ராஷ் பிஹாரி போஸ்
ராஷ் பிஹாரி போஸ் | |
---|---|
பிறப்பு | 25 May 1886 பர்துவான் மாவட்டம்., மேற்கு வங்காளம், இந்தியா |
இறப்பு | 21 சனவரி 1945 டோக்கியோ, ஜப்பான் | (அகவை 58)
அரசியல் இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம், கதர் கட்சி, இந்திய தேசிய இராணுவம் |
சமயம் | இந்து |
ராஷ் பிஹாரி போஸ் (Rashbehari Bose,Bengali: রাসবিহারী বসু Rashbihari Boshu:மே 25, 1886 – ஜனவரி 21, 1945) பிரித்தானிய அரசுக்கு எதிராகப் புரட்சி செய்த இந்தியர். இந்திய விடுதலைப் போராட்ட வீரர். வெளிநாட்டில் வாழ்ந்த இந்தியர்கள் இந்திய விடுதலைக்கு உதவும் பொருட்டு தொடங்கிய கதர் கட்சியின் அமைப்பாளர்களில் ஒருவர். இந்திய தேசியப் படையை நிறுவியவர். ஆசாத் இந்து அரசு அமைத்து போர்ப்படை நடத்திய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முன்னோடியாவார்
இளமை
[தொகு]ராஷ் பிகாரி போசு 25.05.1886-ல் மேற்கு வங்காளம், பர்த்வான் மாவட்டத்தில், சுபல்தகா கிராமத்தில், அரசு ஊழியர் வினோத் பிகாரி போசின் மகனாகப் பிறந்தார் சந்தன் நகரில் தனது கல்வியை முடித்த ராஷ், இளமையிலேயே புரட்சி இயக்கத்தினருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். வங்கத்தின் புரட்சி இயல்புக்கேற்ப, ராஷ் பிகாரி போசும் விடுதலைப் போரில் ரகசியமாக இணைந்தார். அரவிந்தர் உள்ளிட்ட புரட்சி இயக்கத்தினருடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.
குதிராம் போஸ் என்ற புரட்சியாளர் நடத்திய குண்டுவீச்சால் கிங்க்ஸ்போர்ட் என்ற ஆங்கிலேய அதிகாரியின் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, அலிப்பூர் சதி வழக்கு (1908) தொடரப்பட்டது. அதில் அரவிந்தர் கைது செய்யப்பட்டார். ராஷ் பிகாரி போசும் அந்த வழக்கில் தேடப்பட்டார். அதிலிருந்து தப்ப வங்கத்தை விட்டு வெளியேறிய ராஷ், டேராடூனில் வனவியல் ஆய்வு மையத்தில் தலைமை எழுத்தராகச் சேர்ந்து பணி புரிந்தார்.
புரட்சி நடவடிக்கைகள்
[தொகு]25.12.1912-ல் டில்லியில் அன்றைய வைசிராய் ஹார்டிங் பிரபுவின் பதவியேற்பு விழாவை ஒட்டி நிகழ்ந்த அணிவகுப்பில், யானை மீது அம்பாரியில் அமர்ந்து வந்த வைசிராய் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. அதில் அவர் தப்பினார்; யானையின் மாவுத்தன் கொல்லப்பட்டார். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக வசந்த் குமார் பிஸ்வாஸ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், குண்டுவீச்சுக்கு மூலகாரணமான புரட்சியாளரைத் தேடியவண்ணம் இருந்தனர். ராஷ் பிகாரி போஸ்தான் இந்த கொலை முயற்சியின் மூலகாரணமாக இருந்தார் என்பதை பிரித்தானியர் அறிய மூன்றாண்டுகள் ஆயின. டில்லியில் குண்டுவீச்சுக்கு காரணமாக இருந்துவிட்டு, இரவு ரயிலிலேயே டேராடூன் திரும்பிய ராஷ், எதுவும் அறியாதவர் போல மறுநாள் பணியில் ஈடுபட்டார். மேலும் வைசிராய் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சுக்கு கண்டனம் தெரிவித்து அங்கு அவர் கூட்டமும் நடத்தினார்.[1] குண்டுவீச்சில் கைதானவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. ஆனால், தில்லி சதி வழக்கு என்று குறிப்பிடப்படும் அவ்வழக்கின் முதன்மைக் குற்றவாளியான ராஷ் பிஹாரி போஸை அவரது ஆயுள் மட்டும் பிரிட்டீஷ் போலீசாரால் கைதுசெய்ய முடியவில்லை.
புரட்சியாளர் அமரேந்திர சட்டர்ஜியுடன் ஏற்பட்ட நட்பின் விளைவாக யுகாந்தர்(ஜுகாந்தர்) புரட்சி இயக்கத்தின் குழு உறுப்பினர் ஆனார். 1913- ல் யுகாந்தர் இயக்கத்தின் தலைவர் ஜதிந்திர முகர்ஜியுடன் ராஷுக்கு நேரடித் தொடர்பு ஏற்பட்டது. அவரது தலைமைப் பண்பை உணர்ந்த ஜதிந்திர முகர்ஜி, அவருக்கு மேலும் பொறுப்புகளை அளித்து அவரைப் பயிற்றுவித்தார்.
1914 முதல் 1918 வரை முதல் உலகப் போர் நடைபெற்றது. அதனைப் பயன்படுத்தி, இந்தியாவிலிருந்து ஆங்கிலேயரை விரட்ட புரட்சியாளர்கள் திட்டம் தீட்டினர். ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட கடல் கடந்த நாடுகளில் இருந்த தீவிர வலதுசாரிகளின் ஆதரவுடனும், அமெரிக்காவில் இயங்கிய கதர் கட்சி உதவியுடனும், இந்தியாவிலிருந்த ஆங்கிலேயப் படைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டம் வகுக்கப்பட்டது. இத் திட்டத்தின் மூளையாக ராஷ் செயல்பட்டார்.
ஆனால், ரகசிய ஒற்றர்கள் உதவியுடன் கதர் புரட்சியை கண்டுகொண்ட ஆங்கிலேய அரசு, புரட்சிக்கு முன்னதாகவே கடும் நடவடிக்கை எடுத்து, ஊடுருவலை நசுக்கியது. நாடு முழுவதும் புரட்சியாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். கடல் கடந்தும் அதன் தாக்கம் இருந்தது. சில இடங்களில் புரட்சியாளர்களின் கலகம் நடந்தாலும், ஆங்கிலேய அரசு பல இடங்களில் கொடூரமான நடவடிக்கைகளால் புரட்சியை அழித்தொழித்தது. இதில் ஈடுபட்ட பல முன்னணி தலைவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றனர். ராஷ் பிஹாரி போஸும் ஜப்பானுக்கு தப்பினார்.
ஜப்பான் வாழ்க்கை
[தொகு]ஜப்பான் சென்ற ராஷ் அங்கு அரசியல் அடைக்கலம் பெற்றார். ஜப்பானிலிருந்து ராஷை நாடு கடத்துமாறு பிரித்தானியா ஜப்பான் அரசை வலியுறுத்தி வந்தது. எனவே வெவ்வேறு பெயர்களில் அங்கு அவர் அலைந்து திரிந்தார். அப்போது , ஜப்பானில் செயல்பட்ட ஆசிய வலதுசாரி (பான் ஆசியன்) தீவிரவாதிகளுடன் ராஷுக்கு தொடர்பு ஏற்பட்டது. அவர்களுள் ஒருவரான சொமோ ஐசோ என்பவரது மகளைத் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு (1923) ஜப்பானின் குடியுரிமையாளராக மாறிய ராஷ், பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் பணிபுரிந்து வந்தார்.
குடும்ப வாழ்வில் ஈடுபட்டபோதும், ராஷ் பிகாரி போசின் புரட்சி எண்ணம் கனன்றுகொண்டே இருந்தது. ஜப்பானில் இருந்த மற்றொரு விடுதலைவீரரான ஐயப்பன் பிள்ளை மாதவன் நாயருடன் இணைந்து, ஜப்பான் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டார். இந்திய விடுதலை வீரர்களுக்கு ஜப்பானின் கடல்கடந்த ஆதரவு கிடைக்கச் செய்தார்.
இந்திய சுதந்திர லீக்
[தொகு]மலாயா மற்றும் தாய்லாந்தில் இருந்த இந்திய பொதுமக்களின் பிரதிநிதிகளும், இந்தியப் படை அதிகாரிகளும் ஜப்பானியத் தலைமையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக டோக்கியோவில் ஒரு மாநாடு நடத்தினர் 1942 மார்ச் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை இம்மாநாடு நடந்தது. இந்தியா விடுதலைப் போராட்டத்திற்கு கடல்கடந்த ஆதரவு அளிப்பதாக ராஷ் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக ‘இந்திய சுதந்திர லீக்’ என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
மாநாட்டின் தீர்மானங்கள்
[தொகு]- தூரக்கிழக்கு நாடுகளில் 20 லட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். அவர்களது நலனைப் பேணிப் பாதுகாக்க, இந்திய சுதந்திர லீகை வலுப்படுத்த வேண்டும்.
- அந்த அமைப்பின் ஒட்டுமொத்தக் கண்காணிப்பில், இந்தியப் போர்க் கைதிகளை முக்கியமாகக் கொண்ட இந்திய தேசியப் படையை அமைக்க வேண்டும்.
- அதனை வலுப்படுத்தி, அதற்கு ஓர் உயர்வைக் கொடுப்பதற்காக, சுபாஷ் சந்திர போஸை ஐரோப்பாவிலிருந்து வரவழைத்து அதற்குத் தலைமை தாங்கச் செய்ய வேண்டும்.
- ஒருங்கிணைத்துச் செயல்படுவதற்காக பாங்காக்கில் ஒரு மாநாட்டைக் கூட்ட வேண்டும். இதில் தூரக்கிழக்கு நாடுகளில் உள்ள எல்லா இந்தியர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும். அயல்நாட்டிலிருந்து தொடங்கும் இந்திய சுதந்திரப் போரால் இந்தியாவில் உணர்வுகள் கொழுந்து விட்டெரிய வேண்டும் மியான்மரிலிருந்து வெகு விரைவில் இந்தியாவைத் தாக்கிக் கைப்பற்றிக்கொள்ள வேண்டும்.
- அனைத்துச் செயல்பாடுகளும் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்களின் விருப்பப்படியும் திட்டப்படியுமே நடக்க வேண்டும்.
பாங்காக் மாநாடு
[தொகு]1942, ஜூன் 22 ல் பாங்காக்கில் இரண்டாவது மாநாட்டை ராஷ் கூட்டினார். மலேயா, சிங்கப்பூர், பர்மா, ஜாவா, போர்னியோ, மணிலா, தாய்லாந்து, ஹாங்காங், ஷாங்காய், மஞ்சூரியா மற்றும் பிரெஞ்ச் இந்தோசீனாவிலிருந்து மொத்தம் 150க்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். ராஷ் பிகாரிபோஸ் தலைமை வகித்தார். இம்மாநாட்டில் காங்கிரசிலிருந்து வெளியேறி புரட்சி வீரராக உருவான சுபாஷ் சந்திர போசுக்கு, ராஷ் பிகாரிபோஸ் அறைகூவல் விடுத்தார். போரினால் மட்டுமே இந்தியாவுக்கு விடுதலை சாத்தியமாகும்; அதற்கான போர்ப்படைக்குத் தலைமை தாங்க நேதாஜி முன்வர வேண்டும் என்று வரவேற்று, அம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினார்.
இந்திய தேசிய இராணுவம்
[தொகு]இந்திய போர்க்கைதிகள் பல்லாயிரம் பேர் பர்மாவிலும் மலேயாவிலும் ஜப்பான் படையால் கைது செய்யப்பட்டிருந்தனர். ஜப்பான் ராணுவ அதிகாரிகளை அணுகிய ராஷ், தனது முயற்சியால் இந்திய வீரர்களை விடுவிக்கச் செய்தார். அந்த வீரர்களைக் கொண்டு, இந்திய தேசிய ராணுவத்தை (INA) மோகன் சிங் என்ற தளபதியின் தலைமையில் 1942, செப்டம்பர் 1-ல் அமைத்தார் ராஷ். இதுவே முதல் இந்திய தேசிய இராணுவம் என்று அழைக்கப்படுகிறது. இந்திய தேசிய ராணுவம் மூன்று பிரிவுகளைக் கொண்டிருந்தது. படைப் பிரிவுகளுக்கு காந்தி, நேரு ஆசாத் பெயர்கள் சூட்டப்பட்டன. ஜப்பான் படையின் உதவியுடன், இந்திய சுதந்திர லீகின் படையாக அது அமைந்தது. ஆனால், ராஷுடன் செய்துகொண்ட உடன்பாட்டின்படி ஜப்பான் படை நடந்துகொள்ளவில்லை. தங்களை மீறி INA செயல்படுவதாகக் கருதிய அவர்கள் அதனைக் கலைக்கச் செய்தனர். ஆயினும் INA வீரர்கள் கட்டுக் குலையாமல் இருந்தனர்.
இந்திய அரசின் வீட்டு சிறைவாசத்திலிருந்து தப்பிய சுபாஷ் சந்திர போஸ் ஜப்பானுக்கு சென்றபோது, அவரை ராஷ் வரவேற்று, இந்திய சுதந்திர லீகின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு கூறினார். ‘ஆசாத்’(விடுதலை) என்ற கொடியையும் அவர் அறிமுகம் செய்தார். அதன்பிறகு ஜப்பான் அதிகாரிகளுடன் பேசிய நேதாஜி, முடக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தை மீண்டும் கட்டமைத்தார். ராஷ், மோகன் சிங் உள்ளிட்டவர்கள் அதன் துடிப்புள்ள இயக்கத்திற்கு காரணமாயினர். இரண்டாம் உலகப்போர் நடந்தபோது, ஜப்பான் வீழ்ச்சி அடையவே, இந்திய விடுதலைக் கனவு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு தள்ளிப்போனது. இப்போரில் நேதாஜி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இறுதிக்காலம்
[தொகு]ராஷ் பிகாரி போஸும் 21.01.1945 ல் போரில் கொல்லப்பட்டார். ஜப்பான் அரசு ராஷ் பிகாரி போசின் வீரத்தை மெச்சி, அவருக்கு மறைவுக்குப் பிந்தைய 'ORDER OF RISING SUN ' என்ற உயர் விருதை வழங்கிச் சிறப்பித்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஹார்டிங் பிரபு எழுதிய 'MY INDIAN YEARS' என்ற நூல்,பக்கம்119
உசாத்துணை
[தொகு]- பொதுவகத்தில் ராஷ் பிஹாரி போஸ் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.