காமதேனு
காமதேனு | |
---|---|
காமதேனு சிலை | |
அதிபதி | பசுக்களின் தாய் |
தேவநாகரி | कामधेनु |
சமசுகிருதம் | Kāmadhenu |
வகை | தேவி |
இடம் | தேவ உலகம் |
துணை | காசிபர் |
காமதேனு (சமக்கிருதம்: कामधेनु , Kāmadhenu ) என்பது தேவ லோகத்தில் வசிக்கின்ற, அனைத்து பசுக்களுக்கும் தாய் என இந்து மதத்தில் விவரிக்கப்படும் ஒரு தெய்வீக பசு. இந்து தொன்மவியல் அடிப்படையில் கேட்கின்ற பொருளை தருகின்ற சக்தி படைத்தாக காமதேனு சித்தரிக்கப்படுகிறது. பெரும்பாலும் காமதேனு மற்ற கால்நடைகளின் தாயாக சித்தரிக்கப்படுகிறது. காமதேனுவை சுரபி என்ற பெயரிலிலும் அழைக்கின்றனர். இதற்கு நந்தினி, பட்டி என இரு மகள்கள் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
உருவத்தில் காமதேனு பொதுவாக ஒரு பெண் தலை மற்றும் மார்பகங்கள், ஒரு பறவையின் இறக்கைகள், ஒரு மயிலின் வால் கொண்ட மற்றும் உடலில் பல்வேறு தெய்வங்களைக் உள்ளடக்கிய வெள்ளை பசுவாக சித்தரிக்கப்படுகிறாள். பூமிக்குரிய காமதேனுவின் உருவங்களாகக் கருதப்படும் பசுக்களை இந்துக்கள் வணங்குகின்றனர்.
இந்து சமய நூல்கள் காமதேனுவின் பிறப்பைப் பற்றிய பல்வேறு விளக்கங்களை வழங்குகின்றன. பிரபஞ்சப் பாற்கடலைக் கடைந்த போது காமதேனு வெளிப்பட்டாள் என்று சில நூல்கள் கூறுகின்றன. மற்றன காமதேனு படைப்பாளி கடவுளான தக்கன்னின் மகள் என்றும், காசியப முனிவரின் மனைவி என்றும் விவரிக்கின்றன. காமதேனு ஜமதக்கினி அல்லது வசிட்டர் (இருவரும் பழங்கால முனிவர்கள்) வசம் இருந்ததாகவும், முனிவரிடமிருந்து அவளைத் திருட முயன்ற அரசர்கள் இறுதியில் தங்கள் செயல்களுக்கு மோசமான விளைவுகளைச் சந்தித்ததாகவும் நூல்கள் கூறுகின்றன. காமதேனு பிரசாதங்களில் பயன்படுத்தப்படும் பால் மற்றும் பால் பொருட்களை வழங்கியது மற்றும் பாதுகாக்க வீரர்களை உருவாக்கும் திறன் கொண்டது. காமதேனு உலகமான கோலோகம் அல்லது பாதாள உலகத்தில் வசிப்பதாகவும் விவரிக்கப்படுகிறது.
சொற்பிறப்பியல்
[தொகு]காமதேனு பெரும்பாலும் சுரபி என்ற பெயரால் அழைக்கப்படுகிறார், இது ஒரு சாதாரண பசுவிற்கு ஒத்த பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.[1] சுரபி என்ற பெயர் மணம் மிக்கவள் என்று பொருள் தருவதாகவும்.[2] மானியர் வில்லியம்ஸ் சமசுகிருத-ஆங்கிலஅகராதி (1899) படி, சுரபி என்றால் மணம், வசீகரம், மகிழ்ச்சி என்று பொருள் தருவதாகவும். இது குறிப்பாக தெய்வீகப் பசுவான காமதேனுவைக் குறிக்கலாம் மற்றும் கால்நடைகளின் தாயான காமதேனு சில சமயங்களில் மாத்ரிகா ("தாய் தெய்வம்") என்றும் வர்ணிக்கப்படுகிறார்.[3] காமதேனுவுக்குக் உண்டான பிற பெயர்கள் சபலா ("புள்ளிகள்") மற்றும் கபிலா ("சிவப்பு"). [4]
"காமதேனு" என்பது "விரும்பப்பட்ட அனைத்தும் யாரிடமிருந்து பெறப்படுகிறதோ" அல்லது "தாராளமான பசு" என்று பொருள்படும்.[5] மகாபாரதம் மற்றும் தேவி பாகவத புராணத்தில், வீடுமர் பிறந்த சூழலில், பசு நந்தினிக்கு காமதேனு என்ற அடைமொழி வழங்கப்படுகிறது.[6] மற்ற நிகழ்வுகளில், நந்தினி சுரபி-காமதேனுவின் பசு-மகள் என்று விவரிக்கப்படுகிறார். நந்தினியையும் சுரபியையும் காமதேனுவின் இணைச் சொற்கள் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர்.[1]
உருவப்படம்
[தொகு]காமதேனு என்பது இந்து மதத்தில் புனிதமான பசுவின் பொதுவான பெயர் மற்றும் அனைத்து செழிப்புக்கும் ஆதாரமாக கருதப்படுகிறது. காமதேனு தேவியின் (இந்து தெய்வீக தாய்) ஒரு வடிவமாகக் கருதப்படுகிறார். மேலும் பெரும்பாலும் பசுவாக விவரிக்கப்படும் வளமான பூமி தாயுடன் (பிருத்வி) நெருங்கிய தொடர்புடையவர்.[4] இந்து மதத்தில், காமதேனு தூய்மை மற்றும் கருவுறுதல், தியாகம் மற்றும் தாய்மை இயல்பு, மனித வாழ்வின் ஆதாரம் ஆகியவற்றைக் குறிக்கிறது.
அனைத்து கடவுள்களும் காமதேனுவின் உடலில் வசிப்பதாக நம்பப்படுகிறது. பொதுவான நான்கு கால்களில் வேதங்கள், கொம்புகளில் பிரம்மா (முனை), விஷ்ணு (நடு) மற்றும் சிவன் (அடி) ஆகிய முக்கடவுள்கள், கண்ககளில் சூரியன் மற்றும் சந்திரன், தோள்களில் அக்னி மற்றும்வாயு மற்றும் இமயமலை கொண்ட வடிவத்தில் சித்தரிக்கப்படுகிறார்.[7][8] காமதேனு பஞ்சபூதங்களை குறிப்பதாக கூறப்படுகின்றது.
பிறப்பு மற்றும் குழந்தைகள்
[தொகு]மகாபாரதம் ( ஆதி பர்வம்) காமதேனு அண்ட சமுத்திரத்தை (சமுத்திர மந்தனை) தேவர்கள் மற்றும் அசுரர்ககள் அமிர்தத்தை பெறுவதற்காக கடைந்த போது எழுந்ததாக பதிவு செய்கிறது.[1] எனவே, அவள் தேவர்கள் மற்றும் அசுரர்களின் சந்ததியாகக் கருதப்படுகிறாள். அவள் படைப்பாளி-கடவுள் பிரம்மாவால் பால் மற்றும் நெய் வழங்க கட்டளையிடப்பட்டார்.
சமுத்திர மந்தனத்திலிருந்து எழுந்த அமிர்தத்தை அருந்திய பிறகு "படைப்பாளர்" (பிரஜாபதி) தக்கன்னின் ஏப்பத்தில் இருந்து சுரபி பிறந்தாள் என்று காவியத்தின் அனுசாசன பருவம் விவரிக்கிறது. மேலும், சுரபி கபில பசுக்கள் என்று அழைக்கப்படும் பல தங்கப் பசுக்களைப் பெற்றெடுத்தாள், அவை உலகின் தாய் என்று அழைக்கப்படுகின்றன.[2][9] சதபத பிராமணமும் பிரஜாபதி தனது சுவாசத்திலிருந்து சுரபியை உருவாக்கினார் என்று இதே போன்ற ஒரு கதையைச் சொல்கிறது.[2] மகாபாரதத்தின் உத்யோக பருவம் படைப்பாளி-கடவுள் பிரம்மா அமிர்தத்தை அருந்திய பிறகு அதில் சிலவற்றை வாந்தி எடுத்தார், அதிலிருந்து சுரபி தோன்றினார் என்று ஒரு கதையைச் சொல்கிறது.[1][10]
ராமாயணத்தின் படி, சுரபி காசியப முனிவர் மற்றும் அவரது மனைவி க்ரோதவாஷா (தக்கன்னின் மகள்) மகள் ஆவர். அவரது மகள்கள் ரோகினி மற்றும் கந்தர்வி முறையே கால்நடைகள் மற்றும் குதிரைகளின் தாய்கள் ஆவர். சுரபி அனைத்து பசுக்களுக்கும் தாய் என்று உரையில் விவரிக்கப்படுகிறார். இருப்பினும், விஷ்ணு புராணம் மற்றும் பாகவத புராணம் போன்ற புராணங்களில், சுரபி தக்கன்னின் மகளாகவும், காசியப முனிவரின் மனைவியாகவும், பசுக்கள் மற்றும் எருமைகளின் தாயாகவும் விவரிக்கப்படுகிறார்.[1][11]
மச்ச புராணம் சுரபியின் பிறப்பிற்கு இரண்டு முரண்பட்ட விளக்கங்களைக் குறிப்பிடுகிறது. ஒரு அத்தியாயத்தில், சுரபியை பிரம்மாவின் மனைவி மற்றும் அவர்களது சங்கம் யோகீஸ்வரி என்ற பசுவை உருவாக்கியது, பின்னர் அவள் பசுக்களின் தாய் என்று விவரிக்கிறது. மற்றொரு நிகழ்வில், அவள் தக்கன்னின் மகளாகவும், காசியப முனிவரின் மனைவியாகவும், பசுக்களின் தாயாகவும் விவரிக்கப்படுகிறார்.[12] மகாபாரதத்தின் பிற்சேர்க்கையான அரி வம்சம், சுரபியை அமிர்தம், பிராமணர்கள், பசுக்கள் மற்றும் ருத்ரர்களின் தாய் என்று அழைக்கிறது.[13]
கிருட்டிணனும் ராதையும் மகிழ்ந்து கொண்டிருந்த போது தாகம் ஏற்பட்ட போது, கிருட்டிணர் தனது உடலின் இடதுபுறத்தில் இருந்து சுரபி என்ற பசுவையும், மனோரதா என்ற கன்றையும் உருவாக்கி, பசுவின் பால் கறந்தார் என்று தேவி பாகவத புராணம் கூறுகிறது. பால் குடிக்கும் போது, பால் பானை தரையில் விழுந்து உடைந்து, பால் சிந்தியது, அது திருப்பாற்கடலாக மாறியது. பின்னர் சுரபியின் தோலின் துளைகளில் இருந்து ஏராளமான பசுக்கள் வெளிப்பட்டு, கிருட்டிணரின் பசு மேய்க்கும் தோழர்களுக்கு அவரால் வழங்கப்பட்டன. பின்னர் கிருட்டிணர் சுரபியை வணங்கி, அவள்-பசு, பால் மற்றும் செழிப்பைக் கொடுப்பவள், தீபாவளியில் வழிபட வேண்டும் என்று ஆணையிட்டார்.[1][14]
வரலாறு
[தொகு]புனித பசுவான காமதேனு ஜமதக்னி முனிவருடன் வசித்ததாக ஒரு புராணக்கதை கூறுகிறது. காவியமான மகாபாரதத்தில் தோன்றும் ஆரம்ப பதிப்பு, ஆயிரம் ஆயுதங்களைக் கொண்ட மன்னன் கார்த்தவீரிய அருச்சுனன் ஜமதக்னியின் குடிலை அழித்து காமதேனுவின் கன்றுக்குட்டியைக் கைப்பற்றியதாக விவரிக்கிறது. கன்றுக்குட்டியை மீட்க, ஜமதக்னியின் மகன் பரசுராமன் அரசனைக் கொன்றான், பின்னர் அரசனின் மகன்கள் ஜமதக்னியைக் கொன்றனர். இதனால் பரசுராமர் பின்னர் 21 முறை சத்திரிய ("வீரர்") இனத்தை அழித்தார் மற்றும் அவரது தந்தை தெய்வீக அருளால் உயிர்த்தெழுப்பப்பட்டார்.[15] மன்னன் காமதேனுவையும் அவளது கன்றையும் கடத்திச் சென்றதாகவும், பரசுராமன் மன்னனை வென்று பசுக்களை தன் தந்தையிடம் திருப்பிக் கொடுத்ததாகவும் பாகவத புராணம் குறிப்பிடுகிறது.[15] அருச்சுனன் அவளைப் பிடிக்க முயன்றபோது, காமதேனு தன் சொந்த சக்தியால் அவனையும் அவனது படையையும் தோற்கடித்து சொர்க்கத்திற்கு பறந்து சென்றதாக பத்ம புராணம் குறிப்பிடுகிறது.[15]
பிரம்மாண்ட புராணத்தில், காமதேனு ஜமதக்னியின் துறவறத்திற்குச் செல்லும் போது, கார்த்தவீரிய அருச்சுனன் படைகளுக்கு இடமளிக்கும் வகையில் தனது சக்தியால் ஒரு பெரிய நகரத்தை உருவாக்குகிறார். தனது ராஜ்ஜியத்திற்குத் திரும்பியதும், அருச்சுனன் தெய்வீகப் பசுவைப் பிடிக்க மந்திரி சந்திரகுப்தனை வற்புறுத்துகிறான். மந்திரி சந்நியாசத்திற்குத் திரும்பி, பசுவைக் கொடுக்க முனிவரை சமாதானப்படுத்த முயன்றார், அது பலனளிக்காத போது அவர் காமதேனுவைப் பலவந்தமாகப் பறிக்க முயற்சிக்கிறார். அதைத் தொடர்ந்து நடந்த சண்டையில், முனிவர் கொல்லப்படுகிறார், காமதேனு வானத்திற்கு தப்பிச் செல்கிறார். அதற்கு பதிலாக சந்திரகுப்தன் அவளது கன்றினை தன்னுடன் அழைத்துச் செல்கிறான்.[15]
பிரம்ம வைவர்த்த புராணம் கபிலா என்று அழைக்கப்படும் வானப் பசு, தன்னைக் கைப்பற்ற வந்த மன்னனின் படையை ஜமதக்னி தோற்கடிக்க பல்வேறு ஆயுதங்களையும் ஒரு படையையும் உற்பத்தி செய்கிறது என்று கூறுகிறது. மன்னரே போருக்கு சவால் விட்டபோது, கபிலா ஜமதக்னிக்கு தற்காப்பு கலைகளை கற்பித்தார். ஜமதக்னி படைக்கு தலைமை தாங்கி அரசனையும் அவனது படையையும் பலமுறை தோற்கடித்தார். இறுதியாக தத்தாத்ரேய கடவுளால் வழங்கப்பட்ட தெய்வீக ஈட்டியின் உதவியுடன், மன்னன் ஜமதக்னியைக் கொன்றான்.[15]
காமதேனுவைப் பற்றி ராமாயணம் இதேபோன்ற கதையை முன்வைக்கிறது. ஒருமுறை, மன்னன் விசுவாமித்திரர் தன் படையுடன் வசிஷ்டமுனிவரின் ஆசிரமத்திற்கு வந்தான். முனிவர் அவரை வரவேற்று, காமதேனுவால் கொடுக்கப்பட்ட ஒரு பெரிய விருந்து வழங்கினார். ஆச்சரியமடைந்த மன்னன், முனிவரிடம் காமதேனுவை கொடுக்கும் படியும், அதற்குப் பதிலாக ஆயிரம் சாதாரண பசுக்கள், யானைகள், குதிரைகள் மற்றும் நகைகள் ஆகியவற்றைக் கொடுப்பதாக கூறினார். இருப்பினும், முனிவரின் புனித சடங்குகள் மற்றும் தொண்டுகளை நிறைவேற்றுவதற்கு அவசியமான காமதேனுவை பிரிந்து செல்ல முனிவர் மறுத்துவிட்டார். கிளர்ந்தெழுந்த விசுவாமித்திரர் வலுக்கட்டாயமாகப் காமதேனுவை பிடித்தார். ஆனால் அவள் அரசனின் ஆட்களுடன் போரிட்டு தன் வசிஷ்டரிடம் திரும்பினாள். மன்னனின் படையை அழிக்குமாறு வசிஷ்டருக்கு உத்தரவிட, முனிவரும் அவள் விருப்பத்தைப் பின்பற்றினார். இந்த நிகழ்வு வசிஷ்டருக்கும் விஸ்வாமித்திரருக்கும் இடையே பெரும் போட்டிக்கு வழிவகுத்தது, பின்னனர் விஸ்வாமித்திரர் தனது அரசை துறந்து, வசிஷ்டரை தோற்கடிக்க ஒரு பெரிய முனிவராக ஆனார்.[16]
சுவாமி வாகனம்
[தொகு]சிவன், முருகன், விநாயகன், பெருமாள் ஆகியோருக்கு வாகனமாக வீதி உலா வருகையில் காமதேனு சில சமயங்களில் உள்ளது. பெரும்பாலும் மரத்தினால் செய்யப்பட்ட வாகனமாக இருந்தாலும், தங்கம் வெள்ளியில் செய்த வாகனங்கள் சில கோவில்களில் உள்ளன.[17]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Mani pp. 379–81
- ↑ 2.0 2.1 2.2 Jacobi, H. Encyclopaedia of Religion and Ethics.
- ↑ Monier-Williams, Monier (2008) [1899]. "Monier Williams Sanskrit-English Dictionary". University of Cologne. p. 1232.
- ↑ 4.0 4.1 Biardeau, Madeleine (1993). Asian mythologies. University of Chicago Press. p. 99.
- ↑ Monier-Williams, Monier (2008) [1899]. "Monier Williams Sanskrit-English Dictionary". University of Cologne. p. 272.
- ↑ Vijñanananda, Swami (1921–1922). "The S'rîmad Devî Bhâgawatam: Book 2: Chapter 3". Sacred texts archive. பார்க்கப்பட்ட நாள் 13 November 2010.
- ↑ Smith, Frederick M. (2006). The self possessed: Deity and spirit possession in South Asian literature and civilization. Columbia University Press. pp. 404, pp. 402–3 (Plates 5 and 6 for the two representations of Kamadhenu). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-13748-5.
- ↑ Venugopalam, R. (2003). Rituals and Culture of India. B. Jain Publishers. pp. 119–120. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8056-373-7.
- ↑ Ganguli, Kisari Mohan (1883–1896). "SECTION LXXVII". The Mahabharata: Book 13: Anusasana Parva. Sacred texts archive.
- ↑ Ganguli, Kisari Mohan (1883–1896). "SECTION CII". The Mahabharata: Book 5: Udyoga Parva. Sacred texts archive.
- ↑ Aadhar, Anand. "Bhagavata Purana: Canto 6: Chapter 6: The Progeny of the Daughters of Daksha". பார்க்கப்பட்ட நாள் 7 November 2010.
- ↑ A Taluqdar of Oudh. The Matsya Puranam. Cosmo Publications for Genesis Publishing Pvt Ltd.
- ↑ Hopkins p. 173
- ↑ Vijñanananda, Swami (1921–1922). "The S'rîmad Devî Bhâgawatam: On the anecdote of Surabhi". Sacred texts archive. பார்க்கப்பட்ட நாள் 13 November 2010.
- ↑ 15.0 15.1 15.2 15.3 15.4 Donaldson, Thomas Eugene (1995). "The Cult of Parasurama and its Popularity in Orrisa". In Vyas, R. T. (ed.). Studies in Jaina art and iconography and allied subjects. The Director, Oriental Institute on behalf of Registar, MS, University of Baroda. pp. 163–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-316-8.
- ↑ Venkatesananda, Swami (1988). The concise Rāmāyaṇa of Vālmīki. SUNY Press. pp. 31–2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88706-862-1.
- ↑ "Kamadhenu". Dinamalar.