உள்ளடக்கத்துக்குச் செல்

சே குவேரா

விக்கிமேற்கோள் இலிருந்து
நான் இறந்த பிறகு என் துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும் தோட்டாக்கள் சீறிப் பாயும்!.

சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (ஜூன் 14, 1928 - ஒக்டோபர் 9, 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

மேற்கோள்கள்

[தொகு]
நான் இறந்த பிறகு என் துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும் தோட்டாக்கள் சீறிப் பாயும்!.
  • மண்டியிட்டு வாழ்வதை விட நிமிர்ந்து நின்று சாவதே மேல்.
  • நான் இறந்த பிறகு என் துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும் தோட்டாக்கள் சீறிப் பாயும்!.
  • எல்லா மனிதருக்கும் மனிதம்,அன்பு என்பது சாத்தியமாகும் வரை நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும்.
  • போருக்குச் செல்லும் போது, கையில் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. நீ சுத்த வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்துக்கொள்ள முடியும்.
  • விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம். இல்லையேல் உரம்.
  • விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்குவதில்லை.
  • எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.
  • எதிர்கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒரு நாணையத்தை சுண்டிப்போட்டு அதிர்ஷ்டத்தை நம்புவதைப் போல அபாயத்தை எதிர்கொள்கிறான். ஒரு கொரில்லாப் போராளிக்கு, ஒரு மோதலைத் தொடர்ந்து அவன் உயிரோடு இருக்கிறானா, இல்லையா என்பது முக்கியமில்லாமல் போய்விடுகிறது.
  • நடைமுறைப் போராளிகளாகிய நாங்கள் எங்கள் பாதைகளில் அடியெடுத்து வைத்தபோது மார்க்ஸ் என்கிற அறிஞரின் பார்வையோடு நடந்திருக்கிறோம்.
  • நமது ஒவ்வொரு நடவடிக்கையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர்க்குரலாக, மனித சமூகத்தின் விரோதியான அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்களை ஒன்றுபடுத்தும் அறைகூவலாக இருக்கட்டும்.
  • நாங்கள் செய்வதெல்லாம் கம்யூனிஸ்ட் போல உங்களுக்குத் தோன்றினால் நாங்கள் கம்யூனிஸ்ட்டுகள்தான்.
  • நமது போர்க்குரல் இன்னொரு மனிதனின் காதில் விழுமனால், நமது ஆயுதங்களை இன்னொரு கை எடுத்துக்கொள்ளுமானால், நமது இறுதிச்சடங்கில் இயந்திரத்துப்பாக்கியின் உறுமல்களோடும் புதிய போர்க்குரல்களோடும் இன்னும் பலர் கலந்துகொள்வார்களேயானால் மரணம் திடீரென ஆச்சரியப்படுத்தும் போது கூட, நாம் அதை வரவேற்கலாம்

புரட்சி

[தொகு]
  • புரட்சி என்பது தானாக மரத்திலிருந்து விழும் ஆப்பிள் அல்ல, நாம்தான் அதை விழச் செய்ய வேண்டும்.

நீயும் நானும் தோழர்களே

[தொகு]
ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்துபோவாயானால், நீ எனது தோழன்.
  • ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்துபோவாயானால், நீ எனது தோழன்.
  • * உலகின் எங்கோ நடக்கும் முறையின்மைக்காக உன் மனம் கொதித்தால், நீயும் எனக்குத் தோழன் தான்!
  • தோழரே! பட்டவர்த்தனமாக சொல்வதென்றால் ஸ்பெயினின் எந்தப்பகுதியிலிருந்து எனது மூதாதையர்கள் வந்தனர் என்பதை நான் அறியேன். நீண்ட காலத்திற்கு முன்பே அவர்கள் தங்கள் பூர்வீக வீட்டை விட்டு பிறந்தமேனியோடு வெளியேறிவிட்டனர். வசதியாக இல்லை என்ற ஒரே காரணத்துக்காக நான் அதுபோல கிளம்ப மாட்டேன். நாம் நெருங்கிய உறவினர்கள் இல்லை என நினைக்கிறேன். இந்த உலகத்தில் அநீதி தலையெடுக்கிற போதெல்லாம் கோபமும் வெறுப்பும் கொண்டு நீ குமுறி நடுங்குவாயானால் நாம் இருவரும் தோழர்கள். அதுதான் முக்கியமான விஷயம்.
    • மரியோ ரோசரியோ குவாரா என்பவருக்கு 1964ம் ஆண்டு சே எழுதிய கடிதத்தில்.
பரவலாகப் பலராலும் பயன்படுத்தப்படும் சே'வின் புகழ் பெற்ற மேற்கோளின் முழு வடிவம்.

ஏகாதிபத்தியம்

[தொகு]
  • நான் ஒரு கியூபன். நான் ஒரு அர்ஜெண்டைனன். நான் யாருக்கும் குறையாத லத்தீன் அமெரிக்க தேச பக்தன். இங்கே வந்திருக்கும் லத்தீன் அமெரிக்க முக்கிய மனிதர்கள் யாரும் தங்களை நான் அவமதித்து விட்டதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். லத்தீன் அமெரிக்க நாடுகளில் எதாவது ஒன்றின் விடுதலைக்கு எந்த பலனும் கேட்காமல், யாரையும் பலி கேட்காமல் நான் என்னையே தருவதற்கு தயாராக இருக்கிறேன்.[1]
  • ஏகாதிபத்தியத்தை நிர்மூலப்படுத்த வேண்டும். அதற்கு ஒவ்வொன்றாக, சிறு சிறு கட்டமாக மக்களை விடுவிக்க வேண்டும். எதிரியை அவன் பூமியில் இருந்து பெயர்த்தெடுத்து கடுமையான போராட்டத்திற்கு அழைக்க வேண்டும். அவனுக்குச் சாதகமான பகுதிகளையும் முகாம்களையும் அழிக்க வேண்டும்.

கடிதங்கள்

[தொகு]
  • கியூப புரட்சியின் எனக்கு அளிக்கப்பட்டிருந்த கடமைகளை நிறைவேற்றி விட்டேன் என நினைக்கிறேன். நான் உங்களிடமிருந்தும், தோழர்களிடமிருந்தும், என்னுடையவர்களாகிவிட்ட மக்களிடமிருந்தும் விடைபெறுகிறேன்.[2]

பிடல் காஸ்ட்ரோவுக்கு

[தொகு]
  • வேறோரு வானத்தின் கீழே என்னுடைய கடைசி நேரம் இருக்குமானால், அப்போதும் இந்த மக்களையும் (கியூப மக்களையும்), முக்கியமாக உங்களையும் (பிடல் காஸ்ட்ரோ) நினைத்துக் கொள்வேன். நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்ததற்கும், நீங்களே முன்னுதாரணமாய் விளங்கியதற்கும் நன்றி. என்னுடைய செயல்களின் விளைவுகளால் உங்களுக்கு உண்மையாக இருப்பேன்.[3]
  • எனது முழுமையான புரட்சிகரமான உணர்ச்சி வேகத்துடன் உங்களை ஆரத் தழுவிக் கொள்கிறேன்.[3]

பெற்றோர்களுக்கு

[தொகு]
  • கேடயத்தை கைகளில் ஏந்திக் கொண்டு பயணத்தை ஆரம்பிக்கிறேன். பத்து வருடங்களுக்கு முன்பும் இதே போல விடைபெற்று ஒரு கடிதத்தை எழுதியிருந்தேன். அதில் நான் ஒரு சிறந்த படைவீரனாகவும், சிறந்த மருத்துவராகவும் இல்லாமல் இருந்ததற்காக வருத்தப்பட்டிருந்தேன். இன்று நான் அவ்வளவு மோசமான படைவீரன் அல்ல.[4]
  • தங்களை விடுவித்துக் கொள்ளும் பொருட்டு போராடும் மக்களுக்கு ஆயுதம் தாங்கிய போராட்டம் மட்டுமே தீர்வு என்று நம்புகிறேன். அதன்படியே நடக்கிறேன். பலர் என்னை சாகசக்காரனாக அழைக்கலாம். ஒரு வித்தியாசம். தன்னுடைய நம்பிக்கைகளை உண்மையென்று காட்ட தன்னையே பணயம் வைக்கிற சாகசக்காரன்தான் நான்.[4]
  • நொய்ந்து போன என் கால்களையும், ஓய்ந்து போன எனது நுரையீரல்களையும் மனவலிமையால் ஒரு கலைஞனின் நுட்பத்தோடு சரி செய்து வைத்திருக்கிறேன்.[4]
  • இருபதாம் நூற்றாண்டின் இந்த சிறிய போராளியை அவ்வப்போது நினைத்துக் கொள்ளுங்கள்.[4]
  • என் அன்பு தாய் தந்தையே, உங்களுக்கு கீழ்படியாத, இந்த தறுதலைப் பிள்ளையின் தழுவலை ஏற்றுக் கொள்ளுங்கள்.[4]

மனைவிக்கு

[தொகு]
  • தைரியமாக இரு. ஒருவேளை யுத்தத்தில் நான் இறந்து போனால், எனது குழந்தைகள் பெரியவர்களாகி எனது கடமையை தொடர்ந்து செய்வார்கள் என்று நம்புகிறேன். மக்களின் துன்பங்களையும், அவர்கள் அனுபவிக்கும் வறுமையையும் கண்டு நம்மைப் போலவே அவர்களும் கோபம் கொள்வார்கள் என நம்புகிறேன்.[5]
  • எனது அன்புக்குரிய மனிதர்களை, உன்னை, குழந்தைகளை பிரிய நேர்கிறதே என்று வேதனைப் படுகிறேன். பிறநாடுகளில் கோடிக்கணக்கான மக்களைச் சுரண்டும் எதிரியோடு போரிடப் போகிறேன் என்பது வேதனையை குறைக்கிறது.[5]

சே குவேராவின் குழந்தைகளுக்கு

[தொகு]
  • நீங்கள் நல்ல புரட்சிக்காரர்களாக வரவேண்டும். கஷ்டப்பட்டு படிக்க வேண்டும். தொழில்நுட்ப ஞானம் பெற வேண்டும். அறிவுதான் இயற்கையை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும். தனிப்பட்ட முறையில் நாம் முக்கியம் அல்ல. புரட்சி ஒன்றே மிக முக்கியமானது. எல்லாவாற்றையும் விட, எப்போதும் உலகத்தின் எங்கேனும் யாருக்காவது நடக்கிற கொடுமைகளுக்கு வருத்தப்படுகிறவர்களாக இருங்கள்.
  • இன்னும் நிறைய காலம் போராட வேண்டியிருக்கிறது. வளர்ந்த பிறகு நீயும் இந்த போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும். அதற்கு உன்னை தயார் செய்து கொள். புரட்சிகரமானவளாய் இரு. உன்னுடைய வயதில் நிறைய படிப்பதும், நியாயங்களை ஆதரிப்பதும்தான் அவைகள்.
சே வின் மூத்த மகள் ஹில்டிடாவுக்கு

பிடலும் சே'வும்

[தொகு]
  • பிடல் என்னைவிடச் சிறந்த மூளையுடையவனை கண்டுபிடித்து விடலாம். ஆனால் அவரது கருத்துக்களோடு அதிகம் ஒத்துப் போகிற ஒருவனை அவர் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. ~ சே
  • பூரண பரஸ்பர மரியாதை, பரஸ்பர புரிதல் என்ற குணங்கள் ததும்பிய அந்த சிறந்த நட்பைக் கண்டுகொள்ள எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. இந்த இரண்டு புரட்சிக்காரர்களின் தனிப்பட்ட குணங்கள் முற்றிலும் மாறுபட்டவை. ஆனால் ஒருவர் மீது ஒருவர் உயர்ந்த கருத்துக்களை உடையவர்களாய் இருந்தனர்.~ அனஸ்டஸ் இவினோவிச் மிகோயின்

சே குவாரா பற்றி பிறரது மேற்கோள்கள்

[தொகு]
அவர்கள் நினைத்தது போலில்லாமல் நீ வாழ்ந்து கொண்டு இருக்கிறாய், சே.
  • இலட்சக்கணக்கான பக்கங்களில், ஆயிரம் வருடங்கள் வேண்டுமானாலும் சேகுவாராவை எழுதிக் கொண்டிருக்கலாம். ~ கபிரியேல் கார்சியா மார்க்கேஸ்
  • அவர்கள் நினைத்தது போலில்லாமல் நீ வாழ்ந்து கொண்டு இருக்கிறாய், சே.
சே குவேரா புதைக்கப்பட்ட இடத்துக்கருகில் ஒரு சுவரில் எழுதப்பட்டுள்ள வாசகம்.
  • சேவின் காலடிகளைத் தொடருங்கள்.
பொலிவியாவில் சே ரகசியமாய் சுற்றியலைந்த மலைப்பகுதிகளில் சுற்றுலாத்துறை வைத்துள்ள பலகைகளில் உள்ள வாசகம்.
  • சே நமது மனசாட்சியை கேள்வி கேட்டிருக்கிறார். வெறித்த அவரது கடைசி பார்வை நமது ஆழ்மனதுக்குள் சென்று கொண்டே இருக்கிறது. ~ அகமது பென் பெல்லா அல்ஜீரியாவின் முன்னாள் அதிபர், சே குவேராவின் நண்பர்
  • நம் எல்லோருக்கும் மிகவும் பழக்கமான, மிகவும் பிடித்தமான, மிகவும் பிரியமான மனிதர் அவர். நமது புரட்சியின் தோழர்களில் சந்தேகமே இல்லாமல் மகத்தானவர் அவர். வரலாற்றின் ஒளிபொருந்திய பக்கத்தை எழுதியிருக்கிற அந்த மனிதருக்கும...
  • சே தோற்கடிக்க முடியாத வீரர். கமாண்டர். ஒரு இராணுவத்தின் பார்வையில் அவர் மிக தைரியமான மனிதர். அசாதாரணமாக தாக்குதல் நடத்துபவர். சே போர்க்கலையில் சிறந்தவர். கொரில்லப்போரில் ஒரு நுட்பமான கலைஞர்.
  • ஒருவரின் வீர மரணத்திற்குப் பிறகு, அவரின் கொள்கைகள், கொரில்லக் கோட்பாடுகளின் மீது புழுதிவாரி இறைக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். அந்தக் கலைஞர் வேண்டுமானால் இறந்திருக்கலாம். ஆனல் எந்த கலைக்காக தனது வாழ்க்கையையும் அறிவையும் அர்ப்பணித்துக் கொண்டாரோ, அது ஒரு போதும் அழிந்து போகாது.
  • நன்றி சேகுவாரா, உனது வரலாற்றிற்கும், வாழ்க்கைக்கும், உதாரணத்திற்கும் நன்றி. கடுமையாக போராடிய உனது சிந்தனைகளை பாதுகாப்பதற்கு நாங்கள் நடத்தும் போராட்டத்தில் எங்களுக்கு உத்வேகமளிக்க மீண்டும் நீ வந்ததற்கு நன்றி.[6]

சான்றுகள்

[தொகு]
  1. 1964 ஆம் ஆண்டு ஐ.நா சபைக் கூட்டத்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆற்றிய உரை
  2. 1965ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பொலிவியா கிளம்பும் சமயத்தில் எழுதப்பட்ட ஒரு கடிதம்
  3. 3.0 3.1 கியூபாவை விட்டுக் கிளம்பும் போது பிடலுக்கு எழுதிய கடிதத்தில்
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 கியூபாவிலிருந்து பொலிவியாவுக்குக் கிளம்பிய சமயத்தில் அவர் பெற்றோர்களுக்கு எழுதிய கடிதம்
  5. 5.0 5.1 கியூபாவிலிருந்து பொலிவியாவுக்குக் கிளம்பிய சமயத்தில் அவர் மனைவிக்கு எழுதிய கடிதம்
  6. சே குவேராவின் எலும்புகள் கியூபாவில் அடக்கம் செய்யப்பட்ட போது, 1997 அக்டோபர் 18ம் தேதி ஹவானாவில் பிடல் காஸ்ட்ரோ ஆற்றிய உரையில்.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Commons
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:


படங்கள்

"https://ta.wikiquote.org/w/index.php?title=சே_குவேரா&oldid=38094" இலிருந்து மீள்விக்கப்பட்டது