யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்
இலங்கைத் தமிழர் வரலாற்றுப் பகுதி |
இலங்கைத் தமிழர் வரலாறு |
---|
கிழக்கிலங்கைத் தமிழர்களின் வரலாறு தமிழீழ வலைவாசல் தமிழர் வலைவாசல் இலங்கை வலைவாசல் |
யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் (Jaffna Youth Congress) என்பது இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது இளைஞர் அமைப்பு ஆகும். இவ்வமைப்பு யாழ்ப்பாணத்தில் 1924 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. இவ்வமைப்பு ஆரம்பத்தில் யாழ்ப்பாண மாணவர் மாநாடு (காங்கிரஸ்) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 1926 ஆம் ஆண்டில் இளைஞர் காங்கிரசாகப் பெயர் மாற்றப்பட்டது.
முழு இலங்கைக்குமான முழுமையான விடுதலை வேண்டும் என்ற கருத்தை முதல் முறையாக அமைப்பு ரீதியில் முன்வைத்து அதற்கான நேரடிப் போராட்டத்தில் ஈடுபட்ட பெருமை யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசையே சாரும்[1]. ஆங்கிலேயரின் அதிகாரத்தை அகற்றுதல், முழுமையான சுயாட்சி பெறுதல், தேசிய ஒற்றுமை, மது விலக்கல், தீண்டாமை ஒழித்தல் போன்ற பல முற்போக்குக் கொள்கைகளை இவர்கள் முன்வைத்தனர்.
இவர்களின் மாநாடுகளிலும் செயற்பாடுகளிலும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான வலுவான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.[2]
உறுப்பினர்கள்
[தொகு]இவ்வமைப்பில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள், குறிப்பாக இந்தியப் பல்கலைக்கழகங்கள், கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரி ஆகியவற்றின் பட்டதாரிகள் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களில் ஹண்டி பேரின்பநாயகம், ஜே. வி. செல்லையா, "கலைப்புலவர்" க. நவரத்தினம், ஏ. இ. தம்பர், "ஒரேற்றர்" சுப்பிரமணியம், ஐ. பி. துரைரத்தினம், எம். எஸ். இளையதம்பி, ரி. எம். சுப்பையா, ஆயர் எஸ். குலேந்திரன், பி. நாகலிங்கம் (பின்னர் செனட்டர்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். காங்கிரஸ் தனது இரண்டாவது மாநாட்டில் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் அதிபராக இருந்த பி. ஜி. எஸ். குலரத்தின என்பவரை அதன் தலைவராகத் தேர்ந்தெடுத்தது[1].
மாநாடுகள்
[தொகு]யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் தமது ஆண்டு விழாக்களை வெகு விமரிசையாகக் கொண்டாடி வந்தனர். ஐசாக் தம்பையா, சுவாமி விபுலாநந்தர் போன்றோர் இவர்களின் விழாக்களுக்குத் தலைமை தாங்கி ஊக்குவித்தனர். தென்னிலங்கையில் இருந்தும் சிங்களப் பெரியார்களும், அரசியல்வாதிகளும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இளைஞர்களின் பல முற்போக்குக் கொள்கைகள் காரணமாக பல சிங்களத் தலைவர்களின் ஆதரவை இளைஞர் காங்கிரஸ் பெற்றுக் கொண்டது. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு முதற் தடவையாக இலங்கைக்கான சமஷ்டி அரசியலமைப்பை முன்வைத்து உரையாற்றினார்.
1927 ஆம் ஆண்டு மாநாட்டில் மகாத்மா காந்தி கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் சி. இராசகோபாலாச்சாரி, எஸ். சத்தியமூர்த்தி, போன்ற பல இந்திய விடுதலைப் போராட்டப் பெரியார்கள் வருகை தந்து கீரிமலை, யாழ்ப்பாண முற்றவெளி, ரிட்ச்வே மண்டபம் போன்ற இடங்களில் பிரசாரக் கூட்டங்களை நடத்தினார்கள்[3]. 1931 இல் இடம்பெற்ற யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் மாநாட்டை இந்திய காங்கிரஸ் சோசலிசக் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான கமலாதேவி சட்டோபாத்தியாயா திறந்து வைத்து உரையாற்றினார்.
முதலாவது மாநாடு
[தொகு]1924 டிசெம்பரில் இளைஞர் காங்கிரஸ் அதன் முதலாவது மகாநாட்டை யாழ்ப்பாணம் ரிட்ச்வே மண்டபத்தில் நடத்தியது. காங்கிரசின் முதலாவது தலைவராக ஜே. வி. செல்லையா தேர்ந்தெடுக்கப்பட்டார்[4]. அது நிறைவேற்றிய தீர்மானங்கள் பின்வருமாறு[5]:
- தாய்நாட்டின் சேமநலத்திற்கும், அதன் நலன்களை எல்லாச் சமயங்களை சார்ந்தவர்களாலும் சமமான நேர்மையுடனும், விநயத்துடனும் ஊக்குவிக்க முடியும் என்று இந்த காங்கிரஸ் நம்புவதால், இக்காங்கிரசானது அதனைப் பொறுத்தவரையில் நாட்டிலுள்ள பல்வேறு சமய நிறுவனங்களிடையே வேறுபாடு காட்டுவதில்லையென்றும், எந்த ஒன்றுக்கும் முதலிடம் கொடுப்பதில்லையென்றும் காங்கிரசின் பொதுக்கூட்டங்களிலோ, செயற்குழுக் கூட்டங்களிலோ அல்லது செய்யும் பிரச்சார வேலைகளின் பொழுது எந்தவொரு மதம் சார்ந்த எந்த விடயமும் கிளப்பக்கூடாதென்றும், இதற்கான ஒரு வாசகம் ஆட்சியமைப்பு விதிகளில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென்றும்,
- நாட்டில் நிலவும் சாதி வேறுபாடுகள் முன்னேற்றத்திற்குக் தடையென இக்காங்கிரஸ் கருதுகின்றதென்றும், நம்மிடையே இருந்து தீண்டாமை என்னும் காயத்தை இயன்றளவு அகற்றுவதற்கு காங்கிரஸ் அங்கத்தவர் முயல்வாரென்றும்
- தேசிய இலக்கியத்தைப் படிப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் வாரத்தில் குறைந்தது மூன்று மணித்தியாலங்களையாவது செலவிடுவதென காங்கிரசின் அங்கத்தவர்கள் தம்மைக் கட்டுப்படுத்தும் வாக்குறுதியொன்றைச் செய்து கொள்வதென்றும்,
- தேசிய இலக்கியம், கலை, இசைத்துறைகளில் அவற்றின் மீட்பிற்கு வேண்டிய தன்னாக்கப்படைப்பினைத் தோற்றுவிக்கும் எவருக்கும், பரிசு, பதக்கம் அன்றேல் யாதுமொரு ஊக்குவிப்பினை காங்கிரஸ் கொடுக்கவேண்டுமென்றும்,
- அறிவியல், புனைகதை, சமூகவரலாறு, வாழ்க்கை ஆகிய துறைகளில் தேசிய இலக்கியத்தை அபிவிருத்தி செய்வதற்கு வேண்டிய வழிவகைகளை உண்டாக்குவதற்கு செயற்குழுவினால் ஐந்து அங்கத்தினரைக் கொண்ட குழுவை நியமிப்பதென்றும்,
- தென்னிலங்கையில் தமிழும், வட இலங்கையில் சிங்களமும் படிப்பிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக காங்கிரஸ் எடுக்க வேண்டும் என்றும்,
- இந்தக் காங்கிரஸ் இயக்கத்தின் நோக்குகளை வெகுசனத்திற்கு விளக்கவும், மது ஒழிப்பு, கூட்டுறவு ஆகிய துறைகளினை அவர்களுக்குப் புகட்டவும் வேண்டிய துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு வெளியிடுவதற்கென பிரசுரக்குழுவொன்றைத் தோற்றுவிப்பதென்றும்,
- காங்கிரஸ் அங்கத்துவர்கள் இயன்றளவு உள்ளுர் வர்க்கத்தையும், கைத்தொழில்களையும் ஆதரிக்க வேண்டும் என்றும், அவர்கள் குறிப்பாக அந்நிய சவர்க்காரம், வாசனைத்திரவியங்கள், பூசல் மா, மது, சிகரெட் ஆகியவற்றை வாங்காது தவிர்க்க வேண்டுமென்றும், இக்காங்கிரஸ் தீர்மானிக்கிறது” எனப் பிரகடனப்படுத்திற்று.
அரசாங்க சபைத் தேர்தல் ஒன்றியொதுக்கல்
[தொகு]1931 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட டொனமூர் அரசியலமைப்பில் போதிய சுயாட்சி வழங்கப்படாததைக் கண்டித்து யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் யாழ்ப்பாணமெங்கும் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டது. இதன் உச்சக் கட்டமாக இலங்கை அரசாங்க சபைக்கு 1931 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது தேர்தலை ஒன்றியொதுக்கல் (பகிஷ்கரிப்பு) செய்யுமாறு இவர்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்று அத்தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, ஊர்காவற்துறை, பருத்தித்துறை ஆகிய 4 தொகுதிகளிலும் போட்டியிட எவரும் முன்வராததால் யாழ் மாவட்டத் தேர்தல்கள் பின்போடப்பட்டன[3]. அப்போது ‘யாழ்ப்பாணம் தலைமை தாங்குகிறது’ என இந்த ஒன்றியொதுக்கலைப் பாராட்டி இலங்கையின் இடதுசாரி இயக்கத்தின் தந்தையான பிலிப் குணவர்தன யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசுக்கு தந்தி அனுப்பியிருந்தார். ஒன்றியொதுகலைத் தாமும் ஆதரிப்பதாக பல சிங்களத் தலைவர்கள் கூறியிருந்த போதிலும் முன்னணி இடதுசாரித் தலைவரான எஸ். ஏ. விக்கிரமசிங்க உட்படப் பல சிங்களத் தலைவர்கள் தேர்தலில் பங்குபற்றினர்[6].
காங்கிரசின் வீழ்ச்சி
[தொகு]இவ்வமைப்பின் செல்வாக்கு யாழ்ப்பாணத்தில் 1939 ஆம் ஆண்டு வரை நீண்டிருந்தது[5]. 1930களின் நடுப்பகுதியில் இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த சிலர் அவ்வியக்கத்தை விட்டு விலகி இடதுசாரி அரசியல் கட்சிகளை நாடிச் சென்றனர். இவர்களில் பி. நாகலிங்கம், தர்மகுலசிங்கம், எஸ். செல்லமுத்து, கே. சச்சிதானந்தம், த. துரைசிங்கம் போன்றோர் தெற்கில் அப்போது பிரபலமான சூரிய மல் இயக்கத்தில் சேர்ந்து அதன் வழியாக இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர்[5].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 SRI LANKA: THE UNTOLD STORY பரணிடப்பட்டது 2009-06-24 at the வந்தவழி இயந்திரம், K T Rajasingham
- ↑ சி. கா செந்திவேல், ந. இரவீந்திரன். 1989). இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும். சென்னை: தெற்குப் பதிப்பகம்.
- ↑ 3.0 3.1 குலரத்தினம், க. சி., நோத் முதல் கோபல்லவா வரை, சேமமடு பதிப்பகம், கொழும்பு, 2008
- ↑ Celebrating 185 Years of Education The Liberal tradition at Jaffna College[தொடர்பிழந்த இணைப்பு], சீலன் கதிர்காமர், தி ஐலண்ட், செப்டம்பர் 7, 2008
- ↑ 5.0 5.1 5.2 யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு, பேராசிரியர் கா. சிவத்தம்பி, நூலகம் திட்டம்
- ↑ இலங்கை தேசிய இனப்பிரச்சனையும் இடதுசாரீயமும், தனபாலா
வெளி இணைப்புகள்
[தொகு]- UTHR(J), SOME MILESTONES IN THE DEVELOPMENT OF TAMIL POLITICAL CONSCIOUSNESS
- Santasilan Kadirgamar, Jaffna Youth Radicalism - the 1920s and 30s, ICES பரணிடப்பட்டது 2011-05-14 at the வந்தவழி இயந்திரம்
- யானறிந்த பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி பரணிடப்பட்டது 2012-04-26 at the வந்தவழி இயந்திரம், தினகரன், 22 ஏப்ரல், 2012