உள்ளடக்கத்துக்குச் செல்

ஹன்னிபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹன்னிபால்
ஹன்னிபாலைச் சித்தரிக்கும் ஒரு பளிங்கு மார்பளவுச் சிலை, இத்தாலியின் பண்டைய நகர அரசான கபுவாவில் கண்டெடுக்கப்பட்டது
சுதேசியப் பெயர்
𐤇𐤍𐤁𐤏𐤋
பிறப்புகி. மு. 247
கார்த்திஜ், பண்டைய கார்த்தேஜ் (தற்கால தூனிசியா)
இறப்புகி. மு. 183 – கி. மு. 181 (அகவை 64–66)
லிபிச்சா, பித்தினியா (தற்கால கெப்சே, துருக்கி)
சார்பு
தரம்கார்த்தேஜினிய இராணுவத்தின் தலைவர்
போர்கள்
  • இசுப்பானியா மீதான பார்சித் படையெடுப்பு
சகுந்தும் முற்றுகை
இரண்டாம் பியூனிக் போர்
உரோன் கடப்பு யுத்தம்
திசினுசு யுத்தம்
திரேபியா யுத்தம்
திரசிமீன் ஏரி யுத்தம்
ஏசர் பலேர்னுசு யுத்தம்
செரோனியம் யுத்தம்
கன்னே யுத்தம்
நோலா யுத்தம் (கி. மு. 216)
நோலா யுத்தம் (கி. மு. 215)
நோலா யுத்தம் (கி. மு. 214)
தரேந்தும் யுத்தம் (கி. மு. 212)
கபுவா யுத்தம்
எர்தோனியா யுத்தம் (கி. மு. 212)
நுமிசிதிரோ யுத்தம்
கனுசியம் யுத்தம்
தரேந்தும் யுத்தம் (கி. மு. 209)
குருமேந்தும் யுத்தம்
குரோதோனா யுத்தம்
சமா யுத்தம்
  • உரோமானிய–செலூக்கியப் போர்
ஐரிமெதோன் யுத்தம் (கி. மு. 190)
  • பெர்கமீன்-பித்னியப் போர்
துணை(கள்)இமில்சே
பிள்ளைகள்ஒரு வேளை ஒரு மகன் இருந்திருக்கலாம்
உறவினர்கமில்கர் பார்கா (தந்தை)
கசுதுருபால் (சகோதரர்)
மாகோ (சகோதரர்)
வெளிரிய கசுதுருபால் (மைத்துனர்)
வேறு செயற்பாடுகள்அரசியல்வாதி

ஹன்னிபால் என்பவர் ஒரு கார்த்தேஜினியத் தளபதி மற்றும் அரசியல் மேதை ஆவார். இவர் இரண்டாம் பியூனிக் போரின் போது உரோமைக் குடியரசுக்கு எதிரான யுத்தத்தில் கார்த்தேஜின் படைகளுக்குத் தலைமை தாங்கினார். வரலாற்றின் மிகச் சிறந்த இராணுவத் தலைவர்களில் ஒருவராகப் பெரும்பாலானவர்களால் கருதப்படுகிறார்.

ஹன்னிபாலின் தந்தையான கமில்கர் பார்கா முதல் பியூனிக் போரின் போது ஒரு முன்னணிக் கார்த்தேஜினியத் தளபதியாக இருந்தார். இவரது தம்பிகள் மகோ மற்றும் கசுதுருபால் ஆகியோர் ஆவர். இவரது மைத்துனர் வெளிரிய கசுதுருபால் என்று அழைக்கப்படுகிறார். அவரும் கார்த்தேஜினிய இராணுவங்களுக்குத் தளபதியாக இருந்துள்ளார். நடு நிலக் கடல் வடிநிலப் பகுதியில் ஒரு மிகுந்த பதற்றமான காலத்தின்போது ஹன்னிபால் வாழ்ந்தார். முதலாம் பியூனிக் போரில் கார்த்தேஜைத் தோற்கடித்த பிறகு உரோமைக் குடியரசானது பெரிய சக்தியாக உருவாகியதனால் இந்தப் பதற்றம் ஏற்பட்டது. இழந்த பகுதிகளை மீட்க வேண்டும் என்ற எண்ணம் கார்த்தேஜில் இருந்தது. இது ஹன்னிபால் தனது தந்தையிடம் "என்றுமே உரோமின் நண்பனாக இருக்க மாட்டேன்" என்று செய்து கொடுத்த சத்தியத்தால் அடையாளப்படுத்தப்படுகிறது.[1]

பொ. ஊ. மு. 218இல் ஹன்னிபால் இசுப்பானியாவில் இருந்த உரோமின் ஒரு கூட்டாளி நாடான சகுந்துமைத் (நவீன கால சகுந்தோ, எசுப்பானியா) தாக்கினார். இரண்டாம் பியூனிக் போர் ஏற்பட இது காரணம் ஆனது. வட ஆப்பிரிக்கப் போர் யானைகளுடன் ஆல்ப்சு மலைகளைக் கடந்து இத்தாலி மீது ஹன்னிபால் படையெடுத்தார். ஒரு கார்த்தேஜினிய மற்றும் பகுதியளவு கெல்ட்டிய இராணுவத்தின் தலைவராக இத்தாலியில் இவர் இருந்த முதல் சில ஆண்டுகளில் திசினசு, திரேபியா, திராசிமின் ஏரி, மற்றும் கன்னே யுத்தங்களில் இவர் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றார். உரோமானியர்களுக்குக் கடுமையான சேதத்தை விளைவித்தார். தன்னுடைய மற்றும் தன் எதிரிகளின் முறையே பலம் மற்றும் பலவீனத்தைக் கண்டறியும் திறனுக்காக இவர் மதிக்கப்படுகிறார். அதை வைத்து யுத்த திட்டங்களை இவர் திட்டமிடுவார். முன்னர் உரோமுடன் கூட்டணி வைத்திருந்த பல்வேறு இத்தாலிய நகரங்களை வெல்லவும், அந்நகரங்களுடன் கூட்டணி வைப்பதற்கும் இவரது நன்றாகத் திட்டமிடப்பட்ட உத்திகள் இவருக்கு அனுமதியளித்தன. ஹன்னிபால் பெரும்பாலான தெற்கு இத்தாலியை 15 ஆண்டுகளுக்கு ஆக்கிரமித்திருந்தார். பாபியசு மேக்சிமசால் தலைமை தாங்கப்பட்ட உரோமானியர்கள் இவருடன் நேரடியாக சண்டையிடுவதைத் தவிர்த்தனர். மாறாக உராய்வுப் போரை (பாபியன் உத்தி) நடத்தினர். இசுப்பானியாவில் கார்த்தேஜினியத் தோல்விகள் ஹன்னிபாலுக்கு வலுவூட்டல் படைகள் வருவதைத் தடுத்தன. இவரால் ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெற இயலவில்லை. வட ஆப்பிரிக்கா மீதான உரோமானியத் தளபதி சிபியோ ஆப்பிரிக்கானசால் தலைமை தாங்கப்பட்ட ஒரு பதில் படையெடுப்பால் இவர் கார்த்தேஜுக்குத் திரும்பி வரும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஹன்னிபால் இறுதியாக சமா யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டார். ஓர் உரோமானிய வெற்றியில் இப்போரானது முடிந்தது.

போருக்குப் பிறகு ஹன்னிபால் வெற்றிகரமாக சுபெத் (சமூகத்தின் மூத்த தலைவர்) பதவிக்குப் போட்டியிட்டார். உரோமால் தீர்ப்பளிக்கப்பட்ட போர் இழப்பீட்டை செலுத்த அரசியல் மற்றும் நிதிச் சீர்திருத்ததங்களை இவர் கொண்டு வந்தார். இந்த சீர்திருத்தங்கள் கார்த்தேஜினிய உயர்குடி உறுப்பினர்கள் மற்றும் உரோமில் பிரபலமற்றதாக இருந்தது. பிறகு இவர் தப்பித்து நாடு கடந்து வாழ ஆரம்பித்தார். இந்நேரத்தில் இவர் செலூக்கிய அரசவையில் வாழ்ந்தார். உரோமுக்கு எதிரான மூன்றாம் அந்தியோகசின் போரில் இவர் இராணுவ ஆலோசகராகச் செயல்பட்டார். மெக்னீசியா போரில் அந்தியோகசு தோல்வியடைந்தார். உரோமின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு அந்தியோகசு தள்ளப்பட்டார். ஹன்னிபால் மீண்டும் தப்பித்து ஓடினார். ஆர்மீனிய இராச்சியத்தில் நின்றார். இவரது ஓட்டம் பித்தினியா அரசவையில் நின்றது. இவர் உரோமானியர்களிடம் காட்டிக் கொடுக்கப்பட்டார். நஞ்சுண்டதன் மூலம் தற்கொலை செய்து கொண்டார்.

பேரரசர் அலெக்சாந்தர், சைரசு, யூலியசு சீசர், சிபியோ ஆப்பிரிக்கானசு, மற்றும் பிர்ரசு ஆகியோருடன் பண்டைக் கால மேற்குலகத்தில் மிகச் சிறந்த இராணுவ உத்தியாளர்கள் மற்றும் தளபதிகளில் ஒருவராக ஹன்னிபால் கருதப்படுகிறார். புளூட்டாக்கின் கூற்றுப் படி, "வரலாற்றின் மிகச் சிறந்த தளபதி யார்?" என்று சிபியோ ஹன்னிபாலைக் கேட்டார். "அலெக்சாந்தர் அல்லது பிர்ரசு, பிறகு நான்" என்று ஹன்னிபால் இதற்குப் பதிலளித்தார்.[1]

பெயர்

[தொகு]
இளம் ஹன்னிபால் (இடது) குறித்த அண். 1850ஆம் ஆண்டு ஓவியம், ஓவியர் சார்லசு டர்னர்.

ஹன்னிபால் என்பது ஒரு பொதுவான செமித்திய போனீசிய-கார்த்தேஜினிய தனி நபர் பெயர் ஆகும். இது கார்த்தேஜினிய ஆதாரங்களில் ḤNBʿL[2] (பியூனிக்: 𐤇𐤍𐤁𐤏𐤋) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஹன்னோ என்கிற பொதுவான போனீசிய ஆண் பெயர் மற்றும் வடமேற்கு செமித்திய கானானிய தெய்வமான பால் (பொருள்: "பிரபு") ஆகியவற்றின் இணைவு இதுவாகும். பால் என்பது மேற்கு ஆசியாவில் உள்ள கார்த்தேஜினியர்களின் பூர்வீகத் தாயகமான போனீசியாவின் ஒரு முக்கியக் கடவுள் ஆவார். இப்பெயரின் சரியான உச்சரிப்பு இன்றும் விவாதத்திற்குரியதாக உள்ளது. ஹன்னோபால்,[3] ஹன்னிபால்[4][5] என்ற உச்சரிப்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன. "பால்/இறைவன் கருணையுடையவன்", "பால் கருணையுடையவனாக உள்ளார்",[5][6] அல்லது "பாலின் கருணை" என இது பொருள்படுகிறது.[4] செமித்திய ஹீப்ரு பெயரான ஹனியேலுடன் இது ஒத்ததாக உள்ளது. கிரேக்க வரலாற்றாளார்கள் இப்பெயரை அன்னிபசு (Ἀννίβας ) என்று குறிப்பிட்டனர்.

போனேசியர்கள் மற்றும் கார்த்தேஜினியர்கள் ஆகியோர் பல மேற்கு ஆசிய செமித்திய மக்களைப் போலவே தங்களது மரபு வழிப் பெயர்களைப் பயன்படுத்தவில்லை. ஆனால், ஒரே பெயரைக் கொண்டவர்கள் பொதுவாக மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டப்படுவதற்காக தந்தை வழிப் பெயர்கள் அல்லது அடைமொழிகளுடன் குறிப்பிடப்பட்டனர். அனைத்து ஹன்னிபால்களிலும் இவர் மிகப் பிரபலமானவராக இருந்த போதிலும் மேற்கொண்ட விளக்கம் தேவைப்படும் போது இவர் பொதுவாக "ஹன்னிபால், கமில்கரின் மகன்" அல்லது "பர்சிய ஹன்னிபால்" என்று குறிப்பிடப்படுகிறார். இந்தப் பெயரானது இவரது தந்தை கமில்கர் பர்காவின் குடும்பத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. பர்கா என்பது ஒரு செமித்திய மூன்றாவது பெயர் ஆகும். இதன் பொருள் "மின்னல்" அல்லது "இடி" ஆகும்.[7] தனது தாக்குதல்களின் துரிதம் மற்றும் ஆக்ரோசத்தின் காரணமாக கமில்கர் இந்தப் பெயரைப் பெற்றார்.

இசுரயேலர், அசிரியர், பாபிலோனியர், அரமேயர், அராபியர், அமோரிட்டு மக்கள், மோவாப் மக்கள், ஏதோமிய மக்கள் மற்றும் பிற ஆசிய செமித்திய மக்கள் மத்தியில் மின்னலைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒத்த பெயர்களுடன் பர்கா என்ற பெயர் ஒத்துப் போகிறது.[8] இவர்கள் தங்களது பெயரை தந்தையிடமிருந்து பெறாமல் இருக்கும் போதிலும் கமில்கரின் வழித்தோன்றல்கள் பொதுவாக பர்சியர் என்று அறியப்படுகின்றனர்.[9] நவீன வரலாற்றாளர்கள் சில நேரங்களில் ஹன்னிபாலின் சகோதரர்களைக் கசுதுருபால் பர்கா மற்றும் மாகோ பர்கா என்று கசுதுருபால் மற்றும் மாகோ என்று பெயரிடப்பட்ட பிற ஏராளாமான கார்த்தேஜினியர்களிடமிருந்து வேறுபடுத்தி அறிவதற்காகக் குறிப்பிடுகின்றனர். இருந்தும் இந்தப் பழக்கமானது வரலாறு முழுவதும் காணப்படவில்லை. இது ஹன்னிபாலுக்கு அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது.

பின்புலமும், தொடக்க வாழ்வும்

[தொகு]
கார்த்தேஜினிய கால் செகெல் நாணயம். எசுப்பானியாவில் அச்சடிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. நாணயத்தின் முன் புறமானது போனீசிய நகர அரசின் காவல் தெய்வமான மெல்கர்த்தின் இளம் பண்புகளை உடையவராக ஹன்னிபாலைச் சித்தரிக்கிறது என்று கருதப்படுகிறது. நாணயத்தின் பின் புறமானது ஹன்னிபாலின் பிரபலமான போர் யானைகளில் ஒன்றைக் கொண்டுள்ளது.[10]

ஒரு கார்த்தேஜினியத் தலைவரான கமில்கர் பர்காவின் மகன்களில் ஒருவர் ஹன்னிபால் ஆவார். இவரது தாயார் யார் என்று தெரியவில்லை. இவர் கார்த்தேஜ் நகரத்தில் பிறந்தார். இந்த நகரம் தற்கால வடக்கு துனீசியாவில் உள்ளது. போனீசியாவில் இருந்த தங்களது தாயகத்தில் இருந்து வந்த கானானியர்களால் காலனி மயமாக்கப்பட்ட பல நடு நிலக் கடல் பகுதிகளில் கார்த்தேஜும் ஒன்றாகும். தற்கால லெபனான் மற்றும் சிரியா நாடுகளின் நடு நிலக் கடல் கடற்கரைகளை ஒட்டிய ஒரு பகுதியாக போனீசியா அடையாளம் காணப்படுகிறது. இவருக்குப் பல சகோதரிகள் இருந்தனர். அவர்களின் பெயர்கள் தெரியவில்லை. கசுதுருபால் மற்றும் மாகோ என்ற பெயருடைய இரு சகோதரர்களும் இருந்தனர். இவரது மைத்துனர்கள் வெளிரிய கசுதுருபால் மற்றும் நுமிதிய மன்னனான நரவசு ஆகியோராவர். இவரது சகோதரிகளுக்குத் திருமணமான போது இவர் ஒரு குழந்தையாகவே இருந்தார். கூலிப் படைப் போரில் இவரது தந்தையின் போராட்டங்கள் மற்றும் ஐபீரிய மூவலந்தீவை பியூனிக்கியர் கைப்பற்றியது ஆகியவற்றின் போது இவருடைய தந்தைக்கு மிக நெருங்கிய ஆதரவாளர்களாக இவரது மைத்துனர்கள் திகழ்ந்தனர்.[11]

முதலாம் பியூனிக் போரில் கார்த்தேஜின் தோல்விக்குப் பிறகு தன்னுடைய குடும்பம் மற்றும் கார்த்தேஜின் எதிர் காலத்தை முன்னேற்ற கமில்கர் செயல்படத் தொடங்கினார். இதை மனதில் வைத்துக் கொண்டு மற்றும் காதேசுவால் ஆதரவளிக்கப்பட்ட கமில்கர் தற்போதைய எசுப்பானியா மற்றும் போர்த்துகலை உள்ளடக்கிய ஐபீரிய மூவலந்தீவின் பழங்குடியினங்களை அடிபணிய வைக்கத் தொடங்கினார். அந்நேரத்தில் இவரது இராணுவத்தைக் கொண்டு செல்ல ஒரு கடற்படையைக் கொண்டிருக்காத ஒரு வறிய நிலையில் கார்த்தேஜ் இருந்தது. மாறாக, கமில்கர் தன்னுடைய படைகளை நுமிதியாவைத் தாண்டி எர்குலசின் தூண்களை நோக்கி அணி வகுத்துச் செல்ல வேண்டியிருந்தது. பிறகு ஜிப்ரால்ட்டர் நீரிணையைக் கடக்க வேண்டியிருந்தது.[12]

பாலிபியசின் கூற்றுப் படி, ஹன்னிபால் பிற்காலத்தில் பின்வருவனவற்றைக் கூறினார். தன்னுடைய தந்தையை இவர் சந்தித்த போது, அவருடன் வருவதாக மன்றாடிய போது கமில்கர் ஹன்னிபாலைக் கூட்டிச் செல்ல ஒப்புக் கொண்டார். ஹன்னிபால் உயிருடன் இருக்கும் வரை என்றுமே உரோமின் நண்பனாக மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுக்குமாறு வேண்டினார். இவருக்கு மிகவும் இளம் வயதிலேயே (9 வயது) தன்னுடைய தந்தையிடம் இவர் அயல் நாட்டில் நடந்து கொண்டிருந்த ஒரு போருக்குத் தன்னைக் கூட்டிச் செல்லுமாறு மன்றாடியதாக ஒரு பதிவு கூட உள்ளது. அக்கதையில் ஹன்னிபாலின் தந்தை இவரைக் கூட்டிச் சென்றார். ஒரு பலியிடும் அறைக்குக் கொண்டு சென்றார். அந்த அறையில் எரிந்து கொண்டிருந்த நெருப்பின் மீது என்றுமே உரோமின் நண்பனாக இருக்க மாட்டேன் என்று ஹன்னிபாலை சத்தியம் செய்ய கமில்கர் கூறினார். பிற ஆதாரங்கள் ஹன்னிபால் தனது தந்தையிடம் கூறியதாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றன, "எனது வயது எனக்கு அனுமதியளித்த உடனேயே... நெருப்பையும், எஃகையும் பயன்படுத்தி உரோமின் விதியை முடிப்பேன்".[13][14] பாரம்பரியப் படி ஹன்னிபாலின் சபதமானது எசுப்பானியாவின் வளன்சியான் மாநிலத்தின் ஒரு பகுதியாக தற்போது உள்ள பெனிசுகோலா என்ற பட்டணத்தில் எடுக்கப்பட்டது.[15]

இசுப்பானியாவை வெல்லும் தனது முயற்சியை ஹன்னிபாலின் தந்தை தொடர்ந்தார். யுத்தத்தில் இவரது தந்தை மூழ்கி இறந்த போது[16] ஹன்னிபாலின் மைத்துனர் வெளிரிய கசுதுருபால் இராணுவத்தின் தலைமைக்கு வந்தார். அப்போது 18 வயதாக இருந்த ஹன்னிபால் தனது மைத்துனருக்குக் கீழ் ஓர் அதிகாரியாகச் சேவையாற்றினார். ஐபீரியாவிலிருந்த கார்த்தேஜின் பகுதிகளை நிலைப்படுத்தும் ஒரு கொள்கையை கசுதுருபால் பின்பற்றினார். எசுப்பானியாவின் எப்ரோ ஆற்றுக்குத் தெற்கே உரோம் தனது நிலப்பரப்பை விரிவாக்கம் செய்யாத வரை கார்த்தேஜ் எப்ரோ ஆற்றுக்கு வடக்கேயுள்ள பகுதிக்கு நிலப் பரப்பை விரிவாக்கம் செய்யாது என்ற ஒப்பந்தத்தை உரோமுடன் இவர் கையொப்பம் கூட இட்டார்.[17] ஐபீரியாவின் பூர்வீகப் பழங்குடியினங்கள் மற்றும் வடக்கு ஆப்பிரிக்கக் கடற்கரைகளின் பூர்வீக மக்களான பெர்பெர்களுடன் தூதரக உறவு முறைகள் மூலமாக கார்த்தேஜின் சக்தியை நிலைப்படுத்தவும் கூட கசுதுருபால் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.[18]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Plutarch, Life of Titus Flamininus 21.3–4. Plutarch adds that "when asked what his choices would be if he had beaten Scipio, he replied that he would be the best of them all". However, Plutarch gives another version in his Life of Pyrrhus, 8.2: "Pyrrhus, Scipio, then myself".
  2. Huss (1985), ப. 565.
  3. Brown, John Pairman. 2000. Israel and Hellas: Sacred institutions with Roman counterparts. pp. 126–128
  4. 4.0 4.1 Benz, Franz L. 1982. Personal Names in the Phoenician and Punic Inscriptions. pp. 313–314
  5. 5.0 5.1 Baier, Thomas. 2004. Studien zu Plautus' Poenulus. p. 174
  6. Friedrich, Johannes, Wolfgang Röllig, Maria Giulia Amadasi, and Werner R. Mayer. 1999. Phönizisch-Punische Grammatik. p. 53.
  7. Sullivan, Robert Joseph (1877), A Dictionary of the English Language, p. 489
  8. S. Lancel, Hannibal p. 6.
  9. Ameling, Walter Karthago: Studien zu Militär, Staat und Gesellschaft pp. 81–82.
  10. Sylloge Nummorum Graecorum, Great Britain, Volume IX, British Museum, Part 2: Spain, London, 2002, n° 102.
  11. Lancel, S. Hannibal p. 6.
  12. De Beer, Sir Gavin (1969). Hannibal: Challenging Rome's Supremacy p. 91.
  13. Dodge, Theodore Ayrault (1995). Hannibal: A History of the Art of War Among the Carthaginians and Romans Down to the Battle of Pydna, 168 BC. Da Capo Press.
  14. Reverse Spins Patton, the Second Coming of Hannibal.
  15. Hilowitz, Beverley (1974). A Horizon guide: great historic places of Europe. American Heritage Pub. Co., p. 119. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-028915-8
  16. "Hamilcar Barca". பார்க்கப்பட்ட நாள் 6 June 2011.
  17. De Beer, Sir Gavin (1969). Hannibal: Challenging Rome's Supremacy p. 94.
  18. "The History of Rome: Vol III"., by Livy