சோச்சிவான் கோயில், மத்திய சாவகம்
சோச்சிவான் கோயில் (Sojiwan) (ஜாவானீஸ் ஒலிப்பமைப்பு: Såjiwan, அல்லது சில நேரங்களில் Sajiwan) ஒரு 9th ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மகாயான பௌத்தக் கோயில் ஆகும்.இந்தக் கோயில் இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் கிளாப்டன் ரீஜென்சியில் கேபோன் தலேம் கிடுல் கிராமத்தில் அமைந்துள்ள கோயிலாகும். இக்கோயில் பிரம்பானான் கோயிலுக்கு தென்கிழக்கில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோயில் பிரம்பனன் சமவெளியில் காணப்படுகின்ற, அப்பகுதியில் பரவலாக காணப்படுகின்ற கோயில்களில் ஒன்றாகும்.
வரலாறு
[தொகு]இந்தோனேசியாவின் தேசிய அருங்காட்சியகத்தில் தற்போது சேமித்து வைக்கப்பட்டுள்ள 829 சாகா (பொ.ச. 907) தேதியிட்ட ருகாம் கல்வெட்டில், நினி ஹாஜி ரக்ரியன் சஞ்சிவானாவால் என்பவரால் ருகாம் கிராமம் மீட்டெடுப்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பு இந்தக் கிராமம் எரிமலை வெடிப்பால் பேரழிவிற்கு உள்ளானது. அதனை சரிசெய்யும் பொருட்டு, ருகாம் கிராமத்தில் வசித்தவர்கள் லிம்வங்கில் அமைந்திருந்த ஒரு புனித கட்டிடத்தை கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தப் புனித இடம் சோச்சிவான் கோயில் என்று அடையாளப்படுத்தப்பட்டது. அக்கல்வெட்டில் புரவலர் என்ற பெயரில் நினி ஹாஜி ரக்ரியன் சஞ்சிவானா என்ற பெயர் உள்ளது. அவர் பிரமோதவர்த்தனி என்று சுட்டப்பட்டுள்ளார். இக்கோயிலில் அவரது பெயரான சஜிவான் என்பது காணப்படுகிறது. அக்கோயில் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் பொ.ச. 842 முதல் 850 வரையேயான ஆண்டுகளில் கட்டப்பட்டதாகும். தோராயமாக அதே சகாப்தத்தில் அருகிலுள்ள புளூசன் கோயில் கட்டப்பட்ட காலத்திலேயே கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.
சோச்சிவான் கோயில் 1813 ஆம் ஆண்டில் சர் ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸின் துணை அலுவலரான கர்னல் கொலின் மெக்கன்சியால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. பிரம்பனான் சமவெளியைச் சுற்றியுள்ள தொல்பொருள் எச்சங்களை ஆராய்ந்த அவர் கோயிலைச் சுற்றியுள்ள சுவரின் இடிபாடுகளை மீண்டும் கண்டுபிடித்தார். 1996 ஆம் ஆண்டில் அரசாங்கம் புனரமைப்புப் பணி மேற்கொள்ள தொடங்கப்பட்ட காலம்வரை இக்கோயில் இடிபாட்டுடனேயே பல தசாப்தங்களாக இருந்தது. 1999 முதல் கோயில் கோயில் புனரமைப்பு திட்டத்திற்கான பயிற்சி மற்றும் கல்வி மையமாக மாறியது. புனரமைப்பின் போது கோயிலைச் சுற்றியுள்ள சுவர் அமைப்பும், கோயிலுக்கு முன்னால் இருந்த வழியும் அகழ்வாராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாக புனரமைப்பு திட்டம் நிறுத்தப்பட்டது. புனரமைக்கப்பட்ட கட்டிட பாகங்கள் மற்றும் கட்டுமானத்தின் போது போடப்பட்டிருந்த சாரம் அனைத்தும் விழுந்தன. இந்தோனேசிய சுற்றுலா மற்றும் படைப்பாற்றல் பொருளாதார அமைச்சர் மாரி பங்கெஸ்டு அவர்களால் 2011 டிசம்பரில் புனரமைப்பு திட்டம் நிறைவு செய்யப்பட்டது. [1] இதனை புனரமைப்பு செய்வதற்கு 15 ஆண்டுகள் ஆயின. இதற்கான செலவு 8.27 பில்லியன் ரூபா ஆகும்.
கட்டிடக்கலை
[தொகு]இக்கோயில் அன்டேசைட் கற்களால் கட்டப்பட்டதாகும். அதன் அளவு அமைப்பு போன்றவை போராபுதூர் அருகேயுள்ள மெண்டுட் என்னுமிடத்தில் உள்ளவை போலவே காணப்படுகின்றன. கோயில் வளாகம் 8,140 ச.மீ. பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. முதன்மைக் கட்டட அமைப்பு 401.3 ச.மீ. அளவில் உள்ளது. உயரம் 27 மீ. ஆகும். கோயிலின் அடித்தளத்தில் அதில் 20 புடைப்புச்சிற்பங்கள் உள்ளன. அவை இந்தியாவின் பஞ்சதந்திரம் அல்லது புத்த ஜாதகக்கதைகளோடு தொடர்பு உடையவையாக உள்ளன. இந்த 20 புடைப்புச்சிற்பங்களில் 19 மட்டுமே இப்போது உள்ளன. மேலே செல்லும் படியின் இரு பெரிய மகரங்கள் உள்ளன. கோயிலின் உட்புறத்தில் இரு மாடங்கள் உள்ளன. அவை புத்தர் மற்றும் போதிசத்துவர் சிலைகளை வைக்கக்கூடிய தாமரைப்பீடத்தைக் கொண்டு அமைந்துள்ளன. தற்போது அவ்விடத்தில் எவ்வித சிலைகளும் காணப்படவில்லை. கோயிலின் கூரை பிரமிடு வடிவதைப் போல அமைந்துள்ளது. மேலே தாது கோபுரங்கள் அமைந்துள்ளன.
புனரமைப்பின்போது இரு வரிசையிலான சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கோயில் வளாகத்தைச் சுற்றி அமைந்திருந்த அந்த சுவர்கள் முதன்மைக் கோயிலில் இருந்து 14 மீ மற்றும் 30 மீ தொலைவில் இருந்தன. மற்றும் பாதை வழிகள், படிக்கட்டகள், உடைந்த கல் துண்டுகள் போன்றவை வளாகத்தின் பகுதியில் காணப்பட்டன. அவற்றை வைத்து நோக்கும் இப்பகுத்யானது பெரிய கோயில் வளாகத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்தியது. அங்கு பெர்வாரா கோயில்கள் எனப்படுகின்ற பரிவாரக் கோயில்கள் அல்லது துணைக் கோயில்கள் அமைந்திருந்தன. அவை ஒரு காலகட்டத்தில் முதன்மைக்கோயில் இருந்த இடத்தில் இருந்திருக்க வேண்டும் என்று எண்ணப்படுகிறது.[2]
இருப்பிடம்
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ "Hari Ini Mari Elka Pangestu Resmikan Candi Sojiwan". tribunnews.com (in Indonesian). Tribun Jateng News. 16 December 2011. பார்க்கப்பட்ட நாள் 7 July 2013.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "BP3: diperkirakan ada situs sekitar Candi Sojiwan". antaranews.com (in Indonesian). Antara News. பார்க்கப்பட்ட நாள் 7 July 2013.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)