கருச்சிதைவு
கருச்சிதைவு (ⓘ) (Miscarriage) என்பது பெண்கள் கர்ப்பமாக இருக்கும் நிலையில், முளையமோ அல்லது முதிர்கருவோ மேலும் உயிருடன் இருக்க முடியாத ஒரு நிலையில் தானாகவே அழிந்துபோதல் அல்லது சிதைந்துபோதலைக் குறிக்கும். இது பொதுவாகக் கருத்தரிப்பின் ஆரம்ப காலத்தில், அதாவது கருக்காலத்தின் 20 கிழமைக்குள் தன்னிச்சையாக நிகழும் ஒரு சிக்கலான நிலையாகும்[1]. இந்தக் கால எல்லை நாட்டுக்கு நாடு வேறுபட்டுக் கூறப்படுகின்றது. சிலசமயம் இந்தக் காலை எல்லை 24 கிழமைகளுக்குள்ளாக நிகழும் அழிவாகக் கொள்ளப்படுகின்றது[2].
உலக சுகாதார அமைப்பானது கருத்தரிப்பில் 23 கிழமைகளுக்குள் நிகழும், 500 கிராம் நிறைக்குக் குறைவான, முதிர்வுறா முதிர்கருவின் இழப்பை கருச்சிதைவென வரைவிலக்கணப்படுத்துகின்றது[3]. அத்துடன் மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்படும் கருப்பங்களில் 12 - 15 % கருச்சிதைவில் முடிவதாகவும், கருப்பம் தரிக்கும் வயது அதிகரிக்கையிலே கருச்சிதைவின் வீதமும் அதிகரிப்பதாகக் கூறுகின்றது[3]>[4].
சொல்லியல்
[தொகு]கருத்தரிப்புக் காலத்தின் மிக ஆரம்ப நிலையில், இறுதி மாதவிடாய்க் காலத்திலிருந்து 6 கிழமைகளுக்குள் நிகழும் கருச்சிதைவை 'முன்னதான கருப்ப இழப்பு' (early pregnancy loss)[5] அல்லது 'வேதியியல் கருத்தரிப்பு' (chemical pregnancy) என்று[6] அழைப்பர். கருச்சிதைவானது 6 கிழமைக்குப் பின்னர் நிகழ்ந்தால் அது 'தன்னிச்சையான கருக்கலைப்பு' அல்லது கருச்சிதைவு என்று அழைக்கப்படும்[5]. மருத்துவ ரீதியில் பொதுவாகத் தன்னிச்சையாகவோ அல்லது தூண்டுதல் மூலமோ முளையம் அல்லது முதிர்கரு சிதைந்து கருப்பையிலிருந்து அகற்றப்படும்போது, அது கருக்கலைப்பு (Abortion) என்றே அழைக்கப்படுகிறது. ஆனால் இது தன்னிச்சையாக நிகழும்போது, பெண்கள் அதனை கருக்கலைப்பெனக் கூறுவதை விரும்புவதில்லை. காரணம் கருக்கலைப்பு என்னும்போது அது தாமாக விரும்பி கருவைக் கலைத்தது போன்ற தோற்றத்தைத் தருவதாகும். எனவே இந்தத் தெளிவற்ற நிலையைத் தவிர்ப்பதற்காகத் தானாகவே கருவானது சிதைவுறும்போது அதனைக் 'கருச்சிதைவு' என அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்று பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது[7]. கருத்தரிப்பு காலத்தில் 37 கிழமைக்கு முன்னரே குழந்தை பிறப்பு நிகழுமாயின், குழந்தை இறந்தாலும்கூட, அதனைக் குறைப்பிரசவம் என அழைப்பார்கள். கிட்டத்தட்ட 24 கிழமையில் பிறக்கும் குழந்தை நீண்டகாலம் உயிர் வாழ்வதற்கான சாத்தியம் 50% ஆக இருக்கும். நரம்பியல் தொடர்பான பாதிப்புக்களின்றி உயிர்வாழ்வதற்கான சாத்தியம் 50% ஆக இருப்பது 26 கிழமையில் நிகழும் குறைப்பிரசவத்திலாகும்[8]. 16 கிழமைக்குள் நிகழும் குறைப்பிரசவத்தில், சிலசமயம் கருவானது சில நிமிடங்கள் வாழக் கூடும்[9]. 20-24 கிழமைகளிற்குள் குழந்தை கருப்பையிலேயே இறந்த நிலையில் பிறந்தால் அந்நிலை 'சாப்பிள்ளை' அல்லது செத்துப் பிறப்பு என அழைக்கப்படும். பொதுவாக செத்துப் பிறப்பும், குறைப்பிரசவமும் கருச்சிதைவாகக் கருதப்படுவதில்லை எனினும், இவற்றிற்கான காரணங்களும், நிகழ்வுகளும் தெளிவான எல்லைகள் அற்று காணப்படுகின்றன.
வகைகள்
[தொகு]கருச்சிதைவின்போது ஏற்படும் சில நிலைகள் கருப்பம் தொடர்ந்து தங்காது என்பதைக் காட்டி நிற்கும்.
- வெறுமையான பை என்பது கருப்பம் தரிப்பதற்கான எல்லா வகையான விருத்திகளும் நடைபெற்றிருக்கும் வேளை, பனிக்குடமானது (gestational sac) முளையம் இல்லாது வெறுமையாக இருத்தல்.
- குழந்தை வெளியேற ஆயத்தமாகும் நிலையில் திறக்க வேண்டிய கருப்பை வாய்ப்பகுதி முதலிலேயே திறந்து கொள்ளல்[10].
- கருத்தரிப்பினால் ஏற்பட்ட எல்லா புதிய இழையங்களும் கருப்பையிலிருந்து வெளியேறி விடல் முழுமையான கருச்சிதைவு எனப்படும். அப்படி முழுமையாக அல்லாமல் ஒரு பகுதி இழையங்களே வெளியேற்றப்பட்டு இருப்பின் அந்நிலை முழுமையற்ற கருச்சிதைவு எனப்படும்[11].
- சிலவேளைகளில் முளையம் அல்லது முதிர்கரு இறந்த பின்னரும் கருச்சிதைவு வெளிக் காட்டப்படாமல் இருக்கும். அப்படியானால் அது பிந்திய அல்லது மறை கருச்சிதைவு (delayed or missed abortion) எனப்படும்.
கருச்சிதைவினால் வேறு சில சிக்கலான நிலைகளும் ஏற்படுவதுண்டு.
- அழுகல் அல்லது தொற்று கருச்சிதைவு என்பது முழுமையற்ற/ பிந்திய/ மறை கருச்சிதைவின்போது இழையங்கள் தொற்றுநோய்க்கு உட்படல். இதனால் தொற்றானது பரவி தாயின் உயிருக்கேகூட ஆபத்தை விளைவிக்கலாம்.
- மீண்டும் மீண்டும் வரும் கருச்சிதைவு (RPL - recurrent pregnancy loss) என்பது தொடர்ந்து மூன்று தடவைகள் கருச்சிதைவு நிகழ்வதாகும். கருத்தரிப்பு ஒன்று ஏற்பட்ட பின்னர் கருச்சிதைவு நிகழும் வீதம் 15%,[12] என்றால், தொடர்ந்து இரண்டாவது கருச்சிதைவு நிக்ழவதற்கான நிகழ்தகவு 2.25% உம் மூன்றாவது தொடர் கருச்சிதைவுக்கான நிகழ்தகவு 0.34% ஆகவும் இருக்கும். மீண்டும் மீண்டும் வரும் கருச்சிதைவு நிகழும் சந்தர்ப்பம் 1% என்று அறியப்பட்டுள்ளது[12]. இரண்டு கருச்சிதைவு தொடர்ந்து நடைபெற்ற பெண்களில் 85% மானோருக்கு மூன்றாவது கருத்தரிப்பு நல்ல முறையில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
அறிகுறிகள்
[தொகு]கருத்தரிப்புக் காலத்தில் மருத்துவ சோதனையில், யோனியிலிருந்து குருதி வெளியேறுவது அவதானிக்கப்பட்டால், அது கருச்சிதைவுக்கான முதல் அறிகுறியாக அல்லது அபாய அறிவிப்பாகக் கொள்ளப்படுகிறது. இருப்பினும் இந்நிலை மேலும் ஆராயப்பட வேண்டிய நிலையாகும். காரணம் பல வேளைகளில் சிசுவின் உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்லாமலேகூட இவ்வாறு குருதி வெளியேறலாம். பொதுவாக இவ்வாறான நிலையில் படுக்கையில் ஓய்வு கொள்ளல் பரிந்துரைக்கப்படுவதுண்டு[13]. அதன் மூலம் சிசுவின் உயிருக்கான பாதுகாப்பு வழங்கப்பட்டு, குழந்தை முழு வளர்ச்சியடைந்து பிறப்பதற்கான வாய்ப்புக்களும் உண்டு. மீயொலி அல்லது மிகு அதிர்வொலியில் (ultra sound) காட்டப்படும் சின்ன அதிர்வும் இதனை உறுதிப்படுத்தும்[14].
பொதுவாக கருத்தரிப்புக் காலத்தில் குருதிப்போக்கு ஏற்படுவது முக்கியமான அறிகுறியாகக் கொள்ளப்படுகிறது[15]. கருத்தரிப்புக் காலத்தில் குருதிப்போக்கினால் மருத்துவ சிகிச்சை நாடுபவர்களில் அரைவாசிப்பேருக்கு கருச்சிதைவு நிகழ்வதாக அறியப்படுகிறது[16]. குருதிப்போக்குத் தவிர்ந்த ஏனைய அறிகுறிகள் புள்ளிவிபரப்படி கருச்சிதைவுக்கான காரணியாக உறுதிப்படுத்தப்படவில்லை[15].
மிகு அதிர்வொலி சோதனை, தொடர்ந்த மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி (HCG) இயக்குநீர் சோதனை மூலமும் கருச்சிதைவு கண்டு பிடிக்கப்படலாம். ஏற்கனவே கருச்சிதைவு நிகழ்ந்தவர்கள் என்று அறிந்தால், தொடர்ந்த அவதானிப்பின் மூலம் முன்னதாகவே இந்நிலையை கண்டு பிடிக்கலாம்.
உடலியங்கியல் அறிகுறிகள்
[தொகு]கருக்காலத்தின் அளவைப் பொறுத்து, கருச்சிதைவின் உடலியல் அறிகுறிகள் மாறுபடும்[17]
- 6 கிழமைக்குள் நிகழும் கருச்சிதைவாயின், பொதுவாக சிறிதளவிலான குருதிப் போக்குடன், சிலவேளைகளில் தசைப்பிடிப்பு, சிறிய வலி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
- 6-13 கிழமைகளில் ஆயின், 5 cm அளவிலான குருதிக் கட்டிகள் வெளியேறலாம். இவை முளைய அல்லது முதிர்கரு, நஞ்சுக்கொடி இழையங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். இவை தொடர்ந்து சில மணித்தியாலங்களிலோ, அல்லது விட்டு விட்டு சில நாட்களிலோ ஏற்படலாம். பொதுவாக உடல் அசெளகரியம் காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு என்பனவும் ஏற்படலாம். இந்த அறிகுறிகள் பெண்ணுக்குப் பெண் வேறுபடும்.
- 13 கிழமைக்கு மேலாயின் முதிர்கருவானது கருச்சிதைவில் இலகுவாக வெளியேறும். ஆனால் நஞ்சுக்கொடி முற்றாகவோ அல்லது பகுதியாகவோ கருப்பையிலேயே தங்கிவிடும். இதனால் இது பகுதியான கருச்சிதைவாகக் கொள்ளப்படும். இதன்போது முதலாம் நிலையை ஒத்த குருதிப்போக்கு, தசைப்பிடிப்பு, வலி போன்ற அறிகுறிகளே இருந்தாலும், அவை தீவிரமானதாக, சிலசமயம் குழந்தை பிறப்பின்போது ஏற்படுவது போன்ற தீவிரத்துடன் இருக்கும்.
உளவியல் அறிகுறிகள்
[தொகு]ஒரு கருச்சிதைவின் பின்னர் ஒரு பெண்ணின் உடல் பழைய நிலைக்கு விரைவாகத் திரும்பி விட்டாலும், பெற்றோரின் உளவியல் மீட்சிக்கு பொதுவாக நீண்ட காலம் எடுக்கிறது. இருப்பினும் உளவியல் மீட்சியானது தனிப்பட்ட ஒவ்வொருவரின் இயல்புகள், காலங்களுக்கேற்ப வேறுபடும். சிலர் ஒரு சில மாதங்களிலும், வேறு சிலர் ஒரு வருடத்தின் பின்னருமே மன அளவில் பழைய நிலைக்கு திரும்புகின்றனர். வேறு சிலர், குறைந்தளவிலேயே எதிர் உணர்வுகளைக் கொண்டிருப்பர். சிலர் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில், அது நடந்தது நன்மைக்கே என்றும் எண்ணுவர்.
ஒரு ஆய்வின் முடிவானது, கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களில் 55% மானோர் உடனடியாகவும், 25% மானோர் 3 மாதங்களின் பின்னரும்; 18% மானோர் 6 மாதங்களின் பின்னரும்; 11% ஒரு வருடத்தின் பின்னரும் மன உளைச்சல், துயரத்துக்கு ஆளாவதாகச் சொல்கின்றது[18].
கருப்பம் தரித்திருந்து அறியப்பட்ட உடனேயே பெற்றோருக்கும், குழந்தைக்குமான பிணைப்பு உளரீதியாக ஆரம்பித்து விடுவதால், எத்தனை நாட்கள் முளையம் அல்லது முதிர்கரு கருப்பையினுள் இருந்ததென்பதைப் பொறுத்து பொதுவில் துயரத்தின் அளவு வேறுபடுவதில்லை. இருப்பினும் கருச்சிதைவை விட, குழந்தை இறந்து பிறந்திருந்தால், பெற்றோர் மிக அதிகளவான துயரத்தை அனுபவிப்பதாகவே அறியப்படுகிறது. கருச்சிதைவு நடந்த பெண்களில் 30 - 50 % மானவர்கள் பதகளிப்புக்கு உள்ளாவதாகவும், 10 - 20 % மானவர்களில் மனத்தளர்ச்சி காணப்படுவதாகவும், இந்நிலை பொதுவாக 4 மாதங்கள் வரை நீடிப்பதாகவும் கூறப்படுகின்றது[19]. இழப்பைத் தவிர ஏனையோரின் புரிந்துகொள்ளாத நிலமையும் துயரத்தை அதிகரிக்கும். கருச்சிதைவு ஏற்பட்ட அனுபவத்தைப் பெறாதவர்களால் அந்த நிலையை சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதால், அவர்கள் விரைவான மீட்சியையே எதிர் பார்ப்பார்கள். அவர்கள் கருத்தரிப்பு பற்றியோ கருச்சிதைவு பற்றியோ கதைக்காமல் இருக்கும்போது, கருச்சிதைவு ஏற்பட்டவர்கள் தாம் தனிப்படுத்தப்பட்டதாய் உணர்வார்கள். அது மட்டுமல்லாமல் மருத்துவத் தொழிலில் இருப்பவர்கள் சிலரது, பொருத்தமற்ற, உணர்வற்ற செயல்களும் துயரத்தின் அளவைக் கூட்டுகின்றன[20]. மேலும் கருத்தரித்திருக்கும் பெண்கள், அல்லது புதிதாக குழந்தை பெற்றுக் கொண்ட பெண்களுடன் பழகுவதும், கருச்சிதைவை அனுபவித்த பெற்றோரின் இழப்பை நினைவூட்டி, துயரத்தை அதிகரிக்கச் செய்யலாம்[21].
காரணங்கள்
[தொகு]பொதுவாக கருத்தரிப்பு நிகழும் பெண்களில் 30-50% மானோரே முதல் மூன்றுமாத காலத்தைக் கடந்து செல்வதாக அறியக் கிடைக்கின்றது[22]. அவ்வாறு கடந்து செல்ல முடியாதவர்களில், அநேகமானோர், தாம் கருத்தரித்திருப்பதை அறிய முன்னரேயே கருச்சிதைவு நடைபெற்று விடுவதாகவும்[23], பலருக்கு மருத்துவர்கள் முளையத்தை கண்டறிய முதலேயே கருச்சிதைவு நடைபற்று விடுவதாகவும் கூறப்படுகின்றது[24]. 15-20% வரையிலான கருச் சிதைவுகளே மருத்துவ அலுவலகர்களினால் கண்டறியப்படும் கருச்சிதைவாக உள்ளன[25].
கருச்சிதைவானது பல காரணங்களால் ஏற்படலாம். அவை யாவும் முற்றிலுமாக அறியப்படவில்லை. தெரிந்த காரணங்களில் சில மரபியல்[26], கருப்பை, இயக்குநீர் சார்ந்த அசாதாரண நிலமைகள், இனப்பெருக்கத் தொகுதியில் ஏற்படும் தொற்றுக்கள், இழைய நிராகரிப்பு, நீரிழிவு நோய் போன்றனவாகும்[27].
முதல் மூன்று மாத காலம்
[தொகு]அனேகமான மருத்துவத்தில் தோன்றும் மூன்றில் இரு பங்கு தொடக்கம் நான்கில் மூன்று பங்கு கருச்சிதைவானது முதல் மூன்று மாத காலத்திலேயே நிகழ்கின்றது[28][29].
முதல் மூன்று மாத காலத்தில் நிகழும் கருச்சிதைவு பொதுவாக, கிட்டத்தட்ட அரைவாசி நிகழ்வுகள் முளையத்திலோ, அல்லது முதிர்கருவிலோ நிகழும் அசாதாரண நிறப்புரி மாற்றங்களால் ஏற்படுவனவாக இருக்கின்றன[23][26][27]. மரபியல் சார்ந்த பிரச்சனையுடன் ஏற்படும் கருத்தரிப்பில் 95% கருச்சிதைவில் முடிகிறது. அனேகமான நிறப்புரி சார்ந்த பிரச்சனைகள், ஏதோ சந்தர்ப்பத்தால் ஏற்படுவதேயன்றி, பொதுவாக பெற்றோரின் மரபணுவிலிருந்து கடத்தப்படுவதாகவோ, அல்லது மீண்டும் நிகழக் கூடியதாகவோ இருப்பதில்லை. இருந்தாலும் பெற்றோரின் மரபணு மூலம் கடத்தப்படும் கருச்சிதைவுகளும் நிகழவே செய்கின்றன. இந்தக் காரணத்துடன் தொடர்பான கருச்சிதைவு பொதுவாக மீண்டும் மீண்டும் நிகழ்வதாகவோ அல்லது பெற்றோரில் யாராவது ஒருவருக்கு குறையுடைய குழந்தையோ அல்லது உறவினரோ இருக்கையில் ஏற்படுவதாக அமைகின்றது[30]. அனேகமாக இவ்வகை கருச்சிதைவு வயது கூடிய பெற்றோருக்கு ஏற்படுவதுடன், வயது கூடிய பெண்களில் கூடிய வீதத்தில் கருச்சிதைவு நிகழ்வதற்குக் காரணமாகவும் அமைந்துவிடுகிறது.
இது தவிர புரோகெஸ்தரோன் (progesterone) இயக்குநீரின் குறைபாடும் கருச்சிதைவுக்குக் காரணமாகின்றது. இந்த இயக்குநீரானது மாதவிடாய் வட்டத்தின் பின் அரைவாசிக் காலத்தில் குறைவாக இருப்பின், அந்தப் பெண்களுக்கு புரோகெஸ்தரோன் குறைநிரப்பு பொருளாக முதல் மூன்று மாத காலத்துக்கு வழங்கப்படும்[30]. ஆனாலும் புரோகெஸ்தரோன் குறைநிரப்பு பொருளாக வழங்கப்படும்போது, கருச்சிதைவுக்கான இடர் குறைக்கப்படுவதாக ஆய்வுகள்மூலம் சரிவர நிரூபிக்கப்படவில்லை[31][32].
மூன்று தொடக்கம் ஆறு மாத காலம்
[தொகு]இக்காலத்தில் நிகழும் 15%மான கருச்சிதைவு கருப்பையில் ஏற்படும் இயல்பற்ற மாற்றங்கள், கருப்பையில் ஏற்படும் நார்த் திசுக் கட்டிகள், கருப்பை வாய் செயல்திறனற்ற தன்மை போன்றவற்றால் ஏற்படும்[30]. இவை குறைப்பிரசவத்துக்கும் காரணமாய் அமைவதுண்டு[28].
ஒரு ஆய்வு இந்தக் காலத்தில் நிகழும் 19% கருச்சிதைவுக்கு தொப்புட்கொடியில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாவதாகக் கூறுகின்றது. நஞ்சுக்கொடியில் ஏற்படும் பிரச்சனைகளும் இக்காலத்தில் நிகழும் கருச்சிதைவில் முக்கிய பங்கு வகிக்கிறது[33].
இடர்க் காரணிகள்
[தொகு]- ஒன்றுக்கு மேற்பட்ட முதிர்கரு இருக்கும் நிலையில் இவ்வகை கருச்சிதைவுக்கான நிகழ்தகவு அதிகரிக்கிறது[30].
- கருத்தரிப்பின் போது சில பெண்களில் நீரிழிவு நோய் ஏற்படுவதுண்டு. இது கருவளர்ச்சிக்கால நீரிழிவு நோயாகும். கருத்தரிப்பின்போது போதிய கவனமெடுத்தலால் இது கட்டுப்படுத்தப்படக் கூடிய ஒரு நிலையாக இருக்கும். அவ்வாறின்றி, கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோயைக் கொண்டிருப்பவர்களிலும் கருச்சிதைவுக்கான சந்தர்ப்பம் அதிகமாக இருக்கும்[30].
- சூலகத்தில் பல நீர்க்கட்டிகள் இருக்கும் நிலையும் கருச்சிதைவிற்கான இடரை அதிகரிக்கும். இந்த நோய்க்குறியை உடைய பெண்களில் 30-50% மானோரில் முதல் மூன்று மாதத்தில் கருச்சிதைவு ஏற்படுவதாக அறியப்படுகிறது. கருத்தரிப்புக் காலத்தில் மெட்ஃபார்மின் (Metformin) மருந்து சிகிச்சை பெற்றுக் கொண்டவர்களில் கருச்சிதைவு குறைந்திருப்பதாக இரு ஆய்வுகள் கூறின[34]. ஆனாலும் 2006 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஒரு மீளாய்வு இதனை மறுத்ததுடன், வழக்கமான மெட்ஃபார்மின் சிகிச்சை பெறுவதையும் பரிந்துரை செய்யவில்லை[35].
- கருத்தரிப்பு காலத்தில் உயர் இரத்த அழுத்தம் (Pre-eclampsia) ஏற்படுவதும் கருச்சிதைவை ஏற்படுத்தும் வாய்ப்பைக் கொடுக்கும். அதேபோல் மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களில் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் சந்தர்ப்பமும் அதிகமாகும்[36]
- தீவிரமான தைராய்டு சுரப்புக் குறை இருப்பவர்களிலும் கருச்சிதைவு அதிகம் நிகழலாம். இந்நோயின் தாக்கம் குறைவாக உள்ளவர்களில் கருச்சிதைவுடன் தொடர்பு காட்டப்படவில்லை.
- நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் ஏற்படும் சில நிலைகள், தன்னுடல் தாக்குநோயை ஏற்படுத்தி கருச்சிதைவைக் கூட்டுகின்றன[30].
- உருபெல்லா (Rubella) என்றழைக்கப்படும் தீ நுண்மம் ஒன்றினால் ஏற்படும் உருபெல்லா தட்டம்மை (Rubella measles) அல்லது ஜேர்மனி தட்டம்மை, கிளமிடியா நோய் போன்ற நோய்களாலும் கருச்சிதைவுக்கான இடர் அதிகரிக்கும்[30].
- புகைபிடிக்கும் அல்லது புகைக்கும் பழக்கமுள்ள பெண்களுக்கும்[37], புகைக்கும் பழக்கமுள்ள தகப்பனைக் கொண்ட கருவிலும்[5] இவ்வகை கருச்சிதைவு ஏற்படும் சந்தர்ப்பம் கூடுவதாக அறியப்பட்டுள்ளது.
- கொக்கெயின் பாவனையும் கருச்சிதைவுக்கு காரணமாகலாம்[37].
- உடல் அதிர்ச்சி, நச்சுப் பொருட்கள் நிறைந்த சூழலில் போதல், IUD போன்ற கருத்தடை உபகரணத்தை கருக்கட்டல் நேரத்தில் கருப்பையினுள் கொண்டிருந்தமை போன்ற நிலமைகளும் கருச்சிதைவுடன் தொடர்பு கொண்டிருக்கலாம்[38].
- பாரோக்சிடைன் (Paroxetine), வென்லாஃபாக்சின் (Venlafaxine) போன்ற மன அழுத்தத்திற்கு எதிரான சில மருந்துகள் பாவனை[39][40] போன்றனவும் கருச்சிதைவுக்குக் காரணமாகலாம்
- கருத்தரிக்கும் பெண்ணின் வயதும் கருச்சிதைவுடன் நெருங்கிய தொடர்புள்ளதாகக் கருதப்படுகிறது. வயது அதிகரிக்கும்போது கருச்சிதைவுக்கான சந்தர்ப்பமும் அதிகரிக்கும்[41][42].
- அதுமட்டுமல்லாது ஏற்கனவே கருச்சிதைவு நிகழ்ந்த ஒரு பெண்ணுக்கு மீண்டும் கருச்சிதைவு ஏற்படும் சந்தர்ப்பம் அதிகமாக உள்ளதும் அவதானிக்கப்பட்டுள்ளது[26].
தன்னுடல் தாக்குநோய்
[தொகு]தன்னுடல் தாக்குநோயானது பொதுவாக மீண்டும் மீண்டும் நிகழும் கருச்சிதைவிலும், கருத்தரிப்பின் பிந்திய நிலைகளில் நிகழும் கருச்சிதைவிலும் பங்கு வகிப்பதாக இருக்கின்றது[43]. இந்நோயில் ஒரு உடலில் உள்ள நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்பாடானது, தனது சொந்த உடலின் உள்ளேயே நிகழ்வதனால், அது முளையம், முதிர்கருவை அழிக்கும் தன்மை உடையதாக இருக்கின்றது[44][45]. மேலும் இந்த நோயினால் முளையத்தில் ஏற்படக்கூடிய மரபுசார் அசாதாரணங்கள் கருச்சிதைவுக்கு வழி ஏற்படுத்தலாம் என ஆய்வுகள் கூறுகின்றன[46]
மசக்கை/காலைச் சோர்வு
[தொகு]கருத்தரித்த பெண்களில் ஆரம்ப காலத்தில் ஏற்படும் குமட்டல், வாந்தி போன்ற காலைச் சோர்வு கருச்சிதைவுக்கான இடரைக் குறைப்பதாகக் கூறப்படுகின்றது. இதற்கு பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் அனைத்தும் பலராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.[47]. ஆனாலும் கருச்சிதைவில் முடியும் கருத்தரித்த பெண்களில் குமட்டல் பொதுவாக காணப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.[48].
உடற்பயிற்சி
[தொகு]93,000 கர்ப்பமடைந்த பெண்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, கர்ப்பகாலத்தில் 18 கிழமைகளுக்கு முன்னராக, நீச்சல் தவிர்ந்த ஏனைய பல உடற்பயிற்சிகள் கருச்சிதைவுக்கான சூழிடரை அதிகரிப்பதாகக் கூறுகின்றது[49]. கூடியளவு நேரம் செய்யப்படும் உடற்பயிற்சியால், இந்த சூழிடர் மேலும் அதிகரிக்கின்றது. .
காஃவீன்
[தொகு]தேயிலை, காப்பி உட்பட சில வகையான செடிகொடிகளில் காணப்படும்காஃவீன் எனப்படும் பதார்த்தமும், முக்கியமாக அதிகளவில் உட்கொள்ளப்படும்போது, இவ்வகையான கருச்சிதைவைத் தூண்டுவதாக அறியப்படுகின்றது. 2007 ஆம் ஆண்டில் 1000 கர்ப்பிணிப் பெண்களிடம் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று, காஃவீன் உட்கொள்ளாத பெண்களில் காணப்படும் 13% கருச்சிதைவு, நாளொன்றுக்கு 200 மிகி அல்லது அதற்கு அதிகமாக காஃவீன் உட்கொள்பவர்களில் 25 % கருச்சிதைவாக உயர்ச்சி அடைவதைக் காட்டியது. 200 மிகி காஃவீன் 10 அவுன்சு (300 மிலி) காப்பியிலும், 25 அவுன்சு (740 மிலி) தேநீரிலும் கலந்துள்ளது[50]. 2007 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2400 கர்ப்பிணிப் பெண்களில் செய்யப்பட்ட இரண்டாவது ஆய்வு ஒன்று, 200 மிகி -க்கு உள்ளாக காஃவீன் உட்கொள்பவர்களில் சூழிடர் அதிகரிப்பு காணப்படவில்லை எனக் காட்டியது[51]. 2009 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட வேறொரு ஆய்வு காஃவீனுக்கும், கருச்சிதைவுக்கான சூழிடர் அதிகரிப்பும் தொடர்பில்லை எனக் கூறியுள்ளது[52].
நோயறிதல்
[தொகு]கருச்சிதைவின்போது வெளியேறும் இழையங்களைப் பரிசோதித்தும், மீயொலி அல்லது மிகு அதிர்வொலி சோதனை மூலமும் கருச்சிதைவு உறுதிப்படுத்தப்படும். நோய்க் குறிகளைக் கண்டு பிடிப்பதற்காக கருக்கட்டலின் மூலம் உருவான இழையம் நுண்நோக்கி மூலம் ஆராயப்படும். நிறப்புரியிலுள்ள அசாதாரணங்களை அறிய வேண்டுமாயின் மரபியல் சோதனைகளும் செய்யப்படும்.
மேலாண்மை
[தொகு]கருச்சிதைவு, வேற்றிடச்சூல் ஆகிய இரண்டிலும் முதன்மையான அறிகுறி ஆரம்பகால குருதிப்பெருக்கு அல்லது குருதி இழப்பு ஆகும். ஆனால் பொதுவாக கருச்சிதைவின்போது வலி இருப்பதில்லை. வேற்றிடச்சூலில் வலி இருக்கும்[15]. எனவே குருதி இழப்போ, வலியோ அல்லது இரண்டும் சேர்ந்தோ இருக்குமாயின் மீயொலி கொண்டு படமாக்கும் தொழினுட்பம் மூலம் யோனியூடாக பரிசோதனை செய்து நிலைமை அவதானிக்கப்படும். கருப்பை தவிர்ந்த ஏனைய இடங்களில் கரு எதுவும் அடையாளம் காணப்பட முடியாதவிடத்து, தொடராக சில βHCG (Gonadotropin இயக்குநீர்) சோதனை செய்து வேற்றிடச்சூல் இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படும். காரணம் வேற்றிடச்சூலானது தாயின் உயிருக்கே ஊறு விளைவிக்கவல்ல நிலைமையாகும்.[53][54]
குருதி இழப்பு அதிகமாய் இல்லாதவிடத்து வழமையான மருத்துவரைத் தொடர்புகொண்டு அவரின் உதவியை நாடலாம். குருதி இழப்பு அதிகமாக, அல்லது வலியுடன், அல்லது காய்ச்சலும் இருக்குமாயின் உடனடியாக அவசரச் சிகிச்சை உதவியை நாடுதலே நல்லது.
முழுமையான கருச்சிதைவு ஏற்பட்டிருப்பின் சிகிச்சை எதுவும் அவசியமில்லை. அப்படியல்லாமல், முழுமையற்ற கருச்சிதைவு, வெறுமையான பை, பிந்திய அல்லது மறை கருச்சிதைவு ஏற்பட்டிருப்பின் மூன்று வழிகளில் சிகிச்சை அளிக்கப்படும்.
- கவனமாக அவதானித்தபடி, தானாகவே முழுமையான வெளியேற்றத்துக்கு காத்திருத்தல். 65-80% இரண்டு தொடக்கம் ஆறு கிழமைகளில் முழுவதுமாய் கழிவுகள் வெளியேறிவிடும்[55]. இந்த வழியில் மருந்துகள், அறுவைச் சிகிச்சையால் ஏற்படக் கூடிய வேறு பக்க விளைவுகளோ, சிக்கல்களோ தவிர்க்கப்படும்[56].
- முழுமையான கருச்சிதைவை தூண்ட வல்ல misoprostol (prostaglandin, brand name Cytotec) ஐக் கொண்ட மருந்து கொடுக்கப்படும். கிட்டத்தட்ட 95% ஆனவர்களில் ஒரு சில நாட்களில் முழுமையான வெளியேற்றம் நிகழும்[55].
- அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றல். பொதுவாக வெற்றிடம் ஏற்படுத்தி உறிஞ்சி வெளியேற்றலே செய்யப்படும். இது D&C (Dilation and curettage) அல்லது D&E (Dilation and evacuation) என அழைக்கப்படும். இதுவே கருச்சிதைவின் கழிவுகளை முழுமையாக வெளியேற்றும் விரைவான முறையாகும். இது குருதிப்பெருக்கின் நேரத்தையும், தீவிரத்தையும் குறைப்பதுடன், உடல் வலியையும் விரைவில் குறைக்கும்[55]. மீண்டும் மீண்டும் வரும் கருச்சிதைவு, கருத்தரிப்பின் பிந்திய நிலையில் நிகழும் கருச்சிதைவாயின் நோயறிதலுக்காக பரிசோதனை செய்ய D&C மிகவும் சிறந்த வழியாகும். ஆனாலும் D&C யில் அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து வரக் கூடிய சிக்கல்களும் உண்டு. கவனத்துடன் செய்யப்படாவிடில் கருப்பை, கருப்பை வாய் காயம் ஏற்படலாம். எதிர் காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் கொண்ட பெண்கள் இதில் கவனமாக இருக்கலாம்.
கருச்சிதைவைத் தடுத்தல்
[தொகு]தற்போது கருச்சிதைவைத் தடுப்பதற்கான வழிகள் எதுவும் கூறப்படவில்லை ஆயினும், துறைசார் வல்லுனர்களின் கருத்துப்படி, கருச்சிதைவுக்கான காரணத்தைச் சரியாகக் கண்டு பிடிப்பதன் முலம் அடுத்து, வேறொரு கருச்சிதைவு நிகழ்வதைத் தடுக்கின்றது[57]. சில ஆய்வாளர்களின் முடிவின்படி, கருத்தரிப்பிற்கு முன்னரும், பின்னரும் dehydroepiandrosterone உள்ளெடுப்பவர்களில், கருச்சிதைவுக்கான சூழிடர் குறைகின்றது[58] .
பரம்பல்
[தொகு]அனேகமான கருச்சிதைவு மிகவும் ஆரம்ப கட்டத்தில் நிகழ்ந்து விடுவதால், பெண்கள் தாம் கருப்பம் தரித்திருப்பதை தெரிந்துகொள்ள முதலே நடந்துவிடுவதால், கருச்சிதைவு நிகழ்வுகளை கணக்கிடல் மிகவும் கடினமாகும். மேலும் பல கருச்சிதைவு நிகழ்வுகளுக்குப் பின்னர் சிகிச்சைகள் வீட்டில் வைத்தே செய்யப்பட்டு விடுவதால், அவை மருத்துவம் புள்ளிவிபரத்தினுள் வருவதில்லை[16].
கருத்தரிப்பை மிகவும் ஆரம்பத்திலேயே கண்டறியக்கூடிய சோதனைகளைக் கொண்ட தொலைநோக்கு ஆய்வுகள் 25% கருத்தரிப்பு 6 கிழமைகள் கருக்காலத்தில் (அதாவது பெண்ணின் இறுதியான மாதவிடாய் வட்டத்தின் முதல் நாளிலிருந்து) கருச்சிதைவுக்கு உட்பட்டு விடுவதாய் கூறுகின்றன[59][60]. 6 கிழமைகளுக்குப் பின்னர் நிகழும் கருச்சிதைவுகளே மருத்துவ கருச்சிதைவுகளாகக் கொள்ளப்படுகின்றன. இவை கருத்தரிப்புகளில் 8% ஆகும்[60]. கருக்காலத்தின் 10 ஆவது கிழமைக்குப் பின்னர், அதாவது முதிர்கரு நிலையை அடையும்போது, கருச்சிதைவு நிகழ்வதற்கான சந்தர்ப்பம் சடுதியாகக் குறையும்[61]. கருக்காலத்தின் 8.5 கிழமையிலிருந்து குழந்தை பிறப்புவரை கருச்சிதைவு நிகழ்வது 2% இனரில் மட்டுமே[62].
பெற்றோரின் வயது அதிகரிக்கையில் கருச்சிதைவின் அளவும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும். தாயின் வயதோ[63][64], அல்லது தந்தையின் வயதோ[65][66] அதிகரிக்கும்போது இந்நிலை தோன்றும் வாய்ப்புண்டு. 25-29 வயதுடைய ஆண்களைக் காட்டிலும், 25 வயதுக்குட்பட்ட ஆண்களின் விந்துடன் இணைந்து உருவாகும் கருவில் கருச்சிதைவு நிகழ்வதற்கான தன்மை 40% ஆல் குறைவாக இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. அதே ஆய்வு 25-29 வயதினரைவிட, 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களாயின், உருவாகும் கருவில் கருச்சிதைவு நிகழ்வதற்கான வாய்ப்பு 60% ஆல் அதிகரிப்பதாகக் கூறுகின்றது[67]. வேறொரு ஆய்வு, இவ்வாறான கருச்சிதைவுகள் வயது கூடிய ஆண்களின் தொடர்பில் நிகழ்வது பொதுவாக முதல் மூன்று மாதங்களிலாகும் எனக் கூறுகின்றது.[68]. இன்னுமொரு ஆய்வு பெண்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 75% கருத்தரிப்பு கருச்சிதைவில் முடிவதாகக் கூறுகின்றது[69].
மனிதரல்லாத விலங்குகள்
[தொகு]கர்ப்பம் தரிக்கும் அனைத்து விலங்குகளிலும் இவ்வகையான கருச்சிதைவு நிகழ்கின்றது. செம்மறியாடுகளில், கூட்டத்துடன் முண்டியடித்து சிறு கதவுகளினூடாகச் செல்லும்போதோ, அல்லது நாய்களால் விரட்டப்படும்போதோ கருச்சிதைவு நிகழ்கின்றது [70]. மாடுகளில் அவற்றிற்கு வரக்கூடிய Brucellosis, Campylobacter போன்ற தொற்றுநோய்களினால் கருச்சிதைவு நிகழ்ந்தாலும், தடுப்பூசி மூலம் அந்நிலை கட்டுப்படுத்தப்படுகின்றது[71]. வேறு நோய்களும்கூட விலங்குகளை கருச்சிதைவுக்கு உட்பட வைக்கின்றன. Prairie Vole எனப்படும் ஒரு சுண்டெலியில், அது சேர்ந்திருந்த இணை அகற்றப்பட்டு, புதிய ஆண் துணையுடன் விடப்படும்போது கருச்சிதைவு நிகழ்வது அவதானிக்கப்பட்டது[72]. இது Bruce effec என அழைக்கப்படுகின்றது. ஆனாலும் இந்த நிலை தமது சொந்த வாழிடத்தில் வசிக்கும் விலங்குகளில் குறைவாகவும், பரிசோதனைச்சாலைகளிலேயே அதிகமாகவும் அவதானிக்கப்பட்டது[73].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Petrozza, John C (29 August 2006). "Recurrent Early Pregnancy Loss". Medscape. WebMD. பார்க்கப்பட்ட நாள் 19 September 2013.
- ↑ "Miscarriage" (PDF). babyloss. பார்க்கப்பட்ட நாள் 19 September 2013.
- ↑ 3.0 3.1 RHL Commentary by Mehta M and Pattanayak RD (2013). "Follow-up for improving psychological well-being for women after a miscarriage". WHO. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Text "Definitions and indicators in family planning, maternal and child health and reproductive health. WHO Regional Strategy on Sexual and Reproductive Health. Geneva: World Health Organization, 2001." ignored (help) - ↑ Zinaman MJ, Clegg ED, Brown CC, O'Connor J, Selevan SG. (1996 Mar). "Estimates of human fertility and pregnancy los". Georgetown University Medical Center, Washington, D.C., USA. Fertility and Sterility. pp. 65(3):503-9. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ 5.0 5.1 5.2 Venners S, Wang X, Chen C, Wang L, Chen D, Guang W, Huang A, Ryan L, O'Connor J, Lasley B, Overstreet J, Wilcox A, Xu X (2004). "Paternal smoking and pregnancy loss: a prospective study using a biomarker of pregnancy.". Am J Epidemiol 159 (10): 993–1001. doi:10.1093/aje/kwh128. பப்மெட்:15128612. http://aje.oxfordjournals.org/cgi/content/full/159/10/993.
- ↑ "What is a chemical pregnancy?". Baby Hopes. பார்க்கப்பட்ட நாள் 27 April 2007.
- ↑ Hutchon D, Cooper S (1998). "Terminology for early pregnancy loss must be changed". BMJ 317 (7165): 1081. பப்மெட்:9774309.
Hutchon D (1998). "Understanding miscarriage or insensitive abortion: time for more defined terminology?". Am. J. Obstet. Gynecol. 179 (2): 397–8. doi:10.1016/S0002-9378(98)70370-9. பப்மெட்:9731844. https://archive.org/details/sim_american-journal-of-obstetrics-and-gynecology_1998-08_179_2/page/397. - ↑ Kaempf JW, Tomlinson M, Arduza C, et al. (2006). "Medical staff guidelines for periviability pregnancy counseling and medical treatment of extremely premature infants". Pediatrics 117 (1): 22–9. doi:10.1542/peds.2004-2547. பப்மெட்:16396856 இம் மூலத்தில் இருந்து 2008-03-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080318092852/http://pediatrics.aappublications.org/cgi/content/full/117/1/22. பார்த்த நாள்: 2010-08-30. - in particular see TABLE 1 Survival and Neurologic Disability Rates Among Extremely Premature Infants பரணிடப்பட்டது 2008-06-12 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Patricia Lee June (November 2001). A Pediatrician Looks at Babies Late in Pregnancy and Late Term Abortion. Presbyterians Pro-Life 10 ஏப்ரல் 2006 அன்று. பரணிடப்பட்டது.. Error: If you specify
|archivedate=
, you must also specify|archiveurl=
. http://www.ppl.org/PJune_PostViability_2001.html. பார்த்த நாள்: 24 December 2006. - ↑ Kaufman, Matthew H.; Latha Stead; Feig, Robert (2007). First aid for the obstetrics & gynecology clerkship. New York: McGraw-Hill, Medical Pub. Division. p. 138. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-144874-8.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ MedlinePlus (25 October 2004). "Abortion - incomplete". Medical Encyclopedia. Archived from the original on 25 ஏப்ரல் 2006. பார்க்கப்பட்ட நாள் 24 May 2006.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ 12.0 12.1 Royal College of Obstetricians and Gynaecologists (May 2003). "The investigation and treatment of couples with recurrent miscarriage". Guideline No 17 23 ஜனவரி 2009 அன்று. பரணிடப்பட்டது.. Error: If you specify
|archivedate=
, you must also specify|archiveurl=
. http://www.guideline.gov/summary/summary.aspx?ss=15&doc_id=7681&nbr=4480. பார்த்த நாள்: 25 June 2009. - ↑ American Pregnancy Association. "pregnancycomplications".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ Ben-Haroush A, Yogev Y, Mashiach R, Meizner I (2003). "Pregnancy outcome of threatened abortion with subchorionic hematoma: possible benefit of bed-rest?". Isr. Med. Assoc. J. 5 (6): 422–4. பப்மெட்:12841015.
- ↑ 15.0 15.1 15.2 Gracia C, Sammel M, Chittams J, Hummel A, Shaunik A, Barnhart K (2005). "Risk factors for spontaneous abortion in early symptomatic first-trimester pregnancies". Obstet Gynecol 106 (5 Pt 1): 993–9. doi:10.1097/01.AOG.0000183604.09922.e0. பப்மெட்:16260517.
- ↑ 16.0 16.1 Everett C (5 July 1997). "Incidence and outcome of bleeding before the 20th week of pregnancy: prospective study from general practice.". BMJ 315 (7099): 32–4. பப்மெட்:9233324. பப்மெட் சென்ட்ரல்:2127042. http://bmj.bmjjournals.com/cgi/content/full/315/7099/32.
- ↑ "miscarriage". 2004. பார்க்கப்பட்ட நாள் 0 March 2009.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Text "author www.birth.com.au" ignored (help) - ↑ Lok IH, Yip AS, Lee DT, Sahota D, Chung TK (April 2010). "A 1-year longitudinal study of psychological morbidity after miscarriage". Fertil. Steril. 93 (6): 1966–75. doi:10.1016/j.fertnstert.2008.12.048. பப்மெட்:19185858.
- ↑ Geller PA, Kerns D, Klier CM. (2004 Jan). "Anxiety following miscarriage and the subsequent pregnancy: A review of the literature and future directions". Journal of Psychosomatic Research. pp. 56(1):35-45. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ Miscarriage Standard Code of Practice
- ↑ David Vernon (2005). "Having a Great Birth in Australia". Archived from the original on 2007-01-29. பார்க்கப்பட்ட நாள் 2010-09-12.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ Annas, George J.; Elias, Sherman (2007). "24. Pregnancy loss". In Gabbe, Steven G.; Niebyl, Jennifer R.; Simpson, Joe Leigh (eds.). Obstetrics: Normal and Problem Pregnancies (5 ed.). Churchill Livingstone. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-443-06930-7.
- ↑ 23.0 23.1 Schorge, John O.; Schaffer, Joseph I.; Halvorson, Lisa M.; Hoffman, Barbara L.; Bradshaw, Karen D.; Cunningham, F. Gary, eds. (2008). "6. First-Trimester Abortion". Williams Gynecology (1 ed.). McGraw-Hill Medical. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-147257-9.
- ↑ Katz, Vern L. (2007). "16. Spontaneous and Recurrent Abortion - Etiology, Diagnosis, Treatment". In Katz, Vern L.; Lentz, Gretchen M.; Lobo, Rogerio A.; Gershenson, David M. (eds.). Katz: Comprehensive Gynecology (5 ed.). Mosby. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780323029513.
- ↑ Stovall, Thomas G. (2002). "17. Early Pregnancy Loss and Ectopic Pregnancy". In Berek, Jonathan S. (ed.). Novak's Gynecology (13 ed.). Lippincott Williams & Wilkins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0781732628.
- ↑ 26.0 26.1 26.2 Jauniaux E, Kaminopetros P, El-Rafaey H (1999). "Early pregnancy loss". In Whittle MJ, Rodeck CH (ed.). Fetal medicine: basic science and clinical practice. Edinburgh: Churchill Livingstone. p. 837. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-443-05357-3. இணையக் கணினி நூலக மைய எண் 42792567.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ 27.0 27.1 Stöppler, Melissa Conrad. Shiel, William C., Jr. (ed.). "Miscarriage (Spontaneous Abortion)". MedicineNet.com. WebMD. பார்க்கப்பட்ட நாள் 2009-04-07.
{{cite web}}
: CS1 maint: multiple names: editors list (link) - ↑ 28.0 28.1 Rosenthal, M. Sara (1999). "The Second Trimester". The Gynecological Sourcebook. WebMD. பார்க்கப்பட்ட நாள் 18 December 2006.
- ↑ Francis O (1959). "An analysis of 1150 cases of abortions from the Government R.S.R.M. Lying-in Hospital, Madras". J Obstet Gynaecol India 10 (1): 62–70. பப்மெட்:12336441.
- ↑ 30.0 30.1 30.2 30.3 30.4 30.5 30.6 "Miscarriage: Causes of Miscarriage". HealthSquare.com. Archived from the original on 28 ஜூலை 2010. பார்க்கப்பட்ட நாள் 18 September 2007.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help); External link in
(help)taken word-for-word from pp. 347-9 of: "Chapter 27. What To Do When Miscarriage Strikes". The PDR Family Guide to Women's Health and Prescription Drugs. Montvale, NJ: Medical Economics. 1994. pp. 345–50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56363-086-9.|publisher=
- ↑ Wahabi HA, Abed Althagafi NF, Elawad M (2007). "Progestogen for treating threatened miscarriage". Cochrane database of systematic reviews (Online) (3): CD005943. doi:10.1002/14651858.CD005943.pub2. பப்மெட்:17636813.
- ↑ Bukulmez O, Arici A (2004). "Luteal phase defect: myth or reality". Obstet. Gynecol. Clin. North Am. 31 (4): 727–44, ix. doi:10.1016/j.ogc.2004.08.007. பப்மெட்:15550332. https://archive.org/details/sim_obstetrics-and-gynecology-clinics-of-north-america_2004-12_31_4/page/727.
- ↑ Peng H, Levitin-Smith M, Rochelson B, Kahn E (2006). "Umbilical cord stricture and overcoiling are common causes of fetal demise.". Pediatr Dev Pathol 9 (1): 14–9. doi:10.2350/05-05-0051.1. பப்மெட்:16808633.
- ↑ Jakubowicz DJ, Iuorno MJ, Jakubowicz S, Roberts KA, Nestler JE (2002). "Effects of metformin on early pregnancy loss in the polycystic ovary syndrome". J. Clin. Endocrinol. Metab. 87 (2): 524–9. doi:10.1210/jc.87.2.524. பப்மெட்:11836280 இம் மூலத்தில் இருந்து 13 அக்டோபர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071013222236/http://jcem.endojournals.org/cgi/content/full/87/2/524. பார்த்த நாள்: 17 July 2007. Khattab S, Mohsen IA, Foutouh IA, Ramadan A, Moaz M, Al-Inany H (2006). "Metformin reduces abortion in pregnant women with polycystic ovary syndrome". Gynecol. Endocrinol. 22 (12): 680–4. doi:10.1080/09513590601010508. பப்மெட்:17162710.
- ↑ Lilja AE, Mathiesen ER (2006). "Polycystic ovary syndrome and metformin in pregnancy". Acta obstetricia et gynecologica Scandinavica 85 (7): 861–8. doi:10.1080/00016340600780441. பப்மெட்:16817087.
- ↑ "The effect of recurrent miscarriage and infertility on the risk of pre-eclampsia."; Trogstad L, Magnus P, Moffett A, Stoltenberg C.; BJOG: An International Journal of Obstetrics & Gynaecology, Volume 116 Issue 1, pp. 108–113; http://www.ncbi.nlm.nih.gov/pubmed/19087081
- ↑ 37.0 37.1 Ness R, Grisso J, Hirschinger N, Markovic N, Shaw L, Day N, Kline J (1999). "Cocaine and tobacco use and the risk of spontaneous abortion.". N Engl J Med 340 (5): 333–9. doi:10.1056/NEJM199902043400501. பப்மெட்:9929522.
- ↑ "Miscarriage: An Overview". Armenian Medical Network. 2005. பார்க்கப்பட்ட நாள் 19 September 2007.
- ↑ Broy, P.; Bérard, A. (2010). "Gestational exposure to antidepressants and the risk of spontaneous abortion: a review". Current drug delivery 7 (1): 76–92. doi:10.2174/156720110790396508. பப்மெட்:19863482.
- ↑ Nakhai-Pour, H. R.; Broy, P.; Berard, A. (2010). "Use of antidepressants during pregnancy and the risk of spontaneous abortion". Canadian Medical Association Journal 182 (10): 1031–1037. doi:10.1503/cmaj.091208. பப்மெட்:20513781. Lay summary.
- ↑ Heffner L. Advanced, Maternal Age – How old is too old? New England Journal of Medicine 2004; 351(19):1927–29.
- ↑ http://www.endo.gr/cgi/reprint/351/19/1927.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ ""Miscarriages and Autoimmunity"". Archived from the original on 2012-09-19. பார்க்கப்பட்ட நாள் 2012-09-21.
- ↑ Gleicher N, Weghofer A, Barad D (2007). "Female infertility due to abnormal autoimmunity: frequently overlooked and greatly underappreciated. Part II.". Obstetrics and Gynecology 2: 465–75. https://archive.org/details/sim_clinical-obstetrics-and-gynecology_2007-06_50_2/page/465.
- ↑ Gleicher N, Weiner R, Vietzke M (November 2006). "The impact of abnormal autoimmune function on reproduction: maternal and fetal consequences". J. Autoimmun. 27 (3): 161–5. doi:10.1016/j.jaut.2006.08.003. பப்மெட்:17029731. http://www.ncbi.nlm.nih.gov/pubmed/17029731?dopt=AbstractPlus.
- ↑ Gleicher N, Weghofer, A., Barad, D.H. (2011). "Do chromosomally abnormal pregnancies really preclude autoimmune etiologies of spontaneous miscarriages? ". Autoimmunity Reviews 10 (6): 1361–363 . "Science Direct"
- ↑ Furneaux EC, Langley-Evans AJ, Langley-Evans SC (2001). "Nausea and vomiting of pregnancy: endocrine basis and contribution to pregnancy outcome". Obstet Gynecol Surv 56 (12): 775–82. doi:10.1097/00006254-200112000-00004. பப்மெட்:11753180.
- ↑ Stein Z, Susser M. (1991). "Miscarriage, caffeine, and the epiphenomena of pregnancy: the causal model". Epidemiology 2 (3): 163–7. http://www.ncbi.nlm.nih.gov/pubmed/2054396.
- ↑ Madsen M, Jørgensen T, Jensen ML et al. (2007). "Leisure time physical exercise during pregnancy and the risk of miscarriage: a study within the Danish National Birth Cohort". BJOG 114 (11): 1419–26. doi:10.1111/j.1471-0528.2007.01496.x. பப்மெட்:17877774.
- ↑ Weng X, Odouli R, Li DK (2008). "Maternal caffeine consumption during pregnancy and the risk of miscarriage: a prospective cohort study". Am J Obstet Gynecol 198 (3): 279.e1–8. doi:10.1016/j.ajog.2007.10.803. பப்மெட்:18221932.
Grady, Denise (20 January 2008). "Study Sees Caffeine Possibly Tied to Miscarriages". The New York Times. http://www.nytimes.com/2008/01/20/health/20cnd-caffeine.html?_r=1&bl&ex=1201150800&en=0019b93b4bb1c219&ei=5087%0A. பார்த்த நாள்: 23 January 2008. - ↑ Savitz DA, Chan RL, Herring AH, Howards PP, Hartmann KE (January 2008). "Caffeine and miscarriage risk" (PDF). Epidemiology 19 (1): 55–62. doi:10.1097/EDE.0b013e31815c09b9. பப்மெட்:18091004 இம் மூலத்தில் இருந்து 2008-09-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080910175545/http://www.cafeesaude.com.br/downloads/caffeine%20miscarriage%202008%20A.pdf. பார்த்த நாள்: 2012-09-25.
"Studies Examine Effects Of Caffeine Consumption On Miscarriage Risk". Medical News Today. 23 January 2008. Archived from the original on 30 ஏப்ரல் 2008. பார்க்கப்பட்ட நாள் 16 February 2008.{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ Pollack AZ, Buck Louis GM, Sundaram R, Lum KJ (September 2009). "Caffeine consumption and miscarriage: a prospective cohort study". Fertil. Steril. 93 (1): 304–6. doi:10.1016/j.fertnstert.2009.07.992. பப்மெட்:19732873.
- ↑ Yip S, Sahota D, Cheung L, Lam P, Haines C, Chung T (2003). "Accuracy of clinical diagnostic methods of threatened abortion". Gynecol Obstet Invest 56 (1): 38–42. doi:10.1159/000072482. பப்மெட்:12876423.
- ↑ Condous G, Okaro E, Khalid A, Bourne T (2005). "Do we need to follow up complete miscarriages with serum human chorionic gonadotrophin levels?". BJOG 112 (6): 827–9. doi:10.1111/j.1471-0528.2004.00542.x. பப்மெட்:15924545. https://archive.org/details/sim_bjog_2005-06_112_6/page/827.
- ↑ 55.0 55.1 55.2 Kripke C (2006). "Expectant management vs. surgical treatment for miscarriage". Am Fam Physician 74 (7): 1125–6. பப்மெட்:17039747 29 செப்டம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. Error: If you specify
|archivedate=
, you must also specify|archiveurl=
. http://www.aafp.org/afp/20061001/cochrane.html#c2. பார்த்த நாள்: 31 December 2006. - ↑ Tang O, Ho P (2006). "The use of misoprostol for early pregnancy failure.". Curr Opin Obstet Gynecol 18 (6): 581–6. doi:10.1097/GCO.0b013e32800feedb. பப்மெட்:17099326.
- ↑ ""How to Prevent Miscarriages"". Archived from the original on 2012-09-19. பார்க்கப்பட்ட நாள் 2012-09-21.
- ↑ Gleicher N, Ryan E, Weghofer A, Blanco-Mejia S, Barad DH (2009). "Miscarriage rates after dehydroepiandrosterone (DHEA) supplementation in women with diminished ovarian reserve: a case control study” Reproductive Biology & Endocrinology 7:108
- ↑ Wilcox AJ, Baird DD, Weinberg CR (1999). "Time of implantation of the conceptus and loss of pregnancy.". New England Journal of Medicine 340 (23): 1796–1799. doi:10.1056/NEJM199906103402304. பப்மெட்:10362823.
- ↑ 60.0 60.1 Wang X, Chen C, Wang L, Chen D, Guang W, French J (2003). "Conception, early pregnancy loss, and time to clinical pregnancy: a population-based prospective study.". Fertil Steril 79 (3): 577–84. doi:10.1016/S0015-0282(02)04694-0. பப்மெட்:12620443.
- ↑ Q&A: Miscarriage. (August 6 , 2002). BBC News. Retrieved January 17, 2007. Also see Lennart Nilsson, A Child is Born 91 (1990)(At eight weeks, "the danger of a miscarriage . . . diminishes sharply.")
- ↑ Rodeck, Charles; Whittle, Martin. Fetal Medicine: Basic Science and Clinical Practice[தொடர்பிழந்த இணைப்பு] (Elsevier Health Sciences 1999), page 835.
- ↑ Ammon Avalos, L; Galindo, C; Li, DK (2012 Jun). "A systematic review to calculate background miscarriage rates using life table analysis.". Birth defects research. Part A, Clinical and molecular teratology 94 (6): 417–23. பப்மெட்:22511535.
- ↑ Andersen, A.-M. N.; Wohlfahrt, J; Christens, P; Olsen, J; Melbye, M (2000). "Maternal age and fetal loss: Population based register linkage study". BMJ 320 (7251): 1708–12. doi:10.1136/bmj.320.7251.1708. பப்மெட்:10864550.
- ↑ Kleinhaus, K; Perrin, M; Friedlander, Y; Paltiel, O; Malaspina, D; Harlap, S (2006). "Paternal Age and Spontaneous Abortion". Obstetrics & Gynecology 108 (2): 369–77. doi:10.1097/01.AOG.0000224606.26514.3a. பப்மெட்:16880308. https://archive.org/details/sim_obstetrics-and-gynecology_2006-08_108_2/page/369.
- ↑ Slama, R.; Bouyer, J; Windham, G; Fenster, L; Werwatz, A; Swan, SH (2005). "Influence of Paternal Age on the Risk of Spontaneous Abortion". American Journal of Epidemiology 161 (9): 816–23. doi:10.1093/aje/kwi097. பப்மெட்:15840613.
- ↑ Kleinhaus K, Perrin M, Friedlander Y, Paltiel O, Malaspina D, Harlap S (2006). "Paternal age and spontaneous abortion". Obstet Gynecol 108 (2): 369–77. doi:10.1097/01.AOG.0000224606.26514.3a. பப்மெட்:16880308.
- ↑ Slama R, Bouyer J, Windham G, Fenster L, Werwatz A, Swan S (2005). "Influence of paternal age on the risk of spontaneous abortion.". Am J Epidemiol 161 (9): 816–23. doi:10.1093/aje/kwi097. பப்மெட்:15840613.
- ↑ Nybo Andersen A, Wohlfahrt J, Christens P, Olsen J, Melbye M (2000). "Maternal age and fetal loss: population based register linkage study". BMJ 320 (7251): 1708–12. doi:10.1136/bmj.320.7251.1708. பப்மெட்:10864550.
- ↑ Spencer, James. Sheep Husbandry in Canada, page 124 (1911).
- ↑ "Beef cattle and Beef production: Management and Husbandry of Beef Cattle”, Encyclopaedia of New Zealand (1966).
- ↑ Fraser-Smith, AC (1975). "Male-induced pregnancy termination in the prairie vole, Microtus ochrogaster". Science (American Association for the Advancement of Science) 187 (4182): 1211–1213. doi:10.1126/science.1114340. பப்மெட்:1114340. http://www.sciencemag.org/cgi/content/abstract/187/4182/1211.
- ↑ Wolff, Jerry O; Wolff, Jerry (June 2002). "A field test of the Bruce effect in the monogamous prairie vole (Microtus ochrogaster)". Behavioral Ecology and Sociobiology (Berlin/Heidelberg: Springer) 52 (1): 31–7. doi:10.1007/s00265-002-0484-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:1432-0762. http://www.springerlink.com/content/g65dcacncm0rwbkm/.[தொடர்பிழந்த இணைப்பு]