மூக்குக் கொம்பன்
மூக்குக் கொம்பன் Rhinoceros புதைப்படிவ காலம்: | |
---|---|
ஆப்பிரிக்க மூக்குக்கொம்பன், Diceros bicornis | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மூக்குக் கொம்பன் குடும்பம் Rhinocerotidae John Edward Gray, 1821
|
Extant Genera | |
வெள்ளை மூக்குக்கொம்பன் |
மூக்குக்கொம்பன் என்னும் விலங்கு நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்குகளில் ஒன்று. தடித்த தோலும் (1.5 - 5.0 செமீ), பருத்த உடலும், 1-1.8 மெட்ரிக் டன் எடையும் கொண்ட இப்பெரிய விலங்கு விரைவாகவும் ஓட வல்லது - மணிக்கு 40 கிமீ தூரம் வரை ஓடவல்லது[1]. இது இலைதழைகளை உண்ணும் தாவர உண்ணி. ஏறத்தாழ 60 ஆண்டுகள் வாழ வல்லது.
மூக்குக்கொம்பனுக்கு காண்டாவிருகம், காண்டாமிருகம், உச்சிக்கொம்பன்,[2] கொந்தளம்[3] என்னும் பெயர்களும் உண்டு. காண்டா என்னும் சொல் மிகப்பெரிய என்னும் பொருள் கொண்டது எனவே இதனை காண்டாமிருகம் என்று பலரும் அழைக்கின்றனர். எளிதில் சினமுற்று, கொந்தளிப்புடன் கடுமையாக எதிரிகளைத் தாக்கவல்லது, ஆகவே இதற்கு கொந்தளம் என்றும் பெயர்.
மூக்குக் கொம்பன் இயற்கையில் ஆப்பிரிக்காவிலும், இந்தியாவிலும், சாவா சுமத்ரா தீவுகளில் மட்டுமே இன்று வாழ்கின்றன. ஆப்பிரிக்க மூக்குக்கொம்பன்களுக்கு இரண்டு கொம்புகள் உண்டு, ஆசிய முக்குக்கொம்பன்களில் இந்திய, சாவா வகைகளுக்கு ஒரே ஒரு கொம்புதான் உண்டு. ஆனால் ஆசியாவில் உள்ள சுமத்ரா மூக்குக்கொம்பன்களும் இரட்டைக் கொம்புகள் கொண்டவை. ஆப்பிரிக்க மூக்குக் கொம்பனை சுவாகிலி மொழியில் கிஃவாரு (Kifaru) என்று அழைக்கின்றனர். "கறுப்பு ரைனோ" (black rhino) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இரட்டை மூக்குக்கொம்பன், ஆப்பிரிக்க விலங்கைக் குறிக்கும்.
மூக்குக்கொம்பன்கள் ஒற்றைப்படை கால் விரல்கள் கொண்ட விலங்குகள் வகையை சேர்ந்தவை. இன்றும் உயிர்வாழும் மொத்தம் ஐந்து வகையான மூக்குக்கொம்பன்களை மூன்று பிரிவாக பிரிக்கலாம். முதல் பிரிவு, ஆப்பிரிக்காவைச் சேர்ந்த "வெள்ளை", கறுப்பு மூக்குக்கொம்பன்கள் ஆகிய இரண்டும் அடங்கும். இவை 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிளியோசீன் (Pliocene) என்னும் ஊழிக்காலத்தில் வெவ்வேறு இனமாகப் பிரிந்தன. இவை இரண்டுக்கும் உள்ள முதன்மையான வேறுபாடு இவற்றின் வாயின் அமைப்பே ஆகும். "வெள்ளை" மூக்குக்கொம்பனுக்கு வாயின் உதடுகள் பரந்து விரிந்து புல் மேய ஏதுவாக உள்ளன. ஆனால் கறுப்பு மூக்குக்கொம்பனின் வாய் சற்று குவிந்து கூராக இருக்கும். "வெள்ளை" என்னும் முன்னொட்டு ஆப்பிரிக்கான மொழியில் பரந்து/விரிந்த (wide) என்னும் பொருள் கொண்ட wyd என்னும் சொல் மருவி white (வெள்ளை) என்று ஏற்பட்டதாகும். இது சாம்பல்/வெளிர் பழுப்பு நிறமுடையதே (வெள்ளை அல்ல). மூக்கின் மீது இரட்டைக் கொம்புகள் கொண்ட இரண்டு வகைகளும் ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்தவை. மீதி உள்ள மூன்றில், இந்திய மூக்குக்கொம்பனும், சாவாத் தீவு மூக்குக்கொம்பனும் ஒற்றை கொம்புள்ள ஆசிய வகை மூக்குக்கொம்பன்கள். இவை இரண்டாவது பிரிவு ஆகும். இந்திய மூக்குக்கொம்பனும், சாவா மூக்குக்கொம்பனும் ஏறத்தாழ 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தனி இனங்களாகப் பிரிந்தன. இவ்வெல்லா மூக்குக்கொம்பன்களைக் காட்டிலும் மிகச் சிறியதான சுமத்ரா மூக்குக்கொம்பன் மூன்றாவது வகை ஆகும். இந்த சுமத்ரா வகைக்கு, ஆப்பிரிக்க மூக்குக்கொம்பனைப் போல் இரட்டைக் கொம்புகள் உண்டு. இது உயரமான மலைப்பகுதிகளும் வாழ வல்லதாகையால் இதன் உடலில் முடி அதிகமாக இருக்கும். வேட்டையாடி கொல்லப்படுவதால் இன்று மிகவும் அழியும் தருவாயில் இருக்கும் சுமத்ரா மூக்குக்கொம்பனின் உலக எண்ணிக்கை 275தான் என்று கணக்கிட்டுள்ளார்கள். எல்லா மூக்குக்கொம்பன்களும் அழிவுறும் தீவாய்ப்புடன் உள்ளன. இந்திய காண்டாமிருகங்களில் ஏறத்தாழ 2700 மட்டுமே இன்றுள்ளன. அதே போல ஆப்பிரிக்க "வெள்ளை" காண்டாவிருகமும் 9000தான் இன்றுள்ளன.[4]
காண்டாமிருகத்தின் உடல் பருமனை ஒப்பிடும் பொழுது இதன் மூளையின் எடை பாலூட்டிகளில் மிகச்சிறியது என்று கருதுகிறார்கள். இதன் மூளையின் எடை ஏறத்தாழ (400–600 கி). இது பெரும்பாலும் இலை தழைகளையே உண்ணுகின்றன. ஆப்பிரிக்க காண்டாமிருகத்துக்கு முன்னம் பற்கள் கிடையாது, ஆகவே முன்கடைவாய்ப் பற்களைக் கொண்டே மெல்லுகின்றன.[5]
மூக்குக்கொம்பனின் கொம்பு சிறு புதர்களை வேரோடு பிடுங்கி எறிய உதவுகின்றது. இந்த கொம்புப் பகுதி நகமியம் (கெரட்டின்) என்னும் பொருளால் ஆனது. நகம், மயிர் போன்ற பகுதிகளும் இதே பொருளால் ஆனதே.
கறுப்பு மூக்குக்கொம்பனைத் தவிர மற்ற எல்லா மூக்குக்கொம்பன்களுக்கும் 82 நிறப்புரிகள் (நிறமிகள், குரோமோசோம்கள்) உள்ளன, ஆனால் கறுப்புக் காண்டாமிருகத்துக்கு மட்டும் 84 நிறமிகள் உள்ளன. பாலூட்டிகளிலேயே இதுவே யாவற்றினும் அதிக எண்ணிக்கை உடையதாகும்.
உயரின வகைப்பாடும் பெயரும்
[தொகு]மூக்குக்கொம்பனை ஆங்கிலத்தில் ரைனோசெரசு "rhinoceros" என்று அழைக்கின்றனர். இது கிரேக்கச் சொல்லாகிய ῤινόκερως (ரைனோகெரசு) என்பதில் இருந்து பெற்றது. செவ்வியல் கிரேக்க மொழியில் ῥινός (ரைனோசு, rhinos) என்றால் மூக்கு என்று பொருள். ', κέρας (கெராசு, keras), என்றால் கொம்பு என்று பொருள் எனவே மூக்குக்கொம்பன் என்று பொருள்படும் ரைனோகெரசு என்பது ரைனோசெரசு என்று வழங்குகின்றது. ஆங்கிலத்தில் பன்மைச்சொல் வடிவம் ரைனோசெர்ட்டி என்பதாகும்.[6]
"வெள்ளை" மூக்குக்கொம்பன்
[தொகு]யானைக்கு அடுத்தபடியாக, வெள்ளை மூக்குக்கொம்பனும், இந்திய காண்டாமிருகமும், நீர்யானையும் உலகிலேயே எடை மிகுந்த தரை விலங்குகள். வெள்ளை மூக்குக்கொம்பனில் இரண்டு உள் இனங்கள் உள்ளன. தென் ஆப்பிரிக்காவில் பெருமளவு உள்ள தென் வெள்ளை காண்டாமிருகம் (Ceratotherium simum simum) வகையில் இன்று ஏறத்தாழ 14,500 விலங்குகள் உள்ளன. மிக இக்கட்டான அளவு அருகிவிட்ட வட வெள்ளை காண்டாமிருகம் (Ceratotherium simum cottoni) இன்று (சூன் 2008) மொத்தம் நான்குதான் உலகில் உள்ளன.[7]
வெள்ளை காண்டாமிருகம் பெரிய உடலும் சிறிய கழுத்தும், பெரிய முகமும் பரந்த நெஞ்சுப்பகுதியும் கொண்ட பெரும் விலங்கு. இதன் எடை 3000 கிகி (6000 பவுண்டு) மீறக்கூடியது. 4,500 கிகி (10,000 பவுண்டு) எடையுடைய விலங்கும் வரலாற்றில் பதிவாகி உள்ளது.[8]. முன்னுள்ள கொம்பின் நீளம் ஏறத்தாழ 90 செமீ இருக்கும், ஆனால் 150 செமீ கூட இருக்கக்கூடும். இரண்டாவது கொம்பு பெரும்பாலும் சிறியதாக இருக்கும். இம் மூக்குக்கொம்பனின் உடல் சாம்பல் நிறம் முதல் வெளிறிய பழுப்பு/மஞ்சள் நிறம் வரை வேறுபாடு கொண்டது. உடலில் மயிர் ஏதும் இருப்பதில்லை. வாலிலும், காது மடலின் ஓரத்திலும் முடியிருக்கும். இதன் வாய் அகலமாக இருக்கும். முதுகில் சற்றே திமில் போன்ற உயர்ச்சி இருக்கும்.
கறுப்பு மூக்குக்கொம்பன்
[தொகு]கறுப்பு மூக்குக்கொம்பனில் (Diceros bicornis) நான்கு உள்ளினங்கள் உள்ளன: (1) தெற்கு-நடுப்பகுதி உள்ளினம்(Diceros bicornis minor) - இவ்வகை அதிக எண்ணிக்கையில் நடு தான்சானியாவில் இருந்து தெற்கே சாம்பியா, சிம்பாப்வே, மொசாம்பிக் முதல் தென் ஆப்பிரிக்காவின் வடக்கு கிழக்கு பகுதிகளின் காணப்பட்டன, (2) தெற்கு-மேற்கு உள்ளினினம் (Diceros bicornis bicornis) -இவை நமீபியா, தென் அங்கோலா, மேற்கு போட்சுவானா, தென் ஆப்பிரிக்காவின் மேற்குப்பகுதி ஆகிய இடங்களில் உள்ள வறண்ட அல்லது சிறிது வறண்ட சவான்னா பகுதிகளில் காணப்படுகின்றன; (3) கிழக்கு ஆப்பிரிக்க உள்ளினம் (Diceros bicornis michaeli) இவை பெரும்பாலும் தான்சானியாவில் காணப்படுகின்றன; (4) மேற்கு ஆப்பிரிக்க உள்ளினம் (Diceros bicornis longipes) - இவ்வகை ஏறாத்தாழ அற்றுவிட்டதாக தற்காலிகமாக 2006 இல் அறிவிக்கபட்டுள்ளது. வெறு 8 விலங்குகள் மட்டும் தனி வளர்ப்பில் உள்ளன [9]
வளர்ந்த கறுப்பு மூக்குக்கொம்பன் அதன் தோள்பட்டைவரை 147–160 செமீ (57.9–63 அங்குலம்) உயரம் இருக்கும். இதன் நீளம் 3.3-3.6 மீ (10.8–11.8 அடி) இருக்கும்[10].
முழு வளர்ச்சி அடைந்த விலங்கு 800 முதல் 1400 கிலோ கிராம் (1,760 to 3,080 பவுண்டு) எடை இருக்கும், விதிவிலக்காக சில 1820 கிலோ கிராம் (4,000 பவுண்டு) வரையிலும் காணப்படும், பெண் விலங்குகள் ஆணைவிட எடை குறைவாக இருக்கும். இரண்டு மூக்குக்கொம்புகளும் கெரட்டின் அல்லது நகமியம் என்னும் பொருளால் ஆனது. இரண்டு கொம்புகளில் பெரியதாக உள்லது மூக்கின் நுனிப்பகுதியில் இருக்கும். இவை பொதுவாக 50 செமீ நீளம் கொண்டதாக இரூக்கும். கறுப்பு மூக்குக்கொம்பன் "வெள்ளை" மூக்குக்கொம்பனைவிட சிறியதாக இருக்கும். கறுப்பு மூக்குக்கொம்பனின் வாயின் முன் பகுதி சற்று குவிந்து கூர்மையாக இருக்கும். இது இலைகளையும் கொப்புகளையும் பற்றி உண்ணுவதற்கு உதவியாக இருக்கும் படி உள்ளது.
இந்திய மூக்குக்கொம்பன்
[தொகு]இந்திய காண்டாமிருகம் அல்லது இந்திய மூக்குக்கொம்பன் என்பது இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலும், நேப்பாளத்திலும், பூட்டானின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றது. இது இமயமலையின் அடிவாரத்தில் உள்ள புல்வெளிகள் மற்றும் அதை அடுத்துள்ள காடுகளில் வாழ்கின்றது. ஐரோப்பியர்கள் முதன்முதலில் அறிந்த மூக்குக்கொம்பன் இந்திய காண்டாமிருகம் ஆகும். இவ்வகையின் மூதாதைய மூக்குக்கொம்பன் முன் இயோசீன் காலத்தில் ஒற்றைப்படைக் குளம்பிகளிடம் இருந்து பிரிந்து படிவளர்ச்சி அடைந்தது. தற்போது உலகிலுள்ள மூக்குக்கொம்பன்களிலேயே உடலளவில் மிகப்பெரிய இரண்டு வகைகளில் இந்திய காண்டாமிருகமும் ஒன்றாகும். அதிக அளவாக ஆணின் தோள்பட்டையின் உயரம் சுமார் 180 செ.மீ வரை இருக்கும். சராசரி ஆணின் உயரம் 170 செ.மீ சுற்றளவு 335 செ.மீ ஆகும். இவ்விலங்கின் வெளிப்புறம் கடினமான தோலினால் பல மடிப்புகளைக் கொண்டதாகும்.[11] தோலின் புறநிறம் பழுப்பு நிறத்திலும் மடிப்புகளுக்கிடையே வெளிறிய சிவப்பு நிறத்திலும் காணப்படும்.
நன்கு வளர்ந்த ஆண் பெண்னை விடக் கூடுதல் எடையைக் கொண்டிருக்கும். ஆண் 2200 முதல் 3000 கிலோ வரையும் பெண் 1600 கிலோ எடையில் இருக்கும். மிக அதிக அளவாக 3500 கிலோ எடையுள்ள விலங்கு ஒன்று காணப்பட்டதாக தரவுகள் உள்ளன. இதன் கொம்பு கெராட்டின் எனப்படும் நகமியம் என்றழைக்கப்படும் பொருளாளால் ஆனதாகும். கன்றுகள் பிறந்து ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அவற்றின் கொம்புகள் வெளிப்படும். பெரும்பாலான வயதுவந்த விலங்குகளுக்கு கொம்பு ஏறத்தாழ 25 செ. மீ நீளம் வளரும்
இந்திய மூக்குக்கொம்பன் மணிக்கு 40 கி.மீ விரைவில் ஓடக்கூடிய திறன் படைத்ததாகும். இந்த விலங்கு மிகக் கூர்மையான மோப்பத் திறனும் கேட்கும் திறனைப் கொண்டது, ஆனால் இதன் பார்வைத் திறன் மிகக் குறைவாகும். இவை பெரும்பாலும் தனித்து வாழும் இயல்பைக் கொண்டதாயினும் குட்டி ஈன்றபின் குட்டி தாயுடனே இருக்கும், இனப்பெருக்கம் செய்யும் பிணைகளும் ஒன்றாகவே இருக்கும்.
உணவு
[தொகு]இவ்விலங்கு புல், இலை, பழங்கள் மற்றும் நீர்ச்செடிகளைத் உண்கிறது. இவை காலை, மாலை நேரங்களில் மேயும். இதன் முகத்தின் மேல்முகட்டையை வைத்து புதர்களில் உள்ள புற்களை மடக்கி பின் மென்று தின்னும் பழக்கத்தைக் கொண்டதாகும்.
சாவா காண்டாமிருகம்
[தொகு]சுமத்ரா காண்டாமிருகம்
[தொகு]வரலாற்றில் உள்ள பதிவுகள்
[தொகு]ஆபிரெஃக்ட் டியூரே மூக்குக்கொம்பனின் படத்துக்கான மர அச்சு ஒன்றை 1515 இல் செதுக்கினார். இது புகழ் பெற்ற ஓர் படிவம். இவர் இவ் விலங்கைப் பார்க்க வாய்ப்பு இல்லாமலே செதுக்கியது குறிப்பிடத்தகுந்தாகும். இதனால் இதில் காட்டப்பட்டுள்ள படம் துல்லியமானதல்ல. இதேவேளை மலேசியா இந்தியா போன்ற நாடுகளில் காண்டாமிருகம் நெருப்பைக் கண்டால் அதை அணைத்துவிட்டுச் செல்தாகக் கூறப்பட்டது. ஆயினும் இது சம்பந்தமாக அண்மைய தகவல்கள் எதுவம் பதிவுசெய்யப்படவில்லை. பிரபல ஆங்கிலத் திரைப்படமான கோட்ஸ் மஸ்ட் பி கேரேசி எனும் திரைப்படத்திலும் இவ்வாறு காண்டாமிருகம் நெருப்பை அணைப்பது போன்ற காட்சி அமைப்புகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ பிரித்தானியா கலைக்களஞ்சியம், "rhinoceros." Encyclopædia Britannica. 2009. Encyclopædia Britannica Online. 3 Mar. 2009 <http://www.search.eb.com/eb/article-9063434>
- ↑ சென்னைப்பல்கலைக்கழகம் (1924–1936). Tamil Lexicon. சென்னை: சென்னைப்பல்கலைக்கழகம். p. 389.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)CS1 maint: date format (link) - ↑ சென்னைப்பல்கலைக்கழகம் (1924–1936). Tamil Lexicon. சென்னை: சென்னைப்பல்கலைக்கழகம். p. 1151.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)CS1 maint: date format (link) - ↑ "White Rhinoceros". National Geographic. பார்க்கப்பட்ட நாள் 2009-03-02.
- ↑ Owen-Smith, Norman (1984). Macdonald, D. (ed.). The Encyclopedia of Mammals. New York: Facts on File. pp. 490–495. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87196-871-1.
- ↑ Rookmaaker, Kees (2003). "Why the name of the white rhinoceros is not appropriate". Pachyderm 34: 88–93.
- ↑ Times Online | News | Environment | Poachers kill last four wild northern white rhinos
- ↑ "African Rhinoceros". Safari Now. Archived from the original on 2008-05-22. பார்க்கப்பட்ட நாள் 2008-03-19.
- ↑ "West African black rhino 'is extinct'". தி டைம்ஸ். சூலை 7, 2006. http://www.timesonline.co.uk/article/0,,3-2260631,00.html. பார்த்த நாள்: 2007-10-09.
- ↑ Dollinger, Peter and Silvia Geser. "Black Rhinoceros". World Association of Zoos and Aquariums. Archived from the original on 2009-07-16. பார்க்கப்பட்ட நாள் 2007-10-09.
- ↑ Prater, S.H. 1948, 1971. The book of Indian Animals (with 28 colour plates by Paul Barruel). Bombay Natural History Society and Oxford University Press, India. 324 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-562169-7.
மேற்கோள்கள்
[தொகு]- Cerdeño, Esperanza (1995), "Cladistic Analysis of the Family Rhinocerotidae (Perissodactyla)" (PDF), Novitates, American Museum of Natural History (3143), பன்னாட்டுத் தர தொடர் எண் 0003-0082, archived from the original (PDF) on 2009-03-27, பார்க்கப்பட்ட நாள் 2009-02-28
- Chapman, January 1999. The Art of Rhinoceros Horn Carving in China. Christies Books, London. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-903432-57-9.
- Emslie, R. and Brooks, M. (1999), African Rhino. Status Survey and Conservation Action Plan, IUCN/SSC African Rhino Specialist Group. IUCN, Gland, Switzerland and Cambridge, UK, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2831705029
{{citation}}
: CS1 maint: multiple names: authors list (link) - Foose, Thomas J. and van Strien, Nico (1997), Asian Rhinos – Status Survey and Conservation Action Plan, IUCN, Gland, Switzerland, and Cambridge, UK, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-8317-0336-0
{{citation}}
: CS1 maint: multiple names: authors list (link) - Hieronymus, Tobin L. (2006), "Structure of White Rhinoceros (Ceratotherium simum) Horn Investigated by X-ray Computed Tomography and Histology With Implications for Growth and External Form" (PDF), Journal of Morphology, 267: 1172–1176, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/jmor.10465, archived from the original (PDF) on 2008-02-28, பார்க்கப்பட்ட நாள் 2009-02-28
{{citation}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - Laufer, Berthold. 1914. "History of the Rhinoceros." In: Chinese Clay Figures, Part I: Prolegomena on the History of Defence Armour. Field Museum of Natural History, Chicago, pp. 73–173.
வெளி இணைப்புகள்
[தொகு]- Rhino Species & Rhino Images page on the Rhino Resource Center
- International Rhino Foundation பரணிடப்பட்டது 2007-10-11 at the வந்தவழி இயந்திரம்
- The Ol Pejeta Conservancy, Kenya பரணிடப்பட்டது 2007-10-16 at the வந்தவழி இயந்திரம்
- SOS Rhino
- Save the Rhino
- The SAVE FOUNDATION of Australia
- Rhinoceros entry on இயற்கைக்கான உலகளாவிய நிதியம் website.
- Rhino photographs and information