உள்ளடக்கத்துக்குச் செல்

வலேரியன் கிராசியாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேதகு

கர்தினால் வலேரியன் கிராசியாஸ்
மும்பை உயர்மறைமாவட்டப் பேராயர்; லாத்தா வீதியில் அமைந்த புனித மரியா கோவிலின் கர்தினால்-குரு
சபைகத்தோலிக்க திருச்சபை
முன்னிருந்தவர்பேராயர் தாமஸ் ராபர்ட்ஸ், சே.ச.
பின்வந்தவர்கர்தினால் சைமன் பிமேந்தா
பிற பதவிகள்-
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடுஅக்டோபர் 3, 1926 (கண்டி, இலங்கை)
ஆயர்நிலை திருப்பொழிவுசூன் 29, 1946 (புனித பேதுரு கோவில், மும்பை)
பேராயர் தாமஸ் ராபர்ட்ஸ், சே.ச.-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டதுசனவரி 12, 1953
கர்தினால் குழாம் அணிகுருக்கள் அணி
பிற தகவல்கள்
பிறப்பு(1900-10-23)அக்டோபர் 23, 1900
கராச்சி (பிரித்தானிய இந்தியா)
இறப்புசெப்டம்பர் 11, 1978(1978-09-11) (அகவை 77)
மும்பை, இந்தியா
கல்லறைமும்பை உயர்மறைமாவட்ட முதன்மைக் கோவில் ("திருப்பெயர் கோவில்")
குடியுரிமைஇந்தியா
சமயம்கத்தோலிக்க திருச்சபை
பெற்றோர்ஹோசே கிராசியாஸ்,
கார்லோட்டா கிராசியாஸ்
படித்த இடம்புனித யோசேப்பு குருத்துவக் கல்லூரி, மங்களூரு;
திருத்தந்தைக் குருத்துவக் கல்லூரி, கண்டி;
திருத்தந்தை கிரகோரி பல்கலைக்கழகம், உரோமை
குறிக்கோளுரைசகோதர அன்பு (இலத்தீன்: Fraternitatis amore)

கர்தினால் வலேரியன் கிராசியாஸ் (Valerian Cardinal Gracias) (1900-1978) கத்தோலிக்க திருச்சபையின் முதல் இந்தியக் கர்தினால் ஆவார்[1]. திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் இவரைக் கர்தினால் நிலைக்கு உயர்த்தியபோது (சனவரி 12, 1953) ஆசியாவிலிருந்து (சீனா) வேறு ஒரு கர்தினால் மட்டுமே இருந்தார்.

பிறப்பும் கல்வியும்

[தொகு]

வலேரியன் கிராசியாஸ் 1900ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 23ஆம் நாள் கராச்சி (முன்னாள் பிரித்தானிய இந்தியா, இன்றைய பாகிஸ்தான்) நகரில் ஹோஸே கிராசியாஸ் என்பவருக்கும் கார்லோட்டா கிராசியாஸ் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். அவருக்கு பவுலீன் என்ற மூத்த சகோதரி ஒருவரும் இருந்தார். வலேரியன் கராச்சியில் உள்ள புனித பேட்ரிக் கோவிலில் திருமுழுக்கு, உறுதிப்பூசுதல், நற்கருணை ஆகிய அருளடையாளங்களைப் பெற்றார்.

வலேரியன் கராச்சியில் உள்ள புனித பேட்ரிக் மேநிலைப் பள்ளியில் கல்வி பயின்றபின், மங்களூரில் அமைந்துள்ள புனித யோசேப்பு குருத்துவக் கல்லூரியில் சேர்ந்து குருத்துவப் படிப்பைத் தொடங்கினார். அங்கு 1918-1921 ஆண்டுக் காலத்தில் மெய்யியல் கற்றார். பின்னர் இலங்கையில் (முன்னாள் சிலோன்) உள்ள கண்டி நகரில் திருத்தந்தை குருத்துவக் கல்லூரியில் 1921-1926 ஆண்டுகளில் இறையியல் பயின்று முனைவர் பட்டம் பெற்றார். அதன் பின், உரோமை நகரில் திருத்தந்தை கிரகோரி பல்கலைக்கழகத்தில் 1927-1929இல் பயின்று முதுமுனைவர் பட்டம் பெற்றார்.

குருத்துவப் பணி

[தொகு]

வலேரியன் கிராசியாஸ் கண்டியில் படித்த காலத்தில் 1926ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் நாள் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1926-1927 ஆண்டுகளில் பந்த்ராவில் உள்ள புனித பேதுரு பங்கில் பணியாற்றிய பின் மேற்படிப்புக்காக உரோமை சென்றார். அங்கு 1927-1929இல் படிப்பை முடித்துவிட்டு நாடு திரும்பினார். அப்போது மும்பை (அன்றைய பம்பாய்) உயர்மறைமாவட்டப் பேராயராக இருந்த யொவாக்கிம் லீமா, சே.ச., என்பவருக்குச் செயலராகவும் மறைமாவட்டச் செயலராகவும் 1929இலிருந்து 1937 வரை பணிபுரிந்தார்.

அக்காலத்தில் இந்தியாவிலும் பர்மாவிலும் பல மறைமாவட்டங்களில் சமயக் கருத்துரைகள் வழங்கினார். "திரு இருதயத் தூதன்" பத்திரிகையின் ஆசிரியராகவும், "குருக்கள் மாத இதழ்" பத்திரிகையின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும், "தி எக்சாமினர்" (The Examiner) என்னும் வார இதழின் துணை ஆசிரியராகவும் பணியாற்றினார்.

ஆயர் பணி

[தொகு]

வலேரியன் கிராசியாஸ் மும்பை (பம்பாய்) உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக 1946, மே 16ஆம் நாள் நியமிக்கபபட்டார். அதே ஆண்டு சூன் 29ஆம் நாள் அன்றைய மும்பைப் பேராயர் தாமஸ் ராபர்ட்ஸ், சே.ச., என்பவரால் ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். அச்சடங்கில் துணைத் திருப்பொழிவாளர்களாகச் செயல்பட்டோர் மங்களூரு ஆயர் விக்டர் பெர்னாண்டசு என்பவரும் பெங்களூரு ஆயர் தாமஸ் பொத்தகாமுரி என்பவரும் ஆவர். அவர் ஆயரான போது தேர்ந்துகொண்ட குறிக்கோளுரை "சகோதர அன்பு" (இலத்தீன்: Fraternitatis amore) என்பதாகும்.

1950ஆம் ஆண்டு திசம்பர் 4ஆம் நாள் ஆயர் வலேரியன் கிராசியாஸ் மும்பைப் பேராயராக உயர்த்தப்பட்டார். திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் "அன்னை மரியா தம் மறைவுக்குப் பின் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்" என்பது கிறித்தவ நம்பிக்கைக் கோட்பாடு ஆகும் என்று 1950ஆம் ஆண்டு திசம்பர் 8ஆம் நாள் உரோமையில் அறிவித்தபோது பேராயர் வலேரியன் கிராசியாசும் உடனிருந்தார்.

கர்தினால் பதவி

[தொகு]

திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் பேராயர் வலேரியன் கிராசியாசை 1953ஆம் ஆண்டு சனவரி 12ஆம் நாள் கர்தினால் நிலைக்கு உயர்த்துவதாக அறிவித்தார். அதே ஆண்டு சனவரி 15ஆம் நாள் கர்தினாலாக உயர்த்தப்பட்டு, "லாத்தா வீதியில் அமைந்த புனித மரியா கோவிலின் கர்தினால்-குரு" என்னும் பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது.

கர்தினால் வலேரியன் கிராசியாஸ் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவராக 1954-1972 ஆண்டுக் காலத்தில் பதவி வகித்தார்.

திருத்தந்தைத் தேர்தல் கூட்டங்களில் பங்கேற்பு

[தொகு]

கர்தினால் கிராசியாசின் பணிக்காலத்தின்போது மூன்று முறை திருத்தந்தைத் தேர்தல் கூட்டங்கள் நடந்தன. அவற்றுள் இரண்டில் கலந்துகொண்டு அவர் வாக்களித்தார். நோய் காரணமாக மூன்றாம் தேர்தல் கூட்டத்தில் அவரால் கலந்த்கொள்ள இயலவில்லை.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் பங்கேற்பு

[தொகு]

1962 அக்டோபர் 11ஆம் நாளிலிருந்து 1965 திசம்பர் 8ஆம் நாள்வரை உரோமை புனித பேதுரு பேராலயத்தில் நடந்தேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் நான்கு அமர்வுகளிலும் கர்தினால் கிராசியாஸ் பங்கேற்றார்.

இறப்பு

[தொகு]

கர்தினால் வலேரியன் கிராசியாஸ் புற்றுநோய் காரணமாக 1978 செப்டம்பர் 11ஆம் நாள் காலமானார். 1978 ஆகத்து 26இல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 33 நாள்கள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருந்து, செப்டம்பர் 28ஆம் நாள் இறந்துபோன முதலாம் யோவான் பவுல் [2] என்னும் திருத்தந்தையின் ஆட்சிக் காலத்தில் இறந்த ஒரே கர்தினால் வலேரியன் கிராசியாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்தினால் கிராசியாசின் உடல் மும்பை உயர்மறைமாவட்டத் தலைமைக் கோவிலான "திருப்பெயர் பேராலயத்தில்" அடக்கம் செய்யப்பட்டது.

சிறப்பு விருது

[தொகு]

கர்தினால் ஆற்றிய பணிகளைப் பாராட்டி அவருக்கு இந்திய அரசு "பத்ம விபூஷண்" விருதை 1966 சனவரி 26ஆம் நாள் வழங்கியது.

ஆதாரங்கள்

[தொகு]

மேலும் அறிய

[தொகு]

கர்தினால் வலேரியன் கிராசியாஸ் - வாழ்க்கை வரலாறு