாளர் அமீன் தாதுபாய் முல்ஜியைத் தோற்கடித்ததால், பொதுத் தேர்தலில் ஆனந்த் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.[4]
- 1962 : ஆனந்த் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஸ்வதந்த்ரா கட்சியின் நரேந்திரசிங் ரஞ்சித்சிங் மஹிதாவிடம் தோல்வியடைந்தார்.[5]
- 1964 முதல் 1970 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
- 1973 : சபர்கந்தா இடைத்தேர்தலில் காங்கிரஸ் (O) வேட்பாளராக வெற்றி பெற்று மக்களவையில் நுழைந்தார். இதில் காங்கிரஸின் சாந்துபாய் படேலை தோற்கடித்தார்.[6]
- 1977 : பொதுத் தேர்தலில் மெஹ்சானா மக்களவைத் தொகுதியில் ஜனதா கட்சி வேட்பாளராக நட்வர்லால் அம்ரத்லால் படேலை தோற்கடித்தார்.[7]
கொள்கைகள்
[தொகு]மணிபென் மற்றும் வரது தந்தை வல்லபாய் பட்டேலும் எப்பொழுதும் மணிபென்னால் நூற்கப்பட்ட காதி இழைகளிலிருந்து நெய்யப்பட்டதை அணிந்தனர். பயணங்களில் எப்போதும் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்தனார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Joginder Kumar Chopra (1993). Women in the Indian parliament: a critical study of their role. Mittal Publications. p. 174. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-513-5.
- ↑ https://www.dailypioneer.com/2014/sunday-edition/patel-the-father.html
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 Sushila Nayar; Kamla Mankekar, eds. (2003). Women Pioneers In India's Renaissance. National Book Trust, India. p. 469. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-237-3766 1.
- ↑ "Statistical Report General Election Archive, 1957 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 9 November 2020.
- ↑ "Statistical Report General Election Archive, 1962 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 9 November 2020.
- ↑ "The political dynasty nobody is talking about: Sardar Patel's". 31 October 2018.
- ↑ "Statistical Report General Election Archive, 1973 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 9 November 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]