உள்ளடக்கத்துக்குச் செல்

செண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செண்டை வாசிக்கும் கலைஞர்கள்

செண்டை என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு தாள இசைக்கருவியாகும். இக்கருவி பரவலாகக் கேரளம், கருநாடக மாநிலத்தின் துளு நாடு பகுதி மற்றும் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது. துளு நாட்டில் இது செண்டே என்று அழைக்கப்படுகிறது.

செண்டை மேளம் பண்டைய தமிழ் இசை தோற்கருவி "கொடுகொட்டி" என்பதன் பரிணாம வளர்ச்சியே ஆகும். செண்டை 18ம் நூற்றாண்டில் முழுமையான தற்கால வடிவம் பெற்றது.

செண்டை நீண்ட உருளை வடிவத்திலுள்ள மரக்கருவியாகும். இது இரண்டு அடி நீளமும் ஓரடி விட்டமும் கொண்டது. இதன் இரண்டு முனைகளும் செண்டை வட்டங்களால் மூடப்பட்டிருக்கின்றன. பொதுவாக இது பசு மாட்டின் தோலால் உண்டாக்கப்படுகிறது. காளை மாட்டின் தோல் இதற்கு பயன்படுத்தப்படுவதில்லை. தரம் மிக்க ஒலிக்காக பசு மாட்டின் அடி வயிற்று தோல் பயன்படுத்தப்படுகிறது. செங்குத்தாக வைப்பதற்காக வாசிப்பவர்களின் தோளிலிருந்து தொங்கவிடப்படுகிறது. செண்டையின் மேல் பகுதியில் மட்டும் கோல் கொட்டப்படும்.

உரத்த விறைப்பான ஒலிக்காக இப்பறை பிரசித்தி பெற்றது. செண்டைக்கு இரண்டு பக்கமுண்டு, இடது பக்கம் இடந்தலை மற்றும் வலது பக்கம் வலந்தலை. இடந்தலை ஒன்று/இரண்டு அடுக்கு மாட்டு தோலும், வலந்தலை ஐந்து/ஏழு அடுக்கு மாட்டு தோலும் கொண்டது. இத்தோல்கள் நிழலில் உலர்ந்த பிறகு செண்டை வட்டத்துடன் கட்டப்படுகிறது. செண்டை வட்டம், ஈரப்பனை அல்லது மூங்கில் மரத்தால் உண்டாக்கப்பட்டது. கட்டுவதற்காக பனிச்சை மரத்தின் விதைகளை கொண்ட பசை உபயோகிக்கப்படுகிறது. வட்டக்கட்டமைப்பை ஒரு பாத்திரத்தில் வைத்து, ஒரு நாள் முழுவதும் கொதிக்க வைத்த பின் வட்டமாக வளைக்கப்பட்டு காய வைக்கப்படுகிறது. செண்டையின் உடற்பகுதி 2அடி 36 அங்குலம் விட்டமும் 1.5 அங்குலம் தடிமானமும் கொண்டது. இது பலாமரத்தின் இளமரத்தால் செய்யப்படுகிறது. பின் தடிமானம் 0.25 அங்குலங்களுக்கு குறைக்கப்பட்டு ஒருமித்த புள்ளியியல் தள்ளி வைக்கப்படுகிறது. நன்கு அதிர்வொலிக்காக இது செய்யப்படுகிறது. வருடத்தில் சராசரியாக ஒரு பறையாளர் 15 முறை மரகட்டமைப்பை மாற்றுவர். செண்டை பெரும்பாலும் இந்து விழாக்களில் பயன்படுத்தப்படும். செண்டை கேரளத்தின் 1. கதைகளி 2. கூடியாட்டம் 3. கண்யர்களி 4. தெய்யம் மற்றும் பல சமஸ்தான நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படுகிறது. கர்நாடகத்திலும் யக்ஷகான கலையில் பயன்படுத்தப்படுகிறது.

செண்டை உருவாக்கும் கலை இன்று சில பெரும் கொள்ளர் குடும்பங்களுடனே உள்ளது. பெருவேம்பை, இலக்கிடி, நென்மாறை, வெள்ளார்காடு, வலப்பயை கிராமங்களில் செண்டை தயாரிக்கப்படுகிறது. வெள்ளார்காடு செண்டை மிகவும் புகழ்பெற்றது.

கேரளத்தின் திருச்சூர் பூரத்தில் கேரள மாநிலத்தில் உள்ள செண்டைக் கலைஞர்கள் ஒன்று கூடி இசைப்பர்.

செண்டையின் வகைகள்

[தொகு]

செண்டையின் வகைகள் இவை. செண்டை வட்ட விட்டத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

  1. எட்டரை வீசான் செண்டை (8.5)
  2. ஒன்பது வீசான் செண்டை (9)
  3. ஒன்பதே கால் வீசான் செண்டை (9 1/4)
  4. ஒன்பதரை வீசான் செண்டை (9 1/2)
  5. ஒன்பதே முக்கால் வீசான் செண்டை (9 3/4)
  6. ஒன்பதே முக்கால் கலி வீசான் செண்டை (9 3/4க்கும் 10க்கும் இடையே)

பயன்பாடு, உருவம், மற்றும் உருவ அளவின் அடிப்படையில் செண்டையின் வகைகள் இவை: வீக்கு செண்டை, அச்சன் செண்டை, உருட்டு செண்டை, முறி செண்டை, மற்றும் பல.

உருட்டு செண்டையில் பல மாறுபட்ட இசைகளை ஒலிக்க இயலும். இச்செண்டை வாத்தியக் குழுவில் முன்னணி வகிக்கும். ஆகையால், இது "பிரமாண வாத்தியமாக" திகழ்கிறது. இச்செண்டையின் பெயருக்கு ஏற்றவாறு பறையாளர் தன் வலது கை மணிக்கட்டை 'உருட்டிக்'கொண்டு பறை அடிப்பார். முதல் கொட்டில் அடிப்பவரின் உள்ளங்கையை (வலது கையின்) உள் நோக்கியும் அடுத்த கொட்டில் உள்ளங்கை வெளி நோக்கியும் இருக்கும்.

வீக்கு செண்டையும் அச்சன் செண்டையும் இசையில் தாளத்தை பராமரிக்க உள்ளது. . இது கொண்டு திடமான ஒலி ஒலிக்க முடியும்.

செண்டை மேளம்

[தொகு]

செண்டை மேளம் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. செண்டை மேளத்தில் செண்டை, இலைத்தாளம், குழல் மற்றும் கொம்பு உட்பட நான்கு வாத்தியங்கள் உள்ளன. செண்டை மேளத்தில் உள்ள மேள வகைகள்:

  1. பஞ்சாரி மேளம்
  2. பாண்டி மேளம்
  3. சம்ப மேளம்
  4. செம்பட மேளம்
  5. அடந்த மேளம்
  6. அஞ்சடத மேளம்
  7. த்ருவ மேளம்

மேல்கண்டவற்றில் முதல் ஆறு மேளங்கள் "செம்பட" மேளத்தினுள்ளில் வருகின்றன. இவைகளை தவிர கேரளத்தில் 3 மேளங்கள் மேலுமுள்ளன : கல்பம், ஏகதசம் மற்றும் நவம்.

பஞ்சாரி மேளம், பாண்டி மேளம் மற்றும் தாயம்பகையில் பயன்படுத்தப்படும் செண்டையின் வட்டம் மெல்லியதாக இருக்க வேண்டும். சிங்காரி மேளம் செண்டையின் வட்டம் திடமாகவும் குறைந்த விலை கொண்டது. சிங்காரி மேளம் மேளக்கலைகளில் சேர்க்கப்படுவதில்லை.

செண்டையும், இலைத்தாளமும் தனியாக அரங்கேற்றியால் அதற்கு பெயர் தாயம்பகை.

பயிலும் முறை

[தொகு]

செண்டை தோளில் துணியால் தூக்கி தான் கொட்டுவார்கள். ஒன்றோ இரண்டோ கோல்கள் கொண்டு அடிப்பார்கள். சில நேரம் அரிசி மாவில் முக்கி உலர்ந்த கைவிரல்களாலும் கொட்டுவார்கள். செண்டையின் இடந்தலை அசுரவாத்தியமாகவும், வலந்தலை தேவவாத்தியமாகவும் கருதப்படுகிறது. ஆகையால், வலந்தலை மட்டுமே கோயில்களில் ஒலிக்கப்படும். கோல் பதிமுகம் அல்லது புளியமரத்தின் தடியாலானது.

பயிற்சி ஆரம்பிக்கும் பொழுது முதலில் பிள்ளையாரை வணங்கும்படி கணபதி கை கொட்டப்படுகிறது. முடிவிலும் இது கொட்டப்படும்.

கணபதி கையில் 37 கொட்டுகள் உள்ளன.

Gi...... Kam...

Na.Ka. Tha.Ra. Kaam...

Dhi.Ri. Ki.Da. Tha.Ka. Tha.Ra. Kaam...

Na.Ka. Tha.Ra. Kaam...

Dhi.Kka. Nna.. Nna.. Kaam...

Du...... Du......

Dhi.Ri. Ki.Da. Tha.Ka. Tha.Ra. Kaam

Gi மற்றும் K சத்தங்களில் துவங்குபவை மட்டும் இடது கையால் கொட்டப்படும். கணபதி கைக்கு பிறகு ஆசிரியர் தரும் பயிற்சிக்கு பெயர் சாதகம்(സാധകം). சாதகம் மூன்று கொட்டி ஆரம்பிக்கப்படும். அது த கி ட ஸாதகம் (ത കി ട സാധകം).

காலம்

[தொகு]

இவ்வாத்தியத்தை கொட்டும்பொழுது கொட்டும் வேகத்தை கணக்கில் எடுப்பது காலம் என்று கூறப்படுகிறது.

[1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செண்டை&oldid=2756890" இலிருந்து மீள்விக்கப்பட்டது