உள்ளடக்கத்துக்குச் செல்

பிரம்பானான் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
பிரம்பானான் கோயிற்றொகுதி
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
பிரம்பானான் கோயிலும் அதன் சூழலும்
வகைபண்பாடு
ஒப்பளவுi, iv
உசாத்துணை642
UNESCO regionஆசிய பசுபிக்
ஆள்கூற்று7°45′8″S 110°29′30″E / 7.75222°S 110.49167°E / -7.75222; 110.49167
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1991 (15 ஆவது தொடர்)
பிரம்பானான் கோயில் is located in இந்தோனேசியா
பிரம்பானான் கோயில்
Location of பிரம்பானான் கோயில் in Indonesia.

பிரம்பானான் கோயில் (இந்தோனேசியம்: சண்டி பிரம்பானான் (அ) சண்டி ராரா ஜொங்ராங் (Candi Prambanan or Candi Rara Jonggrang) என்பது ஒன்பதாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட, இந்தோனேசிய யாவாப் பகுதியில் அமைந்துள்ள இந்து ஆலயம் ஆகும். உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக, இக்கோயில் வளாகம், யுனெஸ்கோவால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.[1] 47 மீ (154 அடி) உயரமான இக்கோயிலின் மைய விமானம், தென்கிழக்காசியாவின் மிகபபெரிய இந்துக் கோயில்களில் ஒன்றாக இருப்பதுடன், ஆண்டாண்டாய், பல்லாயிரம் உல்லாசப்பயணிகளைக் கவரும் இடமாகவும் இது திகழ்ந்து வருகின்றது.[2]

முதலில் சிவனுக்காகவே கட்டப்பட்ட இவ்வாலயம், ஆரம்பத்தில் "சிவக்கிரகம்" என்றே அழைக்கப்பட்டிருக்கின்றது என்பதை இக்கோயிலிலுள்ள பொ.பி 856ஆம் ஆண்டு "சிவக்கிரகக் கல்வெட்டு" கூறுகின்றது.[3] பிற்காலத்தில், இதன் இருபுறமும் திருமால், பிரமன் ஆகியோருக்கு ஆலயம் எழுப்பப்பட்டு, தற்போதுவரை, மும்மூர்த்திகள் கோயிலாகவே இனங்காணப்பட்டு வருகின்றது.

வரலாறு

[தொகு]
காலைப் பனிமூட்டத்தில் அழகோவியமாய்த் திகழும் பிரம்பானான் கோயில்
கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் பிரம்பானான் சிதைவுகள், 1895களில்.

சாவகத்தின் ஒன்பதாம் நூற்றாண்டு பௌத்த வம்சமான சைலேந்திர வம்சத்துக்குப் போட்டியாக, இந்து வம்சமான சஞ்சய வம்சத்தால் அமைக்கப்பட்டதே இப்பிரமாண்டமான இந்துக் கோயில் ஆகும். இக்கோயிலின் பிரமாண்டக் கட்டமைப்பானது, மத்திய ஜாவாவின் மாதாராம் அரசில், மகாயான பௌத்தத்தின் வரவால் வீழ்ச்சியடைந்திருந்த இந்து அல்லது சைவ சமயம், பழையபடிக்கு முன்னிலைக்கு வர ஆரம்பித்ததைச் சுட்டுவதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.[4] இதை அமைத்தவர், சஞ்சய வம்ச மன்னன் "ராகாய் பிகாதன்" என்று நம்பப்படுகின்றார்.[5] பிகாதனால் பொ.பி 850 அளவில் ஆரம்பமான இதன் கட்டுமானம், மன்னன் லோகபாலனாலும், பாலிதுங் மகாசம்பு மன்னனாலும் கட்டிமுடிக்கப்பட்டது.[6] அதன் பின்னும், இக்கோயில், தட்சன், துலோதுங் முதலான பிற்கால மன்னர்களால் விரிவாக்கம் பெற்றிருக்கின்றது.

930களில், ஈசியான வம்சத்து இம்பு சிந்தோக் மன்னனால் மாதாராம் அரசு, கிழக்கு சாவகத்துக்கு இடமாற்றப்பட்டதை அடுத்து, பிரம்பானான் வளாகம் பொலிவிழக்கத் தொடங்கியது.[7] பின்பு முற்றாகக் கைவிடப்பட்ட பிரம்பானான், பதினாறாம் நூற்றாண்டில் இடம்பெற்ற பாரிய பூமியதிர்வு ஒன்றால் பெருத்த சேதமடைந்ததுடன், சிதைந்த அப்பிரமாண்டக் கோயில் இடிபாடுகள் உள்ளூர்வாசிகளை அச்சுறுத்தியதுடன், அதைச் சுற்றி சுவாரசியமான மீமாந்தக் கதைகளையும் கட்டச் செய்தது.

சிதைந்துபோய் காட்டுக்குள் உடைந்தொழிந்து கிடந்த பெருங்கோயில் பற்றி உள்ளூர்வாசிகள் அறிந்திருந்தாலும், அதன் வரலாற்று முக்கியத்துவத்தை அறிந்திருக்கவில்லை. இப்பகுதியில் கிடைத்த சிற்பங்களையும் கற்களையும் எடுத்துச் சென்று, அலங்காரப் பொருட்களாகவும் கட்டுமானங்கள் அமைக்கவும் பயன்படுத்துவதே தொடர்ந்தது. 1918 ஆம் ஆண்டு, எஞ்சிய சிதைவுகளைப் பாதுகாத்து சீரமைக்கும் பணியை, அப்போது சாவகத்தை ஆண்ட இடச்சு அரசு ஆரம்பித்தது. 1953 இல், பிரதான ஆலயமான சிவன் கோயில் முற்றாக மீளமைக்கப்பட்டு, சுகர்ணோவால் திறந்துவைக்கப்பட்டது.[8]

கோயிற்றொகுதி

[தொகு]
பிரம்பாணன் கோயிற்றொகுதியின் தொல்லியல் மாதிரி

முன்பு பிரம்பாணன் வளாகத்தில் 240 பரிவாரக் கோயில்கள் இருந்ததாகச் சொல்லப்பட்டாலும்[9] அவற்றில் இரண்டைத் தவிர மற்ற எல்லாம் சிதைந்தொழிந்து போய், அத்திவாரம் மட்டுமே காணப்படுகின்றது. தற்போது 240 கோயில்கள் காணப்படும் பிரம்பானான் வளாகத்தில் பின்வருவன முக்கியமான ஆலயங்கள்:

  1. 3 திரிமூர்த்திகள் கோயில்கள்
  2. 3 வாகனக் கோயில்கள்: நந்தி தேவர், கருடன், அன்னம் ஆகிய வாகனங்களுக்கு அமைக்கப்பட்டது.
  3. 2 அபித் கோயில்கள்: திரிமூர்த்தி மற்றும் வாகனக் கோயில்களுக்கிடையே வட தென்புறங்களிலுள்ள இரு ஆலயங்கள்.
  4. 4 கெளிர் கோயில்கள்: உள்வீதியின் நான்கு வாயில்களையும் அண்மித்துள்ள சிற்றாலயங்கள்.
  5. 4 பாதொக் கோயில்கள்:உள்வீதியின் நான்கு மூலைகளிலுமுள்ள சன்னதிகள்.
  6. 224 பரிவாரக் கோயில்கள்: பெரிய கோயிலைச் சுற்றி, சற்சதுரமாக நான்கு வரிசைகளில்: 44, 52, 60, 68 என்று அமைந்த சிற்றாலயங்கள்
திரிமூர்த்தி திறந்தவெளி அரங்கிலிருந்து பிரம்பானான் கோயில் - இரவுத் தோற்றம்

பிரம்பானானின் மத்தியிலுள்ள மும்மூர்த்திகளுக்கான முக்கோயில்களில், பழமையானதும், உயரமானதும் பெரியதும், மத்தியிலுள்ள சிவன் கோயில் ஆகும். இவ்வாலயச் சுற்றுப்பிரகாரத்தில், இராமாயணக் காட்சிகள் செதுக்கப்ப்பட்டுள்ளமை, இதன் சிறப்பம்சமாகும். இக்கோயிலின் மத்தியில் 3 மீ உயரமான மகாதேவர் சிவபெருமான் கம்பீரமாக நிற்கின்றார். அதைச் சுற்றியுள்ள மூன்று கோட்டங்களில், கணேசன், துர்க்கை, அகத்தியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள துர்க்காதேவி, ராரா யோங்ரோங் ("மெல்லியலாள்") எனும் புகழ்பெற்ற சாவக இளவரசியொருத்தியின் நாட்டுப்புறக்கதையுடன் தொடர்புடையவள்.[10] சிவன் கோயிலுக்கு முன்னுள்ள நந்தி வாகனக் கோயிலில், சந்திரன், சூரியன் ஆகியோருக்கும் சிற்பங்கள் உள்ளன.[11]

சுற்றுலாப் பயண மையம்

[தொகு]

இந்தோனேசியாவின் மிக முக்கியமான சுற்றுலாக் கவர்ச்சி இடங்களில் ஒன்றாக, பிரம்பானான் திகழ்கின்றது.யாவா மற்றும் பாலி இந்துக்கள் தம் சமயச் சடங்குகளைப் பிரம்பானான் பகுதியில் தொடர்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.[12][13] பிரம்பானான் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள திரிமூர்த்தி திறந்தவெளி அரங்கில், ஒவ்வொரு பூரணையிலும் இடம்பெறும், யாவாவின் பாரம்பரிய இராமாயண நடனம், இன்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அரங்காடலாகத் திகழ்கின்றது. 2006இல் யோக்யகர்த்தாவில் ஏற்பட்ட பூகம்பத்தால் பலத்த சேதமடைந்துள்ளதால், ஆலயத்தின் சில பாகங்களுக்குள் நுழைய, வருகையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 13 பெப்ரவரி 2014இல் குமுறிய கெலுட் எரிமலைச் சாம்பல் பாதிப்பால், இக்கோயில் வளாகம் மூடப்பட்டதெனினும், சில நாட்களிலேயே மீளத் திறக்கப்பட்டது.[14]

காட்சியகம்

[தொகு]

சுவர்த் தாங்குதளங்கள்

[தொகு]

பிரம்பானான் காட்சியகம்

[தொகு]

மேலும் பார்க்க

[தொகு]


அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Prambanan Temple Compounds – UNESCO World Heritage Centre
  2. இந்தோனேசிய சுற்றுலா - பிரம்பானான் கோயில்
  3. Drs. R. Soekmono, (1973). Pengantar Sejarah Kebudayaan Indonesia 2, 2nd ed. Yogyakarta: Penerbit Kanisius. p. 46.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
  4. Carlos Ramirez-Faria (2007) "Concise Encyclopeida Of World History" p.639
  5. Soedjatmoko (2006) "An Introduction to Indonesian Historiography" p.63
  6. Soetarno, Drs. R. second edition (2002). Aneka Candi Kuno di Indonesia (Ancient Temples in Indonesia), pp. 16. Dahara Prize. Semarang. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 979-501-098-0.
  7. Masatoshi Iguchi (2015) "Java Essay: The History and Culture of a Southern Country" P.16
  8. Heidi Dahles (2013) "Tourism, Heritage and National Culture in Java: Dilemmas of a Local Community" pp.73,74
  9. Ariswara 1993, p. 8.
  10. Moertjipto, ‎Bambang Prasetyo (1992) "The Çiwa Temple of Prambanan" p.46
  11. Ariswara 1993. pp. 26.
  12. Nyepi di Prambanan[தொடர்பிழந்த இணைப்பு]
  13. Nyepi di Candi Prambanan
  14. "Mt Kelud Erupts in Indonesia, 100,000 Forced to Evacuate as Ash Blankets Java" Nature World News

உசாவியவை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]