உள்ளடக்கத்துக்குச் செல்

பாதயாத்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாதயாத்திரை (Padayatra, சமக்கிருதம்: पादयात्रा ) என்பது அரசியல்வாதிகள் அல்லது முக்கிய பிரமுகர்கள் சமூகத்தின் பல்வேறு பகுதியினருடன் மிகவும் நெருக்கமாகப் பழகுவதற்கும், அவர்களின் பிரச்சனைகளைப் பற்றி அறிவதற்கும், தங்களுடைய ஆதரவாளர்களை ஊக்கப்படுத்துவதற்கும் மேற்கொள்ளும் பயணமாகும். பாதயாத்திரை என்பது இந்து சமய யாத்திரைகளாகவும் புனித கோயில்கள் அல்லது யாத்திரை தலங்களை நோக்கிய நடைபயணமாகவும் மேற்கொள்ளப்படுகின்றது. [1]

சமூக காரணங்கள்

[தொகு]
காந்தியின் உப்புச் சத்தியாகிரகம், 1930

காந்தியடிகள் 1930இல் தண்டிக்கு தனது புகழ்பெற்ற உப்புச் சத்தியாக்கிரகத்துக்காக பாதயாத்திரை மேற்கொண்டார். 1933-34 குளிர்காலத்தில், காந்தி தீண்டாமைக்கு எதிராக நாடு தழுவிய பாதயாத்திரை மேற்கொண்டார்.[2] பின்னர், காந்தியவாதி வினோபா பாவே 1951 இல் தனது பூமிதான இயக்கத்தின் ஒரு பகுதியாக பாதயாத்திரையைத் தொடங்கினார். தெலங்காணா பகுதியில் தொடங்கி, வினோபா பாவே தனது பாதயாத்திரையை புத்தகயையில் முடித்தார்.[3] 1983 சனவரி 6 அன்று, சந்திரசேகர் கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரையைத் தொடங்கினார். மக்களுக்கு உள்ள பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதற்காக 1983 சூன் 25 வரை தனது 4,260 கிலோமீட்டர் (2,650 மைல்) பயணத்தை தில்லியில் உள்ள ராஜ்காட் வரை தொடர்ந்தார்.[4]

புத்தன் வீட்டில் இராசகோபால், ஜனதேசம் 2007 என்னும் பரப்புரையில், குவாலியரில் இருந்து தில்லி வரை 28 நாள் நடைப்பயணத்தில் 25,000 நிலமற்ற விவசாயிகளை வழிநடத்தினார். [5] 1986 ஆம் ஆண்டில், ரமோன் மக்சேசே விருது பெற்ற ராஜேந்திர சிங் இராசத்தானின் சிற்றூர்கள் வழியாக பாதயாத்திரையைத் தொடங்கினார். அதில் குளங்கள், தடுப்பு அணைகளின் கட்டுமானம் மற்றும் புத்துயிர்ப்பு ஆகியவற்றை ஊக்குவித்தார். [6]

அரசியல் நோக்கம்

[தொகு]

ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி 1,475 கிமீ (917 மைல்) தொலைவை மூன்று மாத கால பாதயாத்திரையில் கடந்தார். அதில் ஆந்திரப் பிரதேசத்தின் பல மாவட்ட மக்களைச் சந்தித்தார். 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தெலுங்கானாவையும் உள்ளடக்கிய ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக அவர் தனது கட்சியை வெற்றிப் பாதைக்கு வழிநடத்தினார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தனது தந்தையின் சமாதியில் அஞ்சலி செலுத்திய பின்னர் தனது சொந்த மாவட்டமான கடப்பா மாவட்டத்தில் உள்ள ஆர். கே பள்ளத்தாக்கில் ' பிரஜா சங்கல்ப யாத்திரை ' என்ற பெயரில் தனது பாதயாத்திரையை தொடங்கினார். 430 நாட்களில் மாநிலத்தின் 13 மாவட்டங்களில், 125 சட்டமன்றத் தொகுதிகளில் நடந்த பாத யாத்திரையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசு கட்சியால் "ராவளி ஜெகன், காவலி ஜகன்" (ஜெகன் வர வேண்டும். ஜெகன் வேண்டும்) என்ற முழக்கம் உருவாக்கபட்டது. இந்த யாத்திரை 2017. நவம்பர். 6 அன்று தொடங்கப்பட்டு 2019 சனவரி 9 அன்று நிறைவடைந்தது.[சான்று தேவை]

இந்திய தேசிய காங்கிரசு, இராகுல் காந்தியின் தலைமையில், இந்திய ஒற்றுமைப் பயணம் என்ற பாதயாத்திரையை 2022 செப்டம்பர் 7 அன்று இந்திய தீபகற்பத்தின் தென் முனையான கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த பாத யாத்திரை ஐந்து மாதங்களில் சுமார் 3,570 கி.மீ. தொலைவுக்கு 12 மாநிலங்கள், இரண்டு ஒன்றிய ஆட்சிப் பகுதிகள் வழியாய் நடந்து காசுமீரில் முடிவடைந்தது. [7]

சமய வழிபாட்டில்

[தொகு]

தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் பழனி முருகன் கோவில் போன்ற முருகன் கோயில்களுக்கு தைப்பூசத்துக்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து பாதயாத்திரை போகும் பழக்கம் உள்ளது.[8] [9] அதேபோல இலங்கையிலும் கதிர்காமம் போன்ற முருகன் கோயில்களுக்கு பாதயாத்திரையாக செல்லும் வழக்கம் உள்ளது.[10]

மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த வர்க்காரிகள் தேஹு, ஆளந்தி, பண்டரிபுரம் போன்ற சமய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு நடந்து செல்கின்றனர். சயன ஏகாதசி, பிரபோதினி ஏகாதசி, மாகி ஏகாதசி, சித்திரை ஏகாதசி போன்ற சிறப்பு நாட்களில் விட்டலனை வழிபடுவதற்காக யாத்ரீகர்கள் பண்டரிபுரத்தை அடைய பாதயாத்திரையாக செல்கின்றனர்.

குறிப்புகள்

[தொகு]
  1. History of Padyatra பரணிடப்பட்டது 2012-07-18 at the வந்தவழி இயந்திரம்
  2. Ramachandra Guha. "Where Gandhi Meets Ambedkar" இம் மூலத்தில் இருந்து 2012-07-11 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120711203119/http://articles.timesofindia.indiatimes.com/2005-11-08/edit-page/27860607_1_untouchability-padayatra-hindu. 
  3. David R. Syiemlieh (2005). Reflections From Shillong: Speeches Of M.M. Jacob. Daya Books. p. 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8189233297. பார்க்கப்பட்ட நாள் 9 May 2014.
  4. Manisha (2010). Profiles of Indian Prime Ministers. Mittal Publications. pp. xxi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8170999768. பார்க்கப்பட்ட நாள் 9 May 2014.
  5. Laxmi Prasanna (Jul 28, 2017). "Activist PV Rajagopal to constitute taskforce in Kerala to ensure land for landless | Thiruvananthapuram News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-28.
  6. "The water man of Rajasthan". Frontline, Volume 18 - Issue 17. Aug 18–31, 2001.
  7. "Discovery of Congress: On Bharat Jodo Yatra". The Hindu. 8 September 2022. https://www.thehindu.com/opinion/editorial/discovery-of-congress-the-hindu-editorial-on-bharat-jodo-yatra/article65866600.ece. 
  8. "வெற்றிவேல் முருகனுக்கு... 10: நகரத்தார் ஏற்படுத்திய பழநி பாதயாத்திரை". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-23.
  9. வ, தமிழரசன் ப. ""கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு!" - பழநி பாதயாத்திரை பக்தர்". https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2023-02-23. {{cite web}}: External link in |website= (help)
  10. இலங்கை: கதிர்காமம் முருகன் கோயில் பக்தர்கள் மீது தாக்குதல் ஒன்இந்தியா 21. சூன். 2011