உள்ளடக்கத்துக்குச் செல்

கூசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூசா அல்லது கூஜா என்பது புடைத்த நடுப்பகுதியையும் சிறிய வாய்ப் பகுதியையும் அதற்கேற்ற மூடியையும் கொண்ட கலன் ஆகும்.[1] கூஜா என்பது ஓர் உருது மொழிச் சொல்லாகும். இதன் சரியான தமிழ் மொழிபெயர்ப்பு வடிவம் குடுக்கை அல்லது குடுவை என்பதென சென்னைப் பேரகரமுதலி குறிப்பிடுகிறது.

வடிவமைப்பு

[தொகு]

முற்றிய சுரைக்காயின் ஒடுங்கிய மேல் புறத்தினை வட்டமாக வெட்டி அதன் உட்புறத்தைக் கோதி எடுத்த பின் அதனை குடுவையாகப் பாவிக்கும் வழமை வழக்கில் இருக்கின்றது. இதனைச் சுரைக் குடுவை என அழைப்பதில் இருந்து கூஜா என அழைக்கப்படும் குடுவையையும் அதன் அமைப்பையும் ஓரளவு அறிய முடியும்.

இக் கூஜா என்ற சொல்லும் அது குறிப்பிடும் பொருளும் அதன் பயன்பாடும் இடத்துக்கிடம் மாறுபடுகின்றது. குறிப்பாக இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட சிங்கள, தமிழ், இஸ்லாமிய மக்கள் மத்தியில் கூஜா எனக் குறிப்பிடும் உபகரணம் மட்பாண்டத்தினால் செய்யப் பட்ட கழுத்துப் புறம் நீண்ட கீழ் புறம் அகன்று உருண்டை வடிவான அடிப்புறம் தட்டையான அமைப்புக் கொண்ட தண்னீர் தாங்கியாகும். அது தனக்கான தண்ணீர் குடிக்கும் குவளையையும் இணையாகக் கொண்டிருக்கும். மூடி கூஜாவின் மேற்புறத்தை மூடி தண்ணீருக்கும் பாதுகாப்பினை அளிக்கின்ற அதே வேளை தண்ணீரினை அதற்குள் ஊற்றி அருந்தும் வண்ணமாக அதனோடு சேர்ந்தும் இருக்கும்.

இம் மட்பாண்டத்தை ஆக்குகின்ற மட்பாண்டக் கலைஞர்கள் இதனை ஆக்குகின்ற போது தம் கலை வண்ணத்தை; எண்ண வெளிப்பாடுகளை பானையைப் புனைகின்ற பொழுதுகளில் வெளிப்படுத்தி இருப்பர். அது அக் கலைஞர்களின் ஆற்றல், கற்பனை, இயல்புநிலை, விருப்பப் பாடுகள் என்பன பொறுத்து பல தன்மைகளைப் பெற்றிருக்கும்.

சுமார் 40, 50 வருடங்களுக்கு முன்னர் வழக்கத்தில் இருந்த கூஜா என்ற குடிநீர் பாதுகாத்து வைத்திருந்த இவ் உபகரணத்தின் கழுத்துப் புறம் சுமார் ஒரு அடி வரை நீண்டிருந்தது. தற்போதய பாவனையில் அதன் கழுத்துப் புறம் மிகக் குறுகியதாக வந்திருப்பதைக் காணலாம்.

பயன்பாடு

[தொகு]

மின்சார சாதனங்கள் குறைந்திருந்த அல்லது அருகிக் காணப்பட்ட காலங்களில் கூசாவின் பயன்பாடு மிகப் பிரபலமாக இருந்தது. பொதுவாகக் கழிமண்ணினால் வனையப்பட்டு நெருப்பில் சுட்டு உருவாக்கப்படும் பாத்திரங்கள் வெப்பவலைய நாடுகளில் நாளாந்த பாவனைக்கு உகந்ததாக இருந்தது. குறிப்பாக கூஜாவினுள் ஊற்றி வைக்கப் படும் நீர் குளிர்ச்சியைப் பேணும் என பொதுவாக நம்பப் பட்டதால் அது அம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.

காலப் போக்கில் மின்சாரசாதனங்களின் பாவனை அதிகரிப்பு, தொழில் நுட்ப முன்னேற்றங்கள், மக்களின் வாழ்க்கைத் தர உயர்வு, இத்தகைய சாதனங்களைச் செய்கின்ற கலைஞர்களுக்கு போதிய அங்கீகாரம், பணவரவு, கெளரவம் கிட்டாமை போன்ற பிற காரணங்களால் கூஜாவின் பாவனையும் கூஜாவினைச் செய்வோரின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து வருகின்றது.

தற்காலங்களில் filter water bottle water, என்பனவும் கண்ணாடிக் கூஜாக்கள் குவளைகளும் பிளாஸ்டிக்கினால் செய்யப் படும் தண்ணீர் கொள்கலன்களும் கூஜாவின் இடத்தை நிரப்ப, மட்பாண்டத்தினால் செய்யப்பட்ட கூஜா தன் இடத்தை இழந்து வருகிறது.

இந்தியாவில் கூஜா என்ற சொல்லும் அது குறிப்பிடும் பொருளும் வேறானதாகும். அதன் பாவனையும் பயன்பாடும் வேறானது. இலங்கையர்கள் தூக்குச் செம்பு அல்லது பூட்டுச் செம்பு என அழைப்பதையே இந்தியப் பண்பாட்டிற்குரிய மக்கள் கூஜா என அழைக்கின்றனர்.

அவர்களால் குறிப்பிடப்படும் கூஜா என்பது குடிப்பதற்கான நீர், பால் போன்ற திரவ பத்தார்த்தங்களைப் பாதுகாத்து வைக்கும் அதே நேரம் கொண்டு செல்லத்தக்க விதமாகவும் இருக்கும். இது உலோகத்தினால் ஆக்கப் பட்ட பொருளாகும்.

”கூஜா தூக்கி” பாரத மக்களிடையே வழங்கி வரும் சொற்பதம் ஒருவர் தன் சுய இலாபத்திற்காக ஒருவரைத் திருப்தி செய்யும் நோக்கில் தன்னைத் தாழ்த்திக் கொண்டு அவருக்குப் பணிவிடைகள் செய்யும் ஒருவரைக் குறித்து நிற்கிறது.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூசா&oldid=1968711" இலிருந்து மீள்விக்கப்பட்டது