ஆர்தர் ஆசுக்கின்
ஆர்தர் ஆசுக்கின் Arthur Ashkin | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 2, 1922 புரூக்ளின், நியூயார்க்கு, அமெரிக்கா. |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | பெல் ஆய்வுக்கூடங்கள் இலூசெண்டு தொழினுட்பம் |
கல்வி கற்ற இடங்கள் | கொலம்பியா பல்கலைக்கழகம் (பி.ஏ) கார்ணெல் பல்கலைக்கழகம் (முனைவர்) |
அறியப்படுவது | ஒளியிடுக்கிகள் |
விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (2018) |
ஆர்தர் ஆசுக்கின் (Arthur Ashkin, ஆர்தர் ஆஷ்கின், பிறப்பு: செப்டம்பர் 2, 1922) அமெரிக்க அறிவியலாளர். இவர் 2018 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை வென்ற மூவரில் ஒருவர். இவர் பெல் ஆய்வுகூடங்களிலும் பின்னர் இலூசெண்டு தொழினுட்பங்கள் என்னும் நிறுவனத்திலும் பணியாற்றினார். நோபல் பரிசு பெற்றவர்களிலேயே இவர்தான் அகவை கூடியவர் ஆவார்.
ஆசுக்கின் 1960-களின் கடைசியில் சீரொளியைக் கொண்டு சிறு துகள்களைப் பிடித்துக் கட்டுப்படுத்துவதைச் செய்தார். இதன் விளைவாக 1986 இல் சீரொளி இடுக்கிகள் அல்லது ஒளியிடுக்கிகள் (optical tweezers) என்னும் மிக நுட்பமான கருவியைக் கண்டுபிடித்தார். இதன் பயனாய் தனி அணுக்களையும், சிறு மூலக்கூறுகளையும் உயிரணு முதலான உயிரியப் பொருட்களையும் சீரொளி இடுக்கியில் சிக்க வைத்து அலச முடிகின்றது. இதற்கு அடிப்படையாக இருக்கும் இயற்பியல் விளைவு ஒளியின் அடர்த்தி வேறுபாட்டால் எழும் மிக நுட்பமான கதிராற்றல் அழுத்தவேறுபாடு ஆகும்.
ஆசுக்கின் இந்த உயர்நுட்ப சீரொளி இடுக்கியின் தந்தை எனக் கருதுகின்றார்கள்.[1][2][3] இக்கண்டுபிடிப்புக்காகத்தான் 2018 ஆம் ஆண்டின் இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பெற்றது.
இளமை வாழ்க்கை
[தொகு]ஆர்தர் ஆசுக்கின் நியூயார்க்கின் புரூக்கிலின் பகுதியில் 1922 இல் பிறந்து அங்கேயே வளர்ந்தார்.[4] இவர் நியூ செர்சியில் இரம்சன் என்னும் இடத்தில் வாழ்கின்றார்.[5]
இவருடைய பெற்றோர்கள் இசடோர் ஆசுக்கின், அன்னா ஆசுக்கின் ஆவர். இவரின் உடன்பிறந்தவர் சூலியசு ஆசுக்கின் என்பாரும் ஓர் இயற்பியலாளர், இவரின் உடன்பிறந்தாள் உரூத்து என்பாரும் இருக்கின்றார். இவரின் மூத்த உடன்பிறந்தார் கெருற்றூடு இள வயதில் இறந்துவிட்டார். இவருடைய குடும்பம் யூத மதத்தினர்.[6] தந்தை இசடோர் ஒடெசாவில் (அன்றைய உருசியப் பேரரசு, இன்றைய உக்ரைனில்) இருந்து, தனது 18-வது அகவையில் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார்.[7] தாயார் அன்னா உக்ரைனில் இருந்து குடிபெயர்ந்தவர் ஆவார்.[8][9][10][11]
கல்வி
[தொகு]ஆர்தர் ஆசுக்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்தார், அதே நேரத்திலப்பல்கலைக்கழகத்தின் கதிர்வீச்சு செய்களச்சாலையில் தொழினுட்ப உதவியாளராகவும் இருந்தார். இப்பொறுப்பில் இருந்தபொழுது அமெரிக்கப் படைத்துறைக்கான இரேடார் என்னும் தொலைபொருளுணர்விக் கருவிக்கான நுண்ணலை தோற்றிவிக்கும் காந்தக் கருவியைச் செய்யப் பணித்தார்கள். இவர் பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்காக இருந்தாலும், இப்பொறுப்பு இவருக்கு வழங்கப்பெற்றது. இவ்வாய்ப்பின் பயனாக மூன்று நோபல் பரிசாளர்களை அவர் சந்திக்க நேர்ந்தது.[1][12]
இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படிப்பு முடிந்த பிறகு, கார்ணெல் பல்கலைக்கழகத்தில் மேற்பட்டப் படிப்பு படிக்கச் சென்றார். அங்கே அணுக்கருவியியல் துறையில் படித்தார். அக்காலத்தில் மான்ஃகாட்டன் திட்டம் என்னும் அணு ஆயுதத் திட்டத்திற்கான பணிகள் நடந்து வந்தன. அதில் இவருடைய உடன்பிறந்தார் சூலியசு ஆழ்சுகின் பங்களிப்பவராக இருந்தார். இத்தொடர்பால் ஆர்தர் ஆழ்சுகினுக்கு நோபல் பரிசாளர் ஃகன்சு பெத்து (Hans Bethe) அவர்களுடனும் இரிச்சர்டு ஃபெயின்மன் (Richard Feynman) அவர்களுடனும் இன்னும் கார்ணெல் பல்கலைக்கழகத்துக்கு வருவோரிடமும் தொடர்பு ஏற்பட்டது.[1][12]
இவர் கார்ணெல் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப் பட்டம் பெற்றபின்னர் பெல் செய்களச்சாலையில் இவருடைய நெறியாளராக இருந்த சிட்னி மில்மன் அவர்களின் பரிந்துரையின் பேரில் பணிக்குச் சென்றார்.
பணி
[தொகு]பெல் செய்களச்சாலையில் 1960 முதல் 1961 வரை நுண்ணலைத் துறையில் பணி புரிந்தார். அதன் பின் சீரொளித் திறையில் ஆய்வை மேற்கொண்டார். இவர் ஒளிநார், நேர்சார்பிலா ஒளியியல், பராமெற்றிக்கு அலைவி, பராமெற்றிக்கு மிகைப்பி ஆகிய துறைகளில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். பெல் செய்களச்சாலையில் இருந்தபொழுது தகைவுமின்விளைவுப் படிகம் (piezoelectric crystal), ஒளிமுறிவு விளைவு ஆகிய துறைகளிலும் புது கண்டுபிடிப்புகள் செய்தார்.[1][12]
ஆஅழ்சுகினின் பணியானது 1997 ஆம் ஆண்டு இயற்பியல் நோபல் பரிசு பெற்ற இசுட்டீவன் சூ அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கும் அடிப்படையாக அமைந்தது. சூவின் ஆய்வில் சீரொளியால் அணுக்களைக் குளிர்விப்பதும் சிக்கவைப்பதும் முக்கிய பங்கு வகித்தன.[1][2]
இவர் ஒளியியல் குமுகத்தின் சிறப்பாளராகவும், அமெரிக்க இயற்பியல் குமுகத்தின் சிறப்பாளராகவும் , ஐ.இ.இ.இ நிறுவனத்தின் சிறப்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 47 புதுக்கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமம் பெற்றுள்ளார். 2003 ஆம் ஆண்டு யோசப்பு கீத்திலி விருதும், 2004 இல் ஆர்வி பரிசும் பெற்றார். 1984 இல் அமெரிக்க தேசியப் பொறியியல் அகாதெமியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய அறிவியல் அகாதெமியின் உறுப்பினராகவும் 1996 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Arthur Ashkin (biography)". LaserFest. American Physical Society, Optical Society, SPIE, and the IEEE Photonics Society. Archived from the original on 2019-01-05. பார்க்கப்பட்ட நாள் 2013-08-13. "LaserFest – the 50th anniversary of the first laser"
- ↑ 2.0 2.1 2.2 McGloin, David; Reid, J.P. (February 1, 2010). "Forty Years of Optical Manipulation". Optics and Photonics News (The Optical Society) 21 (3): 20. doi:10.1364/opn.21.3.000020. பன்னாட்டுத் தர தொடர் எண்:1047-6938. http://www.osa-opn.org/Content/ViewFile.aspx?Id=11465.
- ↑ Bjorkholm, John E.(2010). "Talk for the Arthur Ashkin Honorary Symposium: The Man and His Science". {{{booktitle}}}, OSA. DOI:10.1364/fio.2010.stud1.
- ↑ "Arthur Ashkin". The Optical Society. பார்க்கப்பட்ட நாள் 20 November 2013.
- ↑ Former Bell Labs scientist, 96, wins Nobel Prize for laser 'optical tweezers' October 2, 2018
- ↑ "96-year-old Arthur Ashkin wins physics Nobel for laser 'tweezers'". The Times of Israel. October 2, 2018.
- ↑ "How the Ashkin Family Came to America" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2018-10-02.
- ↑ "United States Census, 1930," index and images, FamilySearch (https://familysearch.org/pal:/MM9.1.1/X7X3-3YL : accessed December 23, 2013), Isadore Ashkin, Brooklyn (Districts 1251–1500), Kings, New York, United States; citing enumeration district (ED) 1261, sheet , family 298, NARA microfilm publication.
- ↑ "United States World War I Draft Registration Cards, 1917–1918," index and images, FamilySearch (https://familysearch.org/pal:/MM9.1.1/KXY5-7XY : accessed December 23, 2013), Isadore Ashkin, 1917–1918; citing New York City no 86, New York, United States, NARA microfilm publication M1509, (Washington D.C.: National Archives and Records Administration, n.d); FHL microfilm 001765586.
- ↑ "United States World War II Draft Registration Cards, 1942," index and images, FamilySearch (https://familysearch.org/pal:/MM9.1.1/F3CQ-T4W : accessed December 23, 2013), Isadore Ashkin, 1942.
- ↑ "United States Census, 1920," index and images, FamilySearch (https://familysearch.org/pal:/MM9.1.1/MJRV-1VW : accessed December 23, 2013), Isdor Ashkin, Brooklyn Assembly District 18, Kings, New York, United States; citing sheet , family 342, NARA microfilm publication T625, FHL microfilm 1821173.
- ↑ 12.0 12.1 12.2
Bell Labs - Murray Hill (November 1997). "He Wrote the Book on Atom Trapping". Lucent Technologies 2002. Archived from the original on 2005-04-11. பார்க்கப்பட்ட நாள் 2013-08-13.
Retired Bell Labs scientist Arthur Ashkin discusses his years as a physicist and how he discovered that light could trap atoms -- the discovery that led Steven Chu and two others to the Nobel Prize
வெளி இணைப்புகள்
[தொகு]- Frontiers in Optics 2010. The Optical Society.
- A. Ashkin. Acceleration and Trapping of Particles by Radiation Pressure. Phys. Rev. Lett. 24, 156–159 (1970)
- National Academy of Engineering: Member listing
- National Academy of Sciences: Member listing
- Ashkin's Book on Atom Trapping
- Frederic Ives Medal